யார் குற்றவாளி (சிறுகதை)


 யார் குற்றவாளி (சிறுகதை)

"ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நண்பனோடு சரக்கு அடித்து கொண்டிருந்தான் ராகுல். அப்பொழுது தனது மோட்டார் வாகனத்தில் இவர்களை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்தான் மாரிமுத்து.. 


"மச்சி.. உங்களை எங்கெல்லாம் தேடுறது? வழக்கமா நாம தண்ணியடிக்கிற எல்லாம் இடத்திலும் தேடிட்டேன்.. ஆனால் எங்கேயும் இல்லை.. உங்களுக்கு விஷயம் தெரியுமா..? என்று கூறியவாறே தனது வண்டியை கூட சரியாக நிறுத்தாமல் கீழே தள்ளிவிட்டு வேகமாக வந்தான் மாரிமுத்து.. 


என்னடா ஆச்சி மாரிமுத்து? வண்டியில் தானே வந்த.?இப்படி வேர்த்து..மூச்சிறைக்க ஓடி வர்ற? என்னடா விஷயம்? சரியா சொல்லு..என்றைக்கும் இல்லாமல் இவ்வளவு பதற்றத்தோட இருக்க..? என்றான் டேவிட்.


இல்லடா... டேவிட்..!ஊருக்குள்ள போலீஸ் வண்டி வந்துருக்காம்.. அதுவும் அந்த 'பிள்ளையார் கோயில் இரண்டாவது தெருவில்' போயிட்டு இருக்குடா மாப்பிள்ளை..! அதனால் தான் ஒரே பதற்றமாகவும்.. பயமாகவும் இருக்குடா..! என்றான் மாரிமுத்து.இதனை கேட்ட டேவிட்டும் சற்று அதிர்ந்தான்.ஆனால் ராகுலோ, எந்தவித படபடப்பும்..சலனம் இன்றி கையிலிருந்த பீர் பாட்டிலை முழுவதுமாக காலி செய்வதிலே குறியாக இருந்தான்.மற்றொரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.!


டேய்.. ராகுல்! என்னடா இவ்வளவு அமைதியா இருக்கே?இவன் சொல்றதை வெச்சி பார்த்தால்..எனக்கே கொஞ்சம் பயமாயிருக்குடா!ஆனால் நீ, ஒன்றுமே தெரியாது போல பீர் குடிச்சிட்டுயிருக்கே?என்றான் டேவிட். ராகுல் அப்பொழுதும் தனது வேலையிலே குறியாக இருந்தான்.. கடைசி மடக்கு பீர் மட்டும் பாட்டிலில் மிச்சமிருந்தது.!


ராகுல், நாங்கள் பயந்து செத்துட்டு இருக்கோம்..! ஊருக்குள்ளே,அதுவும் அந்த பிள்ளையார் கோயில் இரண்டாவது தெருவில் போலீஸ் வண்டி நுழைந்திருக்காம்..! என்னடா ஆச்சி உனக்கு?? என்று ராகுலை பிடித்து உலுக்கினான் டேவிட்.. ராகுலின் கையிலிருந்த கடைசி சொட்டு பீருடன் பாட்டிலும்.. சிகரெட்டும் தூர சென்று விழுந்தது.. ராகுலின் கண்கள் சிதறி சிந்திய கடைசி சொட்டு பீரையும்..புகைந்து கருகி கொண்டிருந்த சிகரெட் துண்டுகளையுமே வெறித்து பார்த்து கொண்டிருந்தன. அப்பொழுது ராகுலின் கைப்பேசி அலறியது.. எதிர்முனையில் அவனது அம்மா அழைப்பில்..


கைப்பேசியினை பார்த்தான் ராகுல்.அழைப்பது அவனின் அம்மா. அமைதியாக எடுத்து பேசினான். 

"ராகுல், நான் அம்மா பேசுறேன்! எங்கேடா இருக்க?சீக்கிரம் வீட்டுக்கு வாப்பா..!என்று கூறினாள் அம்மா..! இவனும்.. 'உம்'என்ற ஒற்றை வார்த்தையால் கைப்பேசியினை அணைத்தான். 


நிலைமை கை மீறி போயிடுச்சின்னு நினைக்கிறேன்.

அதனால் தான் அம்மா கூப்பிடுறாங்க போல..! வாங்க போகலாம் என்றான் ராகுல். 


டேய்.. ராகுல்! என்னடா சொல்ற? அப்பொழுது இனி நம்ம வாழ்க்கை ஜெயில் தானா? எல்லாமே முடிஞ்சி போச்சா..?என்று கதறினர் மாரிமுத்துவும்..

டேவிட்டும்.


டேய்..! அழாதீங்கடா? வந்து வண்டியில் ஏறுங்கள்! என்றான் ராகுல். 


என்னடா...!போலீஸ் வண்டியில் ஏற சொல்றது போலவே சொல்லுற..? என்றான் டேவிட். 

பயப்படாமல் ஏறுங்கள் பார்த்துக்கலாம்.!என்றான் ராகுல்.


வேண்டாம்..! ராகுல்,எங்களுக்கு பயமாயிருக்கு..! நாங்கள் ஊருக்குள்ளே வரவில்லை..இப்படியே எங்கேயாவது ஓடி போயிடுறோம்!இந்த விஷயம் மட்டும் என்னோட குடும்பத்துக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்..! என்று கூறினான்  டேவிட்.


நான் இருக்கேன் இல்ல.. பயப்படாமல் வாங்கடா..!தப்பு செய்யும் பொழுது,மூன்று பேரும் ஒன்றாக தானே செய்தோம்..!இப்போது நீங்கள் மட்டும் தப்பிச்சி ஓடினால் என்ன அர்த்தம்? எதுவும் ஆகாது..! நான் இருக்கேன் வாங்க..!ஊருக்குள்ளே போகலாம்..! என்றான் ராகுல். 


என்னமோ நீ சொல்ற..!ஆனால் இன்னையோட நம்ம சோலி முடிஞ்சதுன்னு மட்டும் தெரியுது. நான் அப்பவே சொன்னேன். வேண்டாமென்று,

நீங்கள் தான் கேட்கவேயில்லை.!

போதை ஏறிடுச்சுன்னா.. நீங்கள் வேற லெவலுக்கு போயிடுறீங்க..? உங்கள் கூடவே சுத்திட்டு இருக்குறதால..  ஏதோ சல்லாபத்தில் உங்களோடு சேர்ந்து நானும் அன்னிக்கு அந்த தப்பை பண்ணிட்டேன்..! ஆனால் அதற்குள் இப்படி ஊரறிய மாட்டிப்போன்னு தெரியாது..!என்று குற்றவாளி தானாகவே தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதை போலவே உளற ஆரம்பித்துவிட்டான் மாரிமுத்து.. 


என்னடா மாரி..! போலீஸ் வந்ததும்.. நீ உத்தமனா மாறி எங்களை மட்டும் கோர்த்து விட பார்க்குறீயா?அன்னிக்கு நீயும் தானே சேர்ந்து எங்க கூட அந்த தப்பை பண்ணினே? இப்போது அழுது என்ன லாபம்.. எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்.. நீங்கள் வாயை மூடிட்டு புலம்பாமல் என்கூட ஊருக்குள்ள வாங்க..! என்றான் ராகுல்.அதற்குள் மீண்டும் கைப்பேசி அழைப்பு.. இந்தமுறை அழைப்பு டேவிட்டுக்கு..! 


அய்யோய்யோ..! போச்சி..! எல்லாமே நாசமா போச்சி..! ஊருக்கே விஷயம் தெரிஞ்சி போச்சி போல..! என்று அழுதான் மாரிமுத்து. 


டேய்..! அவனோட வாயை மூட சொல்லுடா.!இவனே நம்மளை காட்டி கொடுத்திடுவான் போல..! என்று கூறி தனது கைப்பேசியில் பேசினான் டேவிட்.


டேவிட்டு..! எங்கய்யா இருக்கே..? வீட்டுக்கு சீக்கிரம் வாப்பா..?என்று கூறி இவனது பதிலையே எதிர்ப்பார்க்காமல் இணைப்பு துண்டித்தார் டேவிட்டின் தந்தை. 


முதன்முறையாக டேவிட்டுக்கும் பயம் தொற்ற ஆரம்பித்து விட்டது. 


மச்சி..!விஷயம் கொஞ்சம் விபரீதமாக இருக்கும் போல.. யாருக்கும் தெரியாமல் தான் அந்த தவறினை நாம கூட்டாக செய்தோம். எல்லா தடயங்களையும் மொத்தமாக அழிச்சோம். ஆனால் தற்போது ஊருக்குள்ள போலீஸ் வண்டி.. எனக்கே முதன்முறையாக பயமாயிருக்கு மச்சி..!என்றான் டேவிட். 


டேவிட்டும்.. மாரிமுத்துவும் பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். கைகளும்.. கால்களும் நடக்க மறுத்தன.. வியர்த்து போனது.. தொண்டை அடைத்தது. என்னடா பண்றீங்க..? சீக்கிரம் வாங்க போகலாம் என்று அதட்டினான் ராகுல்.


ராகுல்..! நிச்சயம் நாம ஊருக்குள்ளே போய் தான் ஆகனுமா? என்றான் மாரிமுத்து. 


சரி வாங்கடா..! ஆனது ஆகிவிட்டது.! இனியும் மறைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை..!செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க போறோம்.. அவ்வளவு தான்..! என்று கூறி வண்டியை ஒட்டினான் டேவிட். 


அதற்குள்...ஊரே இரணகளமானது..! பிள்ளையார் கோயில், இரண்டாவது தெருவில் ஊரே ஒன்று கூடியது. ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவ குழுவினருடன் நின்று கொண்டிருந்தது. மீடியாக்களும் அதிகளவு அந்த கிராமத்தை முற்றுகையிட்டது.


இப்படி அநியாயமா கொன்னுடாங்களே..? பாவிங்க..! எப்படி தான் மனசு வந்துச்சோ..? இந்த வயசிலே போயிட்டியேம்மா..! என்று பல கதறல் குரல்கள் கேட்டது..! 


அனைத்து மீடியாக்களும் இறந்து போன இளம் பெண்ணின் உருவப்படத்தை போட்டு.. தங்களது டிஆர்பிக்கா நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. 


காவல்துறை தலைமை அதிகாரியினை பார்த்து.. உங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இப்படியொரு கொடூர கொலை சம்பவம்.. அதுவும் பாலியல் வன்புணர்ச்சி மூலம் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டிருக்காங்க..அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..? யார் குற்றவாளி? என்று கேள்விகணைகளை தொடுத்தனர். 


எல்லோரும் கொஞ்சம் அமைதியாயிருங்க..! எனக்கே ரொம்ப வருத்தமாகவும்.. வேதனையாகவும்.. அதே நேரத்தில் வெட்கமாகவும் இருக்கு.. என்னோட காவல்பகுதியில் இப்படியொரு கொடூரகொலை சம்பவம் நடந்ததை எண்ணி வேதனைப்படுகிறேன்.. அந்த பெண் கொல்லப்பட்டு குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு மேலாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த பெண் இரண்டுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்ச்சி மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.. பொண்ணு காணாமல் போனதை அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் அவர்களாகவே தேடியுள்ளார்கள்.. அதற்குள் இப்படியொரு துயர சம்பவம் நடந்துவிட்டது. நிச்சயம் இந்த கொடூர செயலை செய்தவர்களை சட்டம் தண்டிக்காமல் விட்டாலும்.. நான் நிச்சயமாக தண்டிப்பேன்.. ஏனென்றால் நானும் பெண்குழந்தைகளை பெற்ற அப்பா என்பதால்.. கூறுகின்றேன்.. இந்த கொடூர செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நான் தண்டிப்பேன்.. என்று ஆவேசமாக மீடியாக்களிடம் பேசினார் காவல் உயர் அதிகாரி மரியநேசன். 


கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தீபா.. வயசு 22 மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்.. குடும்பத்திற்காக பக்கத்தில் உள்ள காட்டன் மில்லில் வேலை செய்து வந்தாள்.. கடந்த 20-ந்தேதி மாலையிலிருந்து காணவில்லை என்று தேடினார்கள்.. பாவிங்க யாரோ இப்படி அநியாயமா கொன்னு ஆற்றில் புதைச்சி இருக்காங்களே..? பாவிங்க.. என்று ஊர்மக்கள் தங்கள் பங்கிற்கு மீடியாக்களிடம் பேசினர். 


யார் குற்றவாளி?? எப்போது கைது செய்ய போகிறார்கள்? இதுதான் இன்றைய தலைப்பு செய்தி.. 


மூவரும் ஊர் எல்லையை அடைந்தனர்.. ஊரே பிள்ளையார் கோயில் இரண்டாவது தெருவில் கூடியிருந்தனர். நிறைய போலீஸ் வண்டிகளும்.. ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒருபுறமும்..மீடியாக்கள் ஒருபுறமும் வேகமாக இயங்கி கொண்டிருந்து. 


