வெல்க_தமிழ்-கவிதை-ரேணுகா ஸ்டாலின்


வெல்க_தமிழ்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட மூத்தமொழி 
இன்று மூலை முடுக்கெல்லாம் 
பலரின் முகவரியான மொழி
எதுகை-மோனையுடன் 
ஏற்றம் பெற்று 
இலக்கண-இலக்கிய வளம் 
பல பெற்று சீர்மையோடு
உயர்ந்து நிற்கும் 
மொழிகளின் தாய்மொழி  
நம் தமிழ் மொழி . . !

கற்போர் உள்ளத்தில்
இன்பத்தைக் கூட்டியே
சொற்போர் புரிந்திடும்
இன்பியல் மொழி 
ஆழ்மன உணரச்சியை
அழகிய சொற்களால்
எடுப்பாக எடுத்தியம்பி
மயக்கிடும் அதிசயம்
நம் தமிழ் மொழி . . !

கம்பனோடு வள்ளுவனையும்,
கடையேழு வள்ளல்களையும்,
கட்டியிழுத்து கவர்ந்த மொழி
காப்பியங்கள், காவியங்களில்
 கரைபுரண்டு ஓடும் மொழி
நம் தமிழ் மொழி . . !

பலமொழிகள் பயின்று 
பலகலைகள் கற்றாலும்
மறக்குல மாண்புடன்
நாற்றிசையும் நறுமணம் 
பரப்பி அமிழ்தென 
ஆர்ப்பரிப்பது எழுவதும்
நம் தமிழ் மொழி  . . !

காதலின் மென்மையும்
வீரத்தின் மேன்மையும்
தமிழர் வாழ்வினில்
தடம்பிறழாமல் தனிமுத்திரை
பதித்ததை அறிந்திட உதவிடும் 
அழகிய மொழி நம் தமிழ் மொழி . . !

இயல் , இசை , நாடகத்தோடு
சிற்பம் , ஓவியம் பலவாக
சீர்மையோடு சிறந்து
விளங்கும் மொழி
குடவரைக் கோவில்கள்,
கருவறைச் சிற்பங்கள், 
அகழ்வாராய்ச்சி சான்றுகள்,
ஆதாரக் கல்வெட்டுகளென
அனைத்திலும் முத்திரை 
பதித்த பெருமை மிக்கது 
நம் தமிழ் மொழி . . !

ஆண்டுகள் ஆயிரமாயிரம்
கடந்தாலும் வற்றாது 
ஓங்கி உயர்ந்து
முப்பாலும் பருகத் தந்த
திருவள்ளுவர் ஈந்த
திருக்குறள் ஒன்றே போதுமே
நம் தண்டமிழின் தரமறிவே . . !

விவசாயம் முதல்
விஞ்ஞானம் வரை
எதிலும் எல்லையில்லா
வெற்றிக்கொடி நாட்டி 
அன்னைத் தமிழை
அரியணை ஏற்றி 
தனிப் பெருமையோடு
தமிழ்க்கொடி 
பறக்கச் செய்வோம் . . !
மீண்டும் புது விதி செய்து 
புதுமைகள் படைக்க
மிளிரெட்டும் தமிழ் மொழி . . !
வாழ்க தமிழ் . . !
வளர்க தமிழ் . . !
தமிழை நேசிப்போம்
தமிழையே சுவாசிப்போம் . . !



0/Post a Comment/Comments