இலக்கை_நோக்கி
(சிறுகதை)
"அதிகாலை நான்குமணி அப்பாவின் தொடர் இருமல் சத்தங்கேட்டு, திடுக்கிட்டுயெழுந்தான் மாதவன். அச்சச்சோ..!இன்னிக்கு அசந்து தூங்கிட்டேன்போல..! சீக்கிரம் வயலுக்கு போகனுமே! என்று அவசரமாக எழுந்து தோட்டத்திற்கு புறப்பட்டான்.
"மாதவா..! இந்த மார்கழி பனியிலே,ஏம்ப்பா இவ்வளவு சீக்கிரம் வயலுக்கு போற?கொஞ்சந்நேரம் தூங்குப்பா! பொழுது விடியட்டும்!
இராத்திரியே நேரங்கடந்து வந்து படுத்த.. சரியா சாப்பிடகூடயில்லை..!என்றார் மாதவனின் அம்மா பார்வதி. எல்லாம் பாழாய்ப்போன இந்த பக்கவாதத்தால் வந்தது.!
நாலுயெழுத்து பட்டணத்தில் படிச்சப்புள்ள! இப்படி இந்தகாட்டில் கிடந்து கஷ்டப்படுறான்! என்று தனது ஆதங்கத்தை பகிர்ந்தார் தந்தை தணிகாசலம். அப்பா! அம்மா! நீங்கள் நினைக்குறமாதிரி.. எனக்கொன்றுமிதில் வருத்தமில்லை! இந்த நாலுயெழுத்து படிப்பு,பட்டணத்து வாழ்க்கை, இதெல்லாம் நேற்று வரைக்கும் தடையில்லாமல் எனக்கு கிடைச்சதுக்கு காரணம் நீங்களும், இந்த பூமியும் தான்.!
இந்த நாட்டில் பொறந்த ஒவ்வொரு குடிமக்களும்,இந்த மண்ணையும், பெத்தவங்களையும் நேசிக்கனும்! இதுதான் நான்..! என்றான் மாதவன்.
அதுக்காக சொல்லவில்லைப்பா! இந்த பூமியும்,நம்ம வயற்காடும் தண்ணீரில்லாமல் வறண்டுப்போயிடுச்சி.. விவசாயம் சுத்தமா அழிஞ்சிபோயிடுச்சி..கிராமத்திலே பாதிபேர் காலிபண்ணிட்டு போயிட்டாங்க..!
இதில் நீ மட்டும் எப்படிப்பா சாதிக்க முடியும்? பேசாமல் பட்டணத்துக்கே போயி,உன்னோட படிப்புக்கேத்த வேலையா பார்த்து பொழைச்சிக்கோய்யா..!என்று கண்ணீர் வடித்தார் அம்மா! அம்மா..! விவசாயந்தான் இந்த நாட்டோட முதுகெலும்பு! இப்போது அந்த விவசாயம் கேள்விக்குறியாயிருக்கு.. அதனை என்னைபோல படிச்ச இளைஞர்கள் முயற்சித்தால் மட்டுமே தலைநிமிர்த்தி, நிற்கசெய்ய முடியும்..! இயற்கை விவசாயத்தை நம்பி நானெடுத்திருக்கும் இம்முயற்சி நிச்சயம் புதுமாற்றத்தைக் கொடுக்கும்! நம்மோடவறுமையும் மாறும்! தங்கச்சிங்களை நல்லபடியா படிக்க வைப்பேன்! அப்பாவையும் குணமாக்கி, கம்பீரமாய் நடக்க வைப்பேனம்மா.!என்றான்
மாதவன். மாதவா! உன்னை மகனா பெத்ததுக்கு நாங்கள் ரொம்ப பெருமைபடுறோம்ப்பா! இந்த காலத்து படிச்ச பசங்க.. பெத்தவங்களையும் மதிக்குறதில்லை.. சோறுபோடுற நிலத்தையும் பெருசா நினைக்குறதில்லை..! ஆனால் நீ பெத்தவங்களையும்.. இந்த மண்ணையும் உசுராநினைக்குறீயே..!என்றார் அம்மா! "வருங்கால தலைமுறைகள் விவசாயத்தைதான் முதற்பாடமாய் படிக்கனும்..! விவசாயமும்.. விவசாயியும், இந்த மண்ணில் தலைநிமிர்ந்தால் மட்டுமே.. இந்த உலகம் தலைநிமிரும்! என்ற தொலைநோக்கு பார்வையை விவசாயத்தில் புகுத்தனும்.! இந்த இலக்கைநோக்கி தான் பயணப்படுறேன்! என்றான் மாதவன்.
இன்னும் இரண்டே ஆண்டுகளில் நம் கிராமத்தை மீண்டும் பொன்விளையுற பூமியாய் மாத்தனும்..! விவசாயி சேற்றிலிறங்கினால் தான்.. உலகமே சோற்றில் கை வைத்திட முடியும்!என்பதை உணரனும் ! நாட்டின் வளர்ச்சியில் பன்னாட்டு வணிக ஸ்கோர்களை விட, நம்ம விவசாயின் வியர்வைத்துளிகளுக்கு மதிப்பு உயரனும்! அதுவரைக்கும் எனக்கு தூக்கம்,சாப்பாடு, எதுவும் முக்கியமில்லை! பொழுது விடியுறதுக்குள்ளாற நான் நம்மோட வயலுக்கு போறேன்! என்று கூறி புறப்பட்டான் மாதவன்.
மாதவன் கூறியதைப்போலவே, இரண்டாண்டுகளிலே தனது அயராத உழைப்பால்..வறண்ட நிலத்தில் மீண்டும் வசந்தத்தை கொண்டு வந்தான்.
விவசாயத்தில் புதுமைகளை புகுத்தினான். இயற்கை மேலாண்மையில் அழிவுநிலை பயிர்களையெல்லாம் மீண்டும் உயிர்ப்பித்தான். அதிகளவு மரங்களை நட்டான். அவனது இலக்கினை அடைந்திட்டான்.! இயற்கையின் எல்லைகளில் அவனது இலக்கானது சற்று நிம்மதியாய் ஓய்வெடுத்தது...!
-முற்றும்
ரெசின்.கா.சசிகுமார்

Post a Comment