தனது வீட்டின் முன் போலீஸ் வாகனம் நிற்பதை கண்ட ராகுல்.. தன்னை தேடி தான் வந்திருப்பதாக உணர்ந்தான்.. உணர்வற்ற பொம்மைகளாய் மாரிமுத்துவும்..

டேவிட்டும் ராகுலை பின் தொடர்ந்தார்கள். 


ராகுலு..! எங்கடா போயிட்ட..? உனக்கு விஷயம் தெரியுமா..?? நம்ம எதிர்த்த வீட்டு தீபா தெரியுமா? அதான்டா ஒரு இருபது நாளைக்கு முன்னாடி காணாமல் போயிட்டான்னு ஊரெல்லாம் தேடிட்டு இருந்தாங்களே..! அந்த பொண்ணை யாரோ பாவிபசங்க கூட்டா சேர்ந்து கெடுத்து கொன்று ஆற்று மணலில் புதைச்சிட்டாங்களாம்..அதனால் தான் போலீஸ் எல்லாம் வந்துயிருக்கு..! பாவம் நல்ல பொண்ணுப்பா அந்த தீபா.. அநியாயம் கொன்னுட்டாங்களே..! என்று தன்பங்கிற்கு ஆதங்கப்பட்டாள் ராகுலின் அம்மா..! 


ராகுலோ.. பேரதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. அவனுடைய அம்மா அவனை பிடித்து உலுக்கினாள்.. டேய்.. ராகுலு.. என்னடா ஆச்சி..? என்றாள். 


கனநேரத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன்..என்னம்மா சொல்ற? நம்ம எதிர்வீட்டு தீபாவையா?? அய்யோ பாவம்! யாரும்மா இப்படி தைரியமாக கொன்னுயிருப்பாங்க? ச்சே...! பாவம் தீபா..! என்றான் ராகுல்..


அது எனக்கு மட்டும் எப்படிடா தெரியும் லூசு? அதான் போலீஸ் வந்துருக்குல்ல..அவங்க தான் உண்மையான குற்றவாளிகளை 24மணி நேரத்தில் கண்டுப்பிடிக்கிறதா சொல்லியிருங்காங்களே..! பாரக்கலாம் என்றாள். 


மூவருக்கும் இப்பொழுது தான் போன உசிரு திரும்பி வந்தது.. இது வேற கேஸா..?? நான் கூட நாம மூன்று பேரும் சேர்ந்து போன மாதம் எங்கள் பாட்டி வீட்டில் நகையை திருடி சரக்கு அடிச்சோமே..! அதற்கு தான் தெரிஞ்சிபோய் போலீஸ் வந்துருக்கோன்னு பயந்துட்டேன்..! உங்க கூட சேர்ந்து பாழாய் போன இந்த குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சொந்த வீட்டிலேயே திருடி குடிக்குற நிலைமைக்கு வந்துட்டோம்.. இனியும் நான் குடிக்கவே மாட்டேன்.. இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் எப்படியாவது அடகு வைச்ச பாட்டியோட நகையெல்லாம் மீட்டு, அவங்க காசியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வர்றதுக்குள்ள யாருக்கும் தெரியாமல் அங்கேயே வெச்சிடனும்.. என்றான் ராகுல்.. 


டேய்.. ராகுலு..! நான்கூட முதன்முறையாக திருடினதால..அது தான் போலீஸ்க்கு தெரிஞ்சி நம்மள கைது பண்ண வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்.. இனி நானும் குடிக்கவே மாட்டேன்ட்டா..! என்றனர் மாரிமுத்துவும்.. டேவிட்டும்.. 


அதுசரி..! மச்சி பாவம் அந்த தீபா பொண்ணு..! அதை யாருடா இப்படி தைரியமாக கொன்னு புதைச்சியிருப்பானுங்க?பாவம்டா அந்த பொண்ணு..! 


யார் குற்றவாளி..??? 


அதை காவல்துறை நிச்சயம் கண்டுபிடிச்சி.. அவர்களுக்கு சரியான தண்டனையை கொடுக்கும்டா.. என்றான் ராகுல்.. 

யார் குற்றவாளி??? காவல்துறை தேடுகிறது.. 


-நிறைவு


                 -ரெசின்.கா.சசிகுமார்.

0/Post a Comment/Comments