கொல்லத்_துடிக்குது_மனசு
#பகுதி_2
அடியே சக்தி வாடிம்மா என் தம்பி
இல்ல இல்ல,
உன் அத்தான் சத்யா லைன்ல இருக்கான் என சரோஜா அழைக்க துள்ளியோடும் மான் குட்டியாய் ஓடி வந்தாள் சக்தி.
சக்தி சத்யாவின் அத்தை மகள், சிறுவயது முதலே சத்யாவின் மேல் தீராக்காதல் கொண்டவள்.
ஆனால் சத்யாவிற்கோ சக்தியின் மீது அன்பு உண்டே தவிர காதல் கொள்ளும் அளவிற்கு பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை.
அதனாலேயே +2 முடித்தவுடன் சென்னையில் இன்ஜினியரிங் படித்து, அங்கேயே பெரிய கம்பெனியில் வேலையிலும் சேர்ந்து விட்டான்.
எப்பொழுது ஃபோன் செய்தாலும் அம்மா மனம் புண்படக்கூடாது என்பதற்காகவே சக்தியைப் பற்றியும் ஓரிரு வரிகள் விசாரித்திருப்பான், அதற்காகத்தான் சக்தியின் இந்தத் துள்ளாட்டம்.
ஒவ்வொருவராக பேச கடைசியில் பேசிய சச்சிதானந்தம் தன் மனைவியிடம் வாஞ்சையுடன் சிரித்துக் கொண்டே கூறினார்,
உம்புள்ள இந்த தடவ ஊருக்கு வரும்போது கல்யாணம் பத்தி பேசனும்னு சொல்றாண்டி என்றார்.
அதைக் கேட்டதுதான் தாமதம் முகமெங்கும் நாணத்தில் கோவைப்பழமாய் சிவந்திருக்க,
மடை திறந்த வெள்ளமென மனமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோட மயக்கத்தில் கிறங்கி நின்றாள் சக்தி.
தொலைபேசி இணைப்பில் இருந்த சத்யா சரிப்பா நான் வச்சிடறேன் எனக் கூற,
இருடா சக்தி கிட்ட செத்த பேசிட்டு வை எனக் கூறி சக்தியை அழைத்தார்.
தன்னிலை மறந்தவளாய் மாமனுடன் கைகோர்த்து மாயா லோகத்தில் மிதந்தபடி கண்மூடி நின்றவளை,
தாய்மாமன் சச்சிதானந்தத்தின் குரல் நிஜ உலகிற்கு கொண்டு வரவே என்னங்க மாமா என்றாள்.
இந்தாம்மா மருமகளே பிடி உன் அத்தான் கிட்ட பேசும்மா என ரிசீவரை கையில் கொடுக்க,
"முக நரம்புகள் எல்லாம் வெட்கப்பூ பூத்திருக்க ரிசீவரை கையில் வாங்கியவள் சத்யா அத்தான் எப்படி இருக்கறீங்க, எப்ப வருவீங்க என கேள்விக் கணைகளை அடுக்கினாள்".
ஏதோ கடமைக்கு பேசுவது போல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டு வைத்தான் சத்யா.
ஏன்டிமா சக்தி உன் அத்தான் சத்யா எப்ப வரானாம் எனக் கேட்ட சரோஜாவிடம்,
அடுத்த வாரம் கம்பெனி வேலை விசயமா பாளையங்கோட்டை வரும் போது அப்படியே இங்க வருவாங்களாம் எனக் கூறியவள் வெட்கம் தாளாமல் ஓடோடி அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
அன்றைய இரவு கனவுகளோடும், கற்பனைகளோடும் கரைந்தோடியது.
ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கடந்து போக சத்யா வரும் நாளுக்காய் காத்திருந்தாள் சக்தி.
சத்யா வருவதாகச் சொல்லியிருந்த நாள் 10..., 11..., 12... என நேரத்தை விழுங்கி மாலை 5 மணியைக் கடந்திருந்தது.
தொலைபேசி அழைப்பொலி கேட்டு ஓடோடி வந்த சக்தி,
ரிசீவரை எடுத்துப் பேசிய மாமாவிடம் சத்யா என்ன சொல்லியிருப்பான் என மாமா சொல்லக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிட மௌனங்களுக்குப் பின்,
சச்சிதானந்தம் அமைதி காக்கவே
மாமா அத்தான் என்ன சொல்லுச்சு, எப்ப வருதாம் என அவளே கேட்டாள்.
தொடரும்,
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment