#குழந்தையும்_தெய்வமும் (சிறுகதை)
மாலை நேரத்து தெருவிளக்குகள் சிறிது நேர கண் சிமிட்டலுக்குப் பின் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தன.
இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரி, பஸ் என நொடிக்கொரு முறை மின்னல் வேகத்தில் சென்று மறைந்து கொண்டிருந்தது.
அவசர அவசரமாக அலுவலக நண்பர் ஒருவரின் மகனது காதுகுத்து நிகழ்வில் கலந்து சிறப்பித்த கையோடு கிளம்பி, திருப்பூரின் பிரதான சாலையில் நுழைந்து பேருந்து நிலையம் நோக்கி விரைந்தோடி வந்தனர் சத்யா - சஞ்சனா தம்பதியர் தங்களின் செல்லமகள் சக்தியுடன்.
பேருந்து நிலைய வளாகத்திற்குள் நுழைந்த அந்நொடி முதல், வந்து செல்லும் ஒவ்வொரு தனியார் பேருந்துகளின் அலங்கார விளக்குகளையும் கண்டு இரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் இளம் மழலை சக்தி.
என்னங்க வந்து அரைமணி நேரமாச்சு கோயம்புத்தூர் போற எல்லா பஸ்சும் இப்படி கூட்டமா இருந்தா எப்பங்க நாம வீட்டுக்கு போறது.
வீட்டுக்கு போய் ராத்திரிக்கு சாப்பாடு வேற ரெடி பண்ணனும் புலம்பலானாள் சஞ்சனா.
இருடி, ஏன் இப்படி புலம்பற இந்த பீக் டைம்ல வந்தது நம்மளோட தப்பு. காத்திருந்து தான் போகணும் என்றான்.
சற்று நேரத்திற்குப் பின், "பெண்களுக்கு இலவசம்" அரசின் அதிரடி அறிவிப்பால் விழி பிதுங்க, பெண்கள் கூட்டம் அலைமோத உலா வரும் அரசுப் பேருந்துகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சில பயணிகளோடு ஓர் அரசுப் பேருந்தும், அலங்கார விளக்குகளுடன் அழகாக ஓர் தனியார் பேருந்தும் உள் நுழைந்தது.
மேட்டுப்பாளையம், அனுப்பர்பாளையம், அவினாசி தெக்கலூர், கருமத்தம்பட்டி கோயம்புத்தூர் என நொடிக்கொரு முறை ஒலித்து அடங்கியது நடத்துனரின் குரலொலி.
ஒரு கையில் சக்தியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் ட்ராலியை இழுத்துக் கொண்டு சஞ்சனா வா என்றான்.
ஆங்காங்கே நின்றிருந்த பேருந்துகளைக் கடந்து கோயம்புத்தூர் செல்ல தயார் நிலையில் இருந்த அரசுப் பேருந்தின் உள் நுழைய முற்பட்டான்.
அவனது கைகளில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டு பேருந்தில் ஏற மறுத்து அடம் பிடிக்கலானாள் சக்திகுட்டி.
சத்யா எவ்வளவோ சொல்லியும் சக்தி கேட்பதாக இல்லை.
கோபமானாள் சஞ்சனா. ஏன்டி இப்படி அடம் பிடிக்கற அப்பாதான் சொல்றார்ல வா போகலாம். இந்த பஸ்தான்டா வேகமாக போகும் ஜாலியா இருக்கும் கோபத்தை அடக்கிக் கொண்டு கொஞ்சினாள்.
முடியாதும்மா ... அந்த பஸ்ல போகலாம், அந்த பஸ்லதