வலிகளைக்_தாண்டி (சிறுகதை)
அடியே முத்தழகு வேலைகள எல்லாம் முடிச்சிட்டியா, நாளைக்கு சீக்கிரமா வந்திடு நம்ம ஆனந்திக்கு காலேஜ் விடுமுறையாம்.
அவளுக்கு உன்னோட சமையல் னா ரொம்ப பிடிக்குமே, அதனால சீக்கிரமா வந்து அவளுக்கு பிடிச்சத சமைத்து வை.
வரும் போது மறக்காம உன் பொண்ணு சஞ்சனாவையும் கூட்டிட்டு வா சரியா என மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் கலாவதி.
இதை எதையுமே காதில் வாங்காத முத்தழகு பாத்திரம் துலக்கிய கைகளைக் கூட கழுவாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.
"என்னடி யோசிக்கிறவ என்னாச்சு என கலாவதி தோள்களைத் தட்ட சுயம் வந்தவளாய் என்னங்கம்மா என்ன சொன்னீங்க என்றாள் முத்து".
"சரியாப்போச்சுடி,
அதுசரி வாய் ஓயாம பேசறவ இன்னைக்கு நீ சரியில்லையே என்னடி ஆச்சு சொல்லுடி ".
"அது வந்துங்கம்மா... வந்து... அது..."
"என்னடி ஏன் இழுக்குறவ உன்ன என்ன?"
நான் வீட்டு வேலக்காரியாவா பார்க்கறேன், கூடப் பொறந்த பொறப்பா தான பார்க்கிறேன் சொல்லு என்றதும்,
"முத்துவின் கண்கள் குளமாயின, துடைத்துக் கொண்டவள், மூக்கை உறிஞ்சிக் கொண்டே நான் என்னத்தங்கம்மா சொல்லுவேன் இந்த மனுசன் தினமும் குடிச்சுப்புட்டு என்ன பாடாப்படுத்தறான் என்றாள்".
"அடக் கொடுமையே என்னடி சொல்றவ ஏதோ எம்புருஷன் நைட்டுக்கடை போட்டு சம்பாதிக்குது இப்போ பரவாயில்லனு சொன்னியேடி".
"ஆமாங்கம்மா திரும்பவும் அந்த சிருக்கிமவ சவகாசம் இந்த மனுசன விசமாக்கிடுச்சு".
"ராவெல்லாம் குடிச்சுப்புட்டி வந்து ரகல செய்யுது, என் தலையெழுத்து சகிச்சுக்கறேன்,
இதப்பாக்குற என் புள்ள படிப்பு பாழாப் போய்டுமோனுதான் பயமா இருக்கும்மா".
"இத்தன இம்சைக்கு மத்திலயும் புள்ள நல்லா படிச்சு பன்னன்டாப்பு வந்துட்டா பரீட்சை நேரத்துல இந்த மனுசன் இப்டி சதாய்க்கிது அதான் பேஜாராகுது என்றாள்".
"கவலைப்படாதடி முத்து உன் பொண்ணு சமத்துடி அவ இதயெல்லாம் மனசில வச்சு கவலைப்பட்டுகிட்டு இருக்காம வைராக்கியமா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போயி உன்ன ராணியாட்டம் வச்சுப்பா பாரு".
உங்க புண்ணியத்துல அவ படிச்சு நல்லா இருந்தா போதும், நான் வரேன்கம்மா புள்ள தனியா வீட்டில இருக்கும் என்றவாறே கிளம்பினாள்.
நாட்கள் உருண்டோடின சில வருடங்கள் கழித்து.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேடம் அம்மா வந்திருக்காங்க.
ஒகே முரளி ஐ வில் கம் , சிறிது நேரத்தில் மாவட்டத்தையே கட்டியாளும் கலெக்டர் சஞ்சனா தன் தாய் முத்தழகை கட்டியணைத்து மதிய உணவை சாப்பிடத் தொடங்கினாள்.
மகள் சாப்பிடுவதை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முத்தழகின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
கடந்த காலத்தைப் போல வலிகளில் அல்ல மனம்நிறை மகிழ்ச்சியில் வலிகளைக் கடந்து நல்வழி பிறந்த மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
["தடைக்கற்களை படிக்கற்களாக்கும் வித்தையறிந்தால் வலிகளைக் கடந்து வசந்தம் காணலாம்".]
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment