மாற்றாதே..ஏமாற்றாதே.. (சிறுகதை)

 மாற்றாதே... ஏமாற்றாதே...

               (சிறுகதை)

வேலு.... அந்த புதுசா நேத்து வந்து இறங்குன கூலர்-ல இருந்து ஒரு பீஸ் கொண்டு வா... என்று தனது உதவியாளனுக்கு கட்டளை இட்டுவிட்டு... உக்காரு தம்பி என்று கூலர் வாங்க வந்த பையனை அமரச்சொன்னான் சிவா.. 

சிவா அந்த கூலர் கம்பெனியில் சேர்ந்து ஆறு மாசம் ஆகியிருந்தது.. தனது உழைப்பாலும் விற்பனைத் திறனாலும் நேர்மையாலும் முதலாளியின் நம்பிக்கையை ஏராளமாய் பெற்று இருந்தான்... 

வேலு ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்து வந்து.. திறந்து உள்ளே இருந்த புத்தம் புதிய கூலரை பையனுக்கு காட்டினான்... அப்போது பையனுக்கு செல்போனில் ஏதோ அழைப்பு வந்தது... பேசிவிட்டு செல்லை அணைத்து பாக்கெட்டில் போட்டு விட்டு..

சார்.. எங்க பாஸ் அவசரமா வரச்சொல்றார்.. பில் போடுங்க.. நான் போகணும்.. பே பண்ணிட்டு கூலரை கொண்டு போயிடுறேன்.. கொஞ்சம் என்னோட பைக்கில் வெச்சு கட்டித் தந்தா கொண்டு போயிடுறேன்... அவசரமா போகணும்.. என்றான் சிவாவிடம்...

கம்ப்யூட்டரில் இன்வாய்ஸ் டைப் செய்து ஒரு கவரில் போட்டு பையனிடம் நீட்டினான் சிவா.. 9500 ரூபாய் என்றான்..

 வாங்கவந்த பையன்... பணம் தரும்போது தவறுதலாக 500 ரூபாய் அதிகம் தந்துவிட்டான்.. 9500 ரூபாய் தருவதற்கு பதில் 10,000 ரூபாய் தந்துவிட்டான்.. அவனோ அந்த மிஷனையே பார்த்துக் கொண்டிருந்தான்.. 

பணத்தை எண்ணிப்பார்த்த சிவா.. 500 ரூபாய் அதிகம் இருப்பதை உணர்ந்து கொண்டான்.. தம்பி.. 500 அதிகமா இருக்கு.. இந்தா.. என்று திருப்பித் தந்தான்... மகிழ்ச்சியோடு வாங்கி நன்றி சொல்லிவிட்டு கூலரை இழுத்துச்சென்றான் அந்த பையன்.. 

மாலை ஒரு குவாட்டர் வாங்க டாஸ்மாக் சென்றான் சிவா.. உதவியாளன் வேலுவும் கூடவே வந்திருந்தான்....கடையில் குடிமகன்களின் கூட்டம்...180 ரூபாய் குவாட்டர்... 

500 ரூபாய் தாள் ஒன்றை நீட்டி 180-ல ஒரு குவாட்டர் என்றான்.. 

கடையில் இருந்தவர் என்ன நினைவில் இருந்தாரோ தெரியவில்லை.. 320 ரூபாய் தருவதற்கு பதில் 500 ரூபாய் அதிகமாக 820 ரூபாய் தந்துவிட்டார்.. 

பேசாமல் வாங்கி பாக்கெட்டில் வைத்து வண்டியை கிளப்பினான் சிவா....இந்த இரு நிகழ்விலும் சிவா உடனேயே  இருந்த உதவியாளன் வேலு  ".. சார்.. காலையிலே உங்க கிட்டே இருந்த நேர்மை என்னாச்சு..?.." என்றான்.. 

சிவா புன்னகைத்தவாறே..காலையில் வந்த பையன் உன்னை மாதிரி ஏழை.. அவனுக்கு 500 ரூபாய் பெரிய விஷயம்... ஆனால் இந்தக் கடையில் நமக்கு காசு அதிகமா தந்தவர் போட்டிருந்த நகைகளை பார்த்தாயா..? மொத்தம் சுமார் 3 லட்சம் தேறும்.. இவன ஏமாத்தினா தப்பே இல்லை..." என்றான் ..

உடனே மகிழ்ந்த உதவியாளன் வேலு .. அப்போ 

நாளைக்கு இந்த 500 ரூபாயில் பிரியாணி.. தண்ணின்னு தூள் கிளப்பிடலாம்... என்றான்.. 

அடிச்சு பல் எல்லாம் பேத்துடுவேன்... நாம ஒவ்வொரு மாசமும் சம்பளம் கிடைச்சவுடனே ஆளுக்கு 100 ரூபா போட்டு நிர்மான் அனாதை இல்லத்துக்கு எவ்வளோ ரூபா கொடுப்போம்.. என்று கேட்டான் சிவா..

2000 ரூபா சார்... 

அடுத்த மாசம் இந்த 500 ரூபா சேர்த்து 2500 ரூபாய் கொடுக்கப் போறோம்.. என்ற சிவாவை  ஒரு மாதிரி பார்த்தான் உதவியாளன் வேலு...

ஏமாறத் தகுதி தேவையில்லை... ஏமாற்றப்படத் தான் தகுதி தேவை...

               எண்ணமும் எழுத்தும்

                தமிழ் உணர்வாளன்

0/Post a Comment/Comments