*************************************
நன்றி என்பது ஒருவர் தமக்கு செய்யும் உதவிக்கு நாம் திருப்பி சொல்லும் ஒரு கடமை உணர்வு மிக்க சொல் ஆகும். உதவி என்பது எந்த வகையில் வேண்டுமானாலும் கிடைக்கலாம் ஆனால் அதை செய்யும் நேரமும் காலமும் சூழ்நிலையு மே அந்த உதவியின் மகத்துவத்தை பிரித்துக் காட்ட உதவுகிறது. ஒருவருக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது அதை நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் போது நாம் கொடுத்து உதவுவதே இயல்பே அப்படிப்பட்ட உதவிகள் கொடுக்கல்-வாங்கலில் சாதாரணமான ஒன்றாகத்தான் கருதப்படும். ஆனால் ஒருவர் உயிருக்கு ஆபத்தான சூழலிலோ வேறு ஏதாவது இக்கட்டான நிலைமையில் இருக்கும் போதோ செய்யும் வழி அறியாது உதவிக்கரம் வேண்டி விழி பிதுங்கி தவிக்கும் அந்த நேரத்தில் நாம் செய்யும் உதவி மலையை விட கடலை விட மிகப் பெரியதாக கருதப்படும். அப்படி செய்யப்படும் உதவி ஒருவர்க்கு எப்படி இருக்கும் என்பதைத்தான் வள்ளுவர் தம் வாக்கில் காலத்தினால் செய்த உதவி ஒருவர்க்கு ஞாலத்தின் மானப் பெரிது என்று கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட நன்றியை ஒருவன் மறப்பானாகில் அவன் மனிதனே இல்லை மனசாட்சியே இல்லாத மிருகம் என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று அஃது அன்றே மறப்பது நன்று... மகாபாராதத்தில் தனக்கு செய்த உதவிக்காக கர்ணன் உயிரைக் கொடுத்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான்.
இராமாயணத்தில் வானரங்கள் தனக்கு செய்த உதவிக்காக வானர குலத்துக்கே மோட்சம் கொடுத்தான் ராமன். ஆக நன்றி என்பது நம் உணர்வோடு கலந்து உதிரத்தோடு உறைந்து வாழும் ஒன்றாகும். எனவே நாம் அனைவரும் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற குறளுக்கேற்ப்ப இல்லை என்போருக்கு இயன்றவரை உதவி செய்தும் நமக்கு உதவி செய்தோருக்கு நன்றியை மறக்காமலும் வாழ்ந்து இந்த மானிட வாழ்வை சிறப்போடு முடிக்க வேண்டும் என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.நன்றி
காஞ்சனா ஜெயராமன்
Post a Comment