அன்பு மகள் கவிதை



#மகளெனும்_மகா_சக்தி


பைந்தமிழ் பருகிய கவிதையாய்
தனித்தமிழ் நடையில் சிரிப்பாள்
                  என் மகள் . . !

இன்பங்கள் யாவும் எனைச்சூழ
இளம்பிஞ்சு இதழ்களில் தருவாள்
                   என் மகள் . . !

பெருவலி தந்திடும் பெருந்துயர்
ஆற்றிடும் எனைப் பெற்ற 
அன்னையின் உருவம் என் மகள் . . !

தேனூறும் மணம் மிக்க பூவது
மழலையாய் வந்தே மடியினில் 
படிந்த முத்தமிழ் என் மகள் . . !

மரணம் வரை சென்ற என் மனதை
தான் சுமந்து மறு முறை பிறப்பித்தவள்
                     என் மகள் . . !

அறுபது கோடி நிலவுகள் கூடியே
அழகிய தேவதைப் பெண்ணாய்
வந்தவள் என் மகள் . . !

நிசப்தமாய் நித்திரை கொள்ளும்
விழியில் வலிகளைக் கரைத்து
என்னுயிர் கலந்தவள் என் மகள் . . !

வைகையின் தென்றல் போலவே
இதமாக என் இதயம் வருடுபவள்
                  என் மகள் . . !

உளியிட்ட பல்லவன் கலையையும்
உரையிடப்பட்ட பாட்டுடைச்
செய்யுளாய் தளிர் நடை அழகினில்
          தருபவள் என் மகள் . . !        

ஒளிவட்ட பாதையின் கிரகம்
ஒருக் கோட்டில் நின்றிட வைத்து
ஒளிர்கின்ற சுடரொளி என் மகள் . . !       

ஆறறிவு அறிவியல் ஞானமாய்
பிரம்மனின் பெருஞ்சவால் படைப்பாய்
ஆலயமாய் என்னில்லம் வந்து
அவதரித்த அன்னை பராசக்தி
               என் மகள் . . !

பல்லாயிரம் முனிவனின் தவமாய்
பண்டைய கீழடி தமிழாய்
ஆண்டவனில்லா என்னுள்ள அறையில் ஆழ்மொழிந்த அற்புத உயிராய் . . !

அகமெங்கும் ஆனந்தம் பொங்கிட
அதிசயப் பெண்ணாய் வந்தவளை
அசராமல் கவி பல படைத்து வாழ்த்துவேன் . . !

காட்சிப்பிழை நேரா காதலுடன் 
காலமெல்லாம் என்னுள்ளே
வைத்துக் காப்பேன்  . . !

மகள் வெறும் வார்த்தையல்ல 
வாழ்வின் மிகப் பெரும் வரம் . . !

                  என்றென்றும் நட்புடன்,
                   *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments