குழந்தைகள் தினவிழா வாழ்த்து கவிதை
#மகளெனும்_மகா_சக்தி
பைந்தமிழ் பருகிய கவிதையாய்
தனித்தமிழ் நடையில் சிரிப்பாள்
என் மகள்..!
இன்பங்கள் யாவும் எனைச்சூழ
இளம்பிஞ்சு இதழ்களில் இன்பம்
தருவாள் என் மகள்..!
பெருவலி தந்திடும் பெருந்துயர்
ஆற்றிடும் எனைப் பெற்ற
அன்னையின் உருவம் என் மகள் ..!
தேனூறும் மணம் மிக்க பூவது
மழலையாய் வந்தே மடியினில்
அமர்ந்த முத்தமிழ் என் மகள் ..!
மரணம் வரை சென்ற என் மனதை
தான் சுமந்து மறு முறை பிறப்பித்தவள்
என் மகள் ..!
அறுபது கோடி நிலவுகள் கூடியே
அழகிய தேவதைப் பெண்ணாய்
வந்தவள் என் மகள் ..!
நிசப்தமாய் நித்திரை கொள்ளும்
விழியில் வலிகளைக் கரைத்து
என்னுயிர் கலந்தவள் என் மகள் ..!
வைகையின் தென்றல் போலவே
இதமாக என் இதயம் வருடுபவள்
என் மகள்..!
உளியிட்ட பல்லவன் கலையையும்
உரையிடப்பட்ட பாட்டுடைச்
செய்யுளாய் தளிர் நடை அழகினில்
தருபவள் என் மகள் ..!
ஒளிவட்ட பாதையின் கிரகம்
ஒருக் கோட்டில் நின்றிட வைத்து
ஒளிர்கின்ற சுடரொளி என் மகள் ..!
ஆறறிவு அறிவியல் ஞானமாய்
பிரம்மனின் பெருஞ்சவால் படைப்பாய்
ஆலயமாய் என்னில்லம் வந்து
அவதரித்த அன்னை பராசக்தி
என் மகள் ..!
அகமெங்கும் ஆனந்தம் பொங்கிட
அதிசயப் பெண்ணாய் வந்தவளை
அசராமல் கவி பல படைத்து வாழ்த்துவேன் ..!
காட்சிப்பிழை நேரா காதலுடன்
காலமெல்லாம் என்னுள்ளே
வைத்துக் காப்பேன் ..!
மகள் வெறும் வார்த்தையல்ல
வாழ்வின் மிகப் பெரும் வரம் ..!
அனைத்து குட்டி சுட்டீஸ் க்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் . . !
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment