அதிபத்தர்_நாயனார்
சோறுடைத்த சோழநாட்டில்
சொக்கனவன் பக்தரென
பரதவ குலந்தனிலே
பாரினில் உதித்தவரே . . .
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
அழகாக நடனமாடும்
நடராஜன் தாழ்போற்றும்
தங்கமகன் அதிபத்தரே . . .
அலைகடலில் அலைந்தாடும்
பரதவரை வழிநடத்தும்
பண்பான உத்தமரே
பாங்கான நல்தலைவரே . . .
நாயன்மார்களுள் நயமான
மாமனிதராய் மண்ணில் உதித்தவரே
விண்ணவர் போற்றும்
முக்கண்ணனவனின்
முதன்மைத் தொண்டரே . . .
பொருட் பற்றையே
தம்பற்றாகக் கொண்டவருள்
அப்பற்றைத் துச்சமென
துடைத்து தூக்கியெறிந்த
தூயவுள்ளங் கொண்டவரே . . .
கடலலையில் வலைவிரித்து
வசமான மீன்பெற்று
வாழ்வுதனை நடத்திடினும்
அகப்பட்ட மீன்களிலே
தலைமீனை பரமசிவனுக்கென
படைத்தளித்த பரமபக்தரே . . .
பெரும்பாலும் பெருந்துன்பமாய்
ஓர்மீனே யகப்பட்டாலும்
ஒரவஞ்சனை செய்யாது
ஒப்புக்கொண்ட வாக்குப்படி
உமையாளின் சரிபாதி
உலகாளும் சுடலையாண்டி
சிவனுக்களித்த சீராளரே . . .
வறுமையிலும் வளங்குன்றா
அன்போடு வாழ்ந்து
பொன்மீன் கண்டும் அதைப்
பொருட்படுத்தாது சிவபெருமான்
தாழ் பணிந்து அர்பணித்தவரே . . .
பேராசை கொள்ளாத
பேரன்பு கொண்டவரே
பேரன்பின் பயனாக
பெரும்பேறு பெற்றவரே
சிவபெருமான் அருளாலே
நீடுபுகழ் கண்டவரே . . .
உம்புகழ் இவ்வுலகம்
உள்ளவரை வாழிய வாழியவென
போற்றி வணங்குகிறோம் . . .
ஓம் நமச்சிவாய நமஹ . . .
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment