மரண முடிச்சு.. (சிறுகதை)
தமிழில் அவ்வளவாக ஒன்றும் பெரிதாக ஆர்வமில்லை புகழேந்திக்கு . . .
ஏதோ சில கவிதைகள் கிறுக்குவான் . . . அவ்வப்போது சிறுகதைகள் எழுதுவான் .
பத்தாவது வகுப்பு படிக்கிறான் என்றாலும் படிப்பில் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை . . .
ஏதோ எல்லா பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் . . .
வகுப்புக்கள் தொடங்குவதற்கான மணி அடிக்கப்பட்டது . . .
உலக நடப்புக்கள்,
நேற்று பார்த்த சினிமாவின் கதை பேசுபவர்கள்,
அடுத்த வரிசையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நமது கதாநாயகி கவிதா எல்லாரும் சற்று அமைதியாகினர் . . .
முதல் வகுப்பே தமிழ் என்பதால் அந்த இளம்பருவ பெண் தமிழ் ஆசிரியை கனிவிழி உள்ளே வந்தார் . . .
பொதுவாக எல்லாரும் வணக்கம் சொல்ல,
ஹ்ம்
வணக்கம் என்கிறார் அந்த ஆசிரியை கனிவிழி.
சிலநொடி மௌனத்திற்குப்பின்
பாடத்தை ஆரம்பிக்கலாமா..?
நேற்று நாம பார்த்தது என்னென்னா!!?
என்று கனிமொழி வினவ
"....மரணம் பற்றிய கவிதை பார்த்தோம்..." அம்மா என்றனர் கோரசாக.
மரணம் வரவும்
மச்சம் வேண்டும் . . .
மகிழ்ந்து அதனை
வரவேற்கவும் வேண்டும் . . .
அறியாத ஒன்றை
அறியத் துடிக்கும்
ஆர்வமாய் அது நம்
ஆழ் மனதில் பதிய வேண்டும் . . .
நடந்ததென்ன என்று
எடுத்து இயம்ப
மாண்டவன் இங்கே
மீண்டு வருவதில்லை . . .
அதை ஏட்டில் கற்று
எளிதாய் உணர்ந்து கொள்ள
சமையல் கலையுமில்லை . . .
எல்லாம் உதறி
எதுவுமில்லாமல்
ஒன்றுமில்லாததோடு
ஒன்றிக் கலப்பதே மரணம் . . .
முடித்துவிட்டு எதேச்சையாக புகழேந்தியின் பக்கம் பார்த்தார் கனிவிழி டீச்சர் . . .
புகழேந்தி எதையும் கவனிக்காது
ஏதோ ஒரு காகிதத்தில் என்னவோ கிறுக்கிக் கொண்டு இருந்தான்.
பாடத்தை கவனிக்காம என்ன பண்ற..?
அது . . .
அது . . .
ஒண்ணுமில்ல டீச்சர் என தயங்கினான்.
அவன் தயங்கிய விதம் கனிவிழி டீச்சருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது.
நேராக அவன் இருக்கைக்கு வந்து அந்த தாளை பிடுங்காத குறையாக இழுத்து பிடுங்கி படித்தார்.
படித்துப் பார்த்த கனிவிழி அதிர்ந்து போனாள் .
"மரணத்தோடு யார்க்கு என்ன உறவு முறை . . .
இன்று என்னுடைய முறை என்றால்
நாளை உன்னுடைய முறை . . ."
தி.புகேழ்ந்தி.
பதினைந்து வயது பையனுக்கும் இவ்வளவு தெரியுமா..?
நான் நீளமாக சொன்ன கவிதையின் கருத்தை, இவன் ரெண்டே வரிகளில் தெளிவாக்கி மரணத்துக்கு புது விளக்கமே தந்து விட்டானே என்று யோசித்தாள் . . .
புகழேந்தியை அழைத்தார்,
பயத்துடன் அருகில் வந்த புகழேந்தியிடம் லன்ச் டைம்ல என்னை டீச்சர்ஸ் ரூமிற்கு வந்து பாரு என்றார். . .
மனதில் ஏற்பட்ட சிறு குழப்பத்தோடு சரிங்க டீச்சர் என்று தலையை ஆட்டி வைத்தான் புகழேந்தி . . .
----------
காலை வகுப்புகள் முடிய மதிய இடைவேளையில் கனிவிழியைப் பார்க்க வந்த புகழேந்தியிடம்
நீ நிறைய கவிதை எழுதுவியா..? என்றார் ஆசிரியை.
அப்படியெல்லாம் இல்லை டீச்சர் . . .
பொழுது போகாம ஏதோ நக்கலா எழுதுவேன், வீட்ல நாலு புக் எழுதி வச்சு இருக்கேன் என்றான் . . .
கனிவிழி வியந்து போனாள் . . .
வியப்பு மாறாமலே சரி நாளைக்கு வரும் போது அந்த நாலு புத்கத்தையும் கொண்டு வா, நான் படிச்சு பார்க்கணும் ஏன்னா . . .
அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அநேகமா நாம ரெண்டு பேரும் சிங்கப்பூர் போக வேண்டி இருக்கும் . . . அங்க ஒரு கவியரங்கம் என்றார்.
சிங்கப்பூரா . . ! ! !
என்று வாய் பிளந்து நின்றான் புகழேந்தி
----------
அருணாச்சலம் டென்ஷனில் இருந்தார் . .
இனியும் தாமதம் வேண்டாம் . . .
அந்த கப்பலில் பயணம் செய்த 267 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை, அதனால நம்ம சிங்காநல்லூர் ஸ்கூல் ப்ரோக்ராம் ட்ராப் பண்ணிடுங்க.
அவங்க சொல்லப் போற கவிதைக்கு மற்ற ஸ்கூலுக்கு வாய்ப்பு கொடுத்திடுங்க . . .
ஏன்னா 2 மணி நேரம் டைம் போகணும்ல . . ! ???
அப்படியே செஞ்சுடலாம் சார் . . .
என்ன . . . புகழேந்தி பையனை நெனச்சாதான் பாவமா இருக்கு,
பயங்கர டேலண்ட் . . .
இ-மெயில்ல அவன் எனக்கு அனுப்பி வெச்ச பதினாறு கவிதைகள்ல, ஆறு கவிதை செலக்ட் பண்ண . . . எனக்கு ஆறு பெக் விஸ்கி தேவைப்பட்டது, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான போதை . . .
அதைக் கேட்ட பழனிசாமி சிரித்தான் . . . ஆமா தினமும் ஆறு பெக் அடிக்கலேனா உங்களுக்கு தூக்கம் வராது, பாவம் இன்னைக்கு புகழேந்தி சிக்கிட்டான். அருணாச்சலம் அவனை முறைக்க, பழனிசாமி ரூமை விட்டு வெளியேறினான்.
---------------
கனிவிழி தானாகவே கண் விழித்து பார்த்தாள் . . .
கனிவிழி கண்விழித்துப் பார்த்தபோது மிகவும் சுலபமாகவே புரிந்து கொண்டாள்...
நான் இருப்பது கடற்கரை . . .
கடல் அலைகளால் ஓரங்கட்டப்பட்டேன் . . .
அடுத்த கணமே அவள் கண்கள் புகழேந்தியை தேடியது . . .
இதயம் படபடக்க, நெற்றி ஓரத்தில் வியர்வை துணுக்குகள் மினுத்தது.
புகழேந்தி . . .
புகழேந்தி . . .
எங்கும் மயான அமைதி . . .
கடற்கரை மணல் வேறு காலில் சுட்டு எரித்தது, எந்த ஒரு மனிதர்களோ!! விலங்குகளோ!! இல்லை.
ஒன்று மட்டும் கனிவிழிக்கு நிச்சயமாய் புரிந்தது.
புகழேந்தி நிச்சயமாய் இந்த ஏரியாவில் தான் இருப்பான்.
இருப்பானா அல்லது இருக்குமா என்று தான் புரியவில்லை . . .
எழுந்து நடந்தாள் . . .
நாலா திசைகளிலும் தேடிப் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தாள்.
சிறிது தூரம் செல்லவே,
அங்கே ஒரு புதர் தென்பட்டது, புதரில் இருந்து சல சலவென்று மெதுவாக சப்தம்...
அந்த சப்தம் இப்போது அதிகமாகவே கேட்க ஆரம்பித்தது.
புதரை நோக்கி மெல்ல மெல்ல அடி மேல் அடிவைத்து நடந்தாள்.
அந்த அடர்ந்த புதரை நெருங்கினாள், மெதுவாய் சோகைகளை விலக்கிப் பார்த்தாள் .. அதிர்ச்சியின் உச்சத்தில் தலை சுற்ற .. மயக்கம் அடைந்து மணலில் வீழ்ந்தாள் . . .
. . . . .
. . . . .
. . . . .
. . . . .
"மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்த கனிவிழி கோபத்தின் உச்சிக்கே சென்று .. ". டே.. என்னடா பண்ற..? விடுடா அவனை.. இல்லே.. உன்னை கொன்னே போடுவேன் . . . என்றாள் "
அவன் மலேயா மொழி கலந்த தமிழ் பேசினான் . . .
"அக்கா . . .
சாப்பிட்டி மூணு நாள் ஆகுது . . .
பசி உயிர் போகுது . . .
நீங்க என்னை கொன்னே போட்டாலும், இவனை கொன்னு நான் சாப்பிடாம விட மாட்டேன் . . ." என்றான்
கனிவிழி திகில் அடைந்தாள் . . .
என்ன செய்யலாமென்று யோசித்தாள் . . .
அப்போது புகழேந்தி, அந்த மலேயாக்காரனிடம்,
"..அண்ணா.. நீங்க என்னை கொன்னுடுங்க . . .
தாராளமா சாப்பிடுங்க . . .
அதுக்கும் முன்னாடி டீச்சர் கிட்ட ரெண்டு வார்த்தை பேசணும் . . .
"ப்ளீஸ்"
சரி. . .பேசு . . .
டீச்சர், என்னை பத்தி கவலைப்படாதீங்க. நூறு ரூபா குடுத்து நாம வாங்கற ஹெட் செட்டுக்கு கூட ஆறு மாசம் கியாரண்டி தரான், ஆனா நாம அடுத்த நிமிஷம் உயிரோட இருப்போம்ன்னு எந்த கடவுளும் கியாரண்டி தரல . . .
இப்போ நீங்க இங்கிருந்து தப்பிச்சு எங்கயாவது போயிடுங்க, நீங்க இங்கேயே இருந்தா, இவனோட அடுத்த குறி நீங்காகத்தான் இருக்கும் . . .
அதனால என்னைப் பத்தி கவலைப்படாம கிளம்புங்க.
கப்பல் வந்துட்டு போயிட்டு இருக்கும். யாராவது ஒருத்தர் உதவி செஞ்சு உங்களை கரை ஏற்றுவார், இது நிச்சயம் சீக்கிரமா கிளம்புங்க கடைசியா ஒண்ணே ஒண்ணு ..
". . . மரணத்தோடு யாருக்கு என்ன உறவுமுறை
இன்று என்னுடைய முறை என்றால்
நாளை இவனுடைய முறை . . ."
அந்த மலேயாக்காரனுக்கு இந்த கவிதை புரிந்ததோ இல்லையோ. . .
கனிவிழி டீச்சரின் விழியோரம் கண்ணீர் தளும்பி வழிய ஆரம்பித்து இருந்தது . . .
எண்ணமும் எழுத்தும்,
தமிழ் உணர்வாளன்.

Post a Comment