தாய்மை போற்றுவோம்
#சிறுகதை
அதிகாலைச் சூரியன் மெல்ல மெல்ல தன் வருகையை பதிவு செய்து கொண்டிருந்தான்.
சஞ்சனாவின் வீட்டில் மீண்டும் அதே சச்சரவு ஆரம்பமானது.
"எதோ இன்டர்வியூக்கு தானே போற வேலை கொடச்சா பார்த்துக்கலாம்னு நெனச்சேன்".
"இப்போ என்னடான்னா வேலைக்குப் போவேன்னு அடம்பிடிக்கறயே இதைல்லாம் நல்லாவா இருக்கு சஞ்சனா".
"நீ வேலைக்கு போய் தான் நம்ம கஞ்சி குடிக்கணும்னு அவசியமில்ல சொன்னாக்கேளுடி வேலைக்குலாம் போக வேணான்டி" என்று தன் சண்டையை தொடங்கினான் சத்யா.
அதுவரை அவன் பேசியவைகளை செவிமடுத்துக் கொண்டிருந்த சஞ்சனா "சாரி சத்யா நான் வேலைக்கு போறது போறதுதான் என்றாள் தீர்க்கமாக".
அவளது பதிலைக் கேட்டு கோபமான சத்யா சொன்னா புரியாதாடி உனக்கு சரி நீ வேலைக்கு போனா குழந்தைய யார்டி பார்த்துக்கறது.
"சக்தி குட்டி பொறந்து இன்னும் ஆறு மாசம் கூட முழுசா ஆகலயே என்றான்".
"அதெல்லாம் நான் யோசிக்காமலா இருப்பேன் குழந்தைய பார்த்துக்க ஆள் ரெடி என்றாள்".
அவள் சொல்வதைக் கேட்டு ஏதும் புரியாதவனாய் அவளை ஏறிட்டான்.
என்ன சத்யா எதுவுமே புரியாத மாதிரியே முழிக்கற அதான் உன் அத்தை பொண்ணு சாரதா வெட்டியா தானே இருக்கறா கொஞ்ச நாளைக்கு அவள பார்த்துக்க சொல்லலாம் என்றாள்.
நீண்ட யோசனைக்குப் பின் சத்யா பேசத் தொடங்கினான் "அப்பா கிட்ட சொல்லாம சாரதாவ எப்டிடி நம்ம குழந்தைய பார்த்துக்க சொல்றது".
"சும்மாவே தங்கச்சி மகள ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டாரு. பத்தாததுக்கு
அவ கைப்பிள்ளையோட புருசன இழந்து தவிக்கறா கேட்டா என்ன சொல்லுவாரே தெரியலயே" என்று உதட்டைப் பிதுக்கினான்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது சத்யா, மாமா கிட்ட பேசி சாரதாவ நம்ம குழந்தைய பார்த்துக்க வரச் சொல்றது உன் பொறுப்பு.
"அடுத்த வாரத்தில இருந்து நான் வேலைக்கு போறேன் அவ்ளோ தான்" என்று கூறிவிட்டு தன் வேலைகளை பார்க்கச் சென்றாள்.
--------------------
சஞ்சனா சொல்லியது போலவே அப்பாவிடம் பேசி சராதாவை குழந்தைய பார்த்துக்க வைக்க படாத பாடுபட்டு சம்மதத்தைப் பெற்றான் சத்யா.
அரக்க பறக்க வேலைக்கு கிளம்பவும் அவசரமாக செல்லவும்தான் நேரமிருந்தது இருவருக்கும்.
குழந்தையை பார்த்துக் கொள்வதோடு மற்ற வீட்டு வேலைகளையும் சாரதாவே பார்த்துக் கொண்டாள்.
இப்படியே ஓரிரு மாதங்கள் சென்றது.
அன்றைய நாள் காலையிலேயே கிளம்பி தன் பள்ளி இன்ஸ்பெக்சன் என்று சஞ்சனாவும் , கம்பெனி ஆடிட்டிங் என்று சத்யாவும் கிளம்பி சென்று விட்டனர்.
குழந்தைக்கு ஒன்பதாம் மாத தடுப்பூசி போட வேண்டும் என்பதால் சக்தியை ஊசி போட தூக்கி சென்று வந்தாள் சாரதா.
வந்ததிலிருந்து அழுது கொண்டிருந்த சக்தியை மடியில் வைத்துக் கொண்டு டேய் குட்டிமா ஊசி போட்டது வலிக்கதான் செய்யும் அழாதடா உங்க அம்மாவும் அப்பாவும் சீக்கிரமா வந்துடுவாங்க அழாத என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஏறக்குறைய ஓரிரு மாதங்கள் முன்பு பிறந்த சராதாவின் குழந்தை சமத்தாக தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.
எவ்வளவோ சமாதானப்படுத்தியும் சக்தி அழுகையை நிறுத்துவதாக இல்லை.
பல யோசனைகளுக்குப் பின் தன் மார்போடு அணைத்து பாலூட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த முடிவெடுத்தது தாயுள்ளம்.
அதைச் செயல்படுத்தியதும் குழந்தை பால் குடித்துக் கொண்டே அழுகையை நிறுத்தியது.
ஊசி போட்டாச்சா, சக்தி தூங்கிட்டாளா, என்ன பண்றா என கேட்டுக் கொண்டே உள் நுழைந்த சஞ்சனா சராதாவின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்த சக்தியை பார்த்ததும் கொண்டு வந்த கேண்ட்பேக் குடை அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டு குழந்தையை சாரதாவிடம் இருந்து பிடிங்கினாள்.
அதன் பின் சாரதாவை கைகளைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து அவள் சொல்வது எதையும் கேட்காமல் அடித்து வெளியில் தள்ளினாள்.
கண்களில் நீர் தளும்ப தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தெருவில் நடக்கலானாள் சாரதா.
அவர்கள் வீட்டின் தெருமுனையில் சாரதா நடக்க கூட வழியில்லாம் கூட்டம் நிறைந்திருந்தது.
கண்களை துடைத்துக் கொண்டு கூட்டத்தோடு ஓர் ஆளாக என்னவென்று பார்த்தாள்.
அங்கே குட்டி போட்ட நாய் ஒன்று வழிதவறி வந்த குரங்கு குட்டிக்கு பால் கொடுத்து அரவணைத்து வைத்திருந்தது. அதைத்தான் ஊரே கூடி இரசித்து தாய்மையின் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.
மனம் கணக்க சஞ்சனாவை திரும்பி பார்த்தாள் அவள் கையிலிருந்த சக்தி பாப்பா முதல் முறையாக ம்மா ம்மா என்று அழைத்து சாரதாவை நோக்கி கைகளை நீட்டி சிரித்தது.
அந்தப் பச்சிளங் குழந்தையின் நேசம் கண்டு நெகிழ்ந்து கொண்டே தன் மாமா வீடு நோக்கி பயணமானாள் சாரதா.
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment