யார் குற்றவாளி(சிறுகதை)
அகிலாவின் கண்களில் கண்ணீர் வடிந்து வெண் படலமாக உப்பு படிந்து இருந்தது. துடைப்பதற்கு கூட மறந்து வாசல் நிலைப்படியில் தலைசாய்த்து சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். தென்றல், இமையவன் எனஆண் ஒன்று பெண் ஒன்று என்று அருமையாக வளர்த்து வாலிப பருவம் வந்தார்கள். அவள் கணவர் சாரதியும் வங்கியில் பணி புரிந்ததால் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை.ஊர் மெச்சும் படி வாழ்ந்தனர். யார் கண் பட்டதோ சிறிது நாட்களாக இமையவன் நடவடிக்கையில் வேறுபாடு தெரிய அவனை கண்காணிக்கத் தொடங்கினாள் அகிலா. இரவு நேரம் கெட்ட நேரத்தில் வருவதும், எந்த நேரமும் வீட்டில் பணம் குறைவதும் சந்தேகத்தை ஏற்படுத்தின. தோளுக்கும் மேல் வளர்ந்தவன் தோழன் என்று அவனிடம் அவன் தந்தையும் நண்பனாகவே பழகினார். அவள் மெதுவாக சாரதியிடம் சொன்னாள். பரிவாக கவலைப்படாதே நான் அவனை கண்காணிக்கிறேன் என்று கூறி அவனிடம் பேசிப் பார்த்தார். அவன் ஒன்றும் இல்லை அப்பா நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன் என்று கூறிட, அப்படியானால் இது என்ன என்று புத்தகத்தின் உள்ளே வைத்து மறைத்து வைத்திருந்த போதை மருந்து பாக்கெட்டை எடுத்துக்காட்டினார். கையும் களவுமாக மாட்டிக் கொண்டதினால் குற்றவாளியாய் தலை குனிந்து நின்றான். ஏன் இவ்வாறு செய்தாய் உனக்கு என்ன குறை வைத்தோம் என்று கேட்டிட பதில் சொல்லாமல் நின்றான். அவன் படிக்கும் கல்லூரியில் விசாரிக்க இவனும் இன்னும் சில நண்பர்களும் ஆக சேர்ந்து இப்பழக்கத்திற்கு அடிமையானது தெரிந்தது. இதில் யார் குற்றவாளி என்று தெரியாமல் அகிலாவை சாரதியும், சாரதியை அகிலாவும் மாற்றி மாற்றி திட்டிக் கொண்டனர். நாம் இருவருமே மகன் கேட்கும்பொழுது என்ன என்று கேட்காமல் ஒருவருக்கொருவர் அறியாமல் மாறி மாறி பணத்தைக் கொடுத்ததன் விளைவே இமையவன் கெடுவதற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டனர். காலையில் அப்பா மகன் இருவரும் சாப்பிடாமல் வெளியே சென்று வீடு திரும்பாமல் இருந்திட அகிலா அழுதுகொண்டே வாசல்படியில் சாய்ந்திருந்தாள். இரவு பத்து மணி ஆகும் போது இருவரும் வந்தனர். இமையவன் தன்னை மன்னிக்கும்படி தன் தாயின் மடியில் சாய்தான். சிறு பிள்ளை போல் தேம்பி அழுதான். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா நான் இது போல் தவறு இனி செய்ய மாட்டேன். வீட்டில் பணமும் திருட மாட்டேன் என்று கூறி திருந்திய மனதுடன் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். அளவுக்கு மீறிய பணமும் குழந்தைகளுக்கு தீய வழியை ஏற்படுத்தும்.
பாண்டிச்செல்வி கருப்பசாமி
Post a Comment