தாலாட்டும் நினைவுகள் கவிதை

தாலாட்டும் நினைவுகள்

 


காலத்தின் கரங்களில்

தவழ்ந்திடும் மழலையாய் ..!

புவிதனில் உதித்திட்ட

உன்னதமே இம்மானிடப்பிறவி ..!

கண்ணீரில் பிறந்து

கண்ணீரிலேயே முடிவுறும் ..!

கலிகால இம்மானிடப்

பிறவியிலே ..!

சதா"ரண"ப்பட்ட மனதிற்கும்

சாதாரணமாய் ஆற்றுப்படுத்தி

மீட்டெடுக்கும் அற்புதம்

நல் நினைவுகளே ..!

புயலென வந்திட்ட

துன்பங்களை துடைத்தெரிந்து

பூந்தென்றலாய் நம்மைத்

தீண்டி மகிழ்வித்திடும் மாயம்

நல் நினைவுகளே ..!

வற்றிப்போன விழிகளிலும்

சட்டென நீர்சுரக்கச் செய்து

ஆனந்தமாய் கசியச்செய்திடும் 

நல் நினைவுகளே ..!

கானலான பலர் வாழ்வின்

கார்கால சாரலாகி

கவலை அழித்திடும் கண்ணியம்

நல் நினைவுகளே ..!

நரகமான வாழ்வதனை

நொடிப் பொழுதில் சொர்க்கமாக்கி

சோகம் களைந்து சுகம் கூட்டிடும்

நல் நினைவுகளே ..!

நிழலாகப் பின் தொடர்ந்து

மெல்ல மெல்ல மறைந்து போன

இன்ப நொடிகள் யாவையும்

நம்கரம் சேர்த்து நிஜமாக்கி 

நிம்மதியாய் உறங்க தாலாட்டிடும்

நல் நினைவுகளே ..!

நேற்றைய கவலைகள்

இன்றைய இன்பமாகும்

இன்றைய இன்பங்கள்

நாளை என்னவாகுமோ ..!!!

என்பதனை நாமுணர்ந்து

நாளைய விடியலின்

நல் மகிழ்விற்காய் ..!

மனமெனும் கோவிலிலே

குப்பையென மண்டிக் கிடக்கும்

கோபம், குரோதம், துரோகமென

அத்தனையும் களைந்தெடுத்து ..!

தூய அன்பையும் , மனித 

நேயத்தையும், சகோதரத்துவத்தையும்

அள்ளி அள்ளி விதைத்திடுவோம் 

ஜென்மங்கள் பல கடந்தும்

ஜெகத்தினில் நிலைத்திடுமே ..!

தாலாட்டும் நினைவுகளே ..!

            *ரேணுகா ஸ்டாலின்*


0/Post a Comment/Comments