எனது_ஆசான்
காட்சியில் எளிமை கொண்டு
கருத்தினில் புதுமை தந்து கவியுலக
பூஞ்சோலையில் பூத்திட்ட ஆசானே . . .
எங்கோ இருந்த யென்னை
அழைத்து வந்து அரியாசனம் தந்து
ஹைக்கூ தொகுப்பாசிரியராய்,
மின்னிதழ் இணையாசிரியராய்
அமர வைத்து அழகு பார்த்த ஆசானே . . .
அண்ண னெனும் உறவாய் வந்து
எனதுயிரில் கலந்து தமிழ்த்தாயே
போற்றிப் புகழும் தன்னிகரில்லா
ஆசானே . . .
முடியாது என்ற வார்த்தைக்கு
முற்றுப்புள்ளி வைத்து முடியும் முடியும்
என்று சொல்லி ஜூம் இணையவழி
கவியரங்கம் பலவற்றை கவியுலகில்
புகுத்திய ஆசானே . . .
ஜூம் என்றாலே ஏதுமறியா எனக்கு
குட்டிக் குட்டிக் கற்றுக் கொடுத்து
இணையவழியில் கவியரங்கம்,
பாட்டரங்கம், கருத்தரங்கம் என
நடத்திட பின்னால் இருந்து
வழிநடத்தி வெற்றி பெற
வைத்த விந்தையான ஆசானே . . .
சிந்தனை உளி கொண்டு
நீவிர் செதுக்கிய கவிஞர் தாம்
எத்தனை எத்தனை பேர் அத்தனை
அன்புள்ளங்களிலும் ஈன்றோரின்
மேலாக நிறைந்து இருக்கும்
மாண்புமிகு ஆசானே . . .
சுட்டித்தனம் செய்தாலும்
அன்பால் கட்டி வைத்து
அரவணைத்து கவியுலகில்
எனை உயர்த்திய குழந்தைமனங்
கொண்ட உன்னத ஆசானே . . .
தான் ஓய்வு எடுக்காமல்
பலருக்கு ஓய்வு நேரத்தைக் காட்டும்
கடிகாரம் போலே நின்
அயராத உழைப்பாலும்,
அன்பான வழி காட்டுதலாலும்
அகிலம் போற்ற உயர்ந்து
சிகரத்தின் உச்சிக்கே சிகரமாகிய
நிந்தன் கம்பீரக் குரலுடன் கூடிய
கட்டளைக்கு அடிபணிந்து
கடமையாற்றிய நாட்களையும்
உன்னோடு பயணித்து வாழ்ந்த
காலத்தையும் மறப்பதென்பது
அவ்வளவு எளிதல்ல . . .
"திட்டமிடாத செயலும் வீண்
செயல்படுத்தாத திட்டமும் வீண்"
எனும் கோட்பாட்டுடன்
ஆளுமை யெனும் வார்த்தைக்கு
தமிழ் அகராதியின் அர்த்தமாய்
விளங்கும் உன் முகம் காணவே
தேடித் துடிக்கின்றேன் நான்
ஆன்லைன் வந்தாலே . . .
கவியுலகில் பற்பலருக்கு ஆசானான நீ
ஈசன் திருவடி சரண் அடைந்தாலும்
என்றென்றும் எனது ஆசான் நீயே
உனது புகழ் இவ்வுலகம் உள்ளவரை
நிலைத்திருக்கவே இந்நாளும்
எந்நாளும் வேண்டுவேன் நானே . . .
எனது கவியுலக ஆசான் ஒரத்தநாடு
நெப்போலியன் அண்ணாவை போற்றி
வணங்குகிறேன் . . .
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment