புத்துயிர் புத்தாண்டே
சின்னஞ்சிறு கிருமியாலே
ஈரைந்து மாதங்களாய்
நாம்பட்ட துன்பங்கள்
துயரங்கள் யாவையுமே
தூரமாய்த் துரத்திடவே . . .
வலிநிறை விழிகளூடே
வதைத்தெடுத்து சங்கடங்கள்
சற்றும் நெஞ்சிலின்றி
சரித்திரம் படைத்திடவே . . .
சாமானிய மானிடனும்
சச்சரவு ஏதுமின்றி
சந்தோசம் கொண்டிடவே . . .
தளராத தன்னம்பிக்கை
தைரியம்தனை விதைத்து
நெஞ்சமெங்கும் நிறைத்திடவே . . .
கசப்பான நினைவதனை
மனமதுவும் மறந்திடவே . . .
கைநழுவிச் சென்றவற்றை
கண்ணீரில் கரைத்தபடி
கரம்சேரக் காத்திருக்கும்
வாய்ப்பிற்கு வாசற்கதவை
திறந்து வைத்திடவே . . .
வலிமையோடு வளம்சேர்க்க
மீண்டும் மீண்டெழுந்து
இன்பங்களை மீட்டெடுத்து
நல்ராகம் இசைத்திடுவோம்
புண்பட்ட மனதினை
பண்படுத்தி மகிழ்வை
பதியம் போட்டிடுவோம்
புத்தொளி பரப்பிட
புத்துயிர் கொணரும்
புத்தாண்டை வரவேற்று
வசந்தம் கண்டிடுவோம் . . .
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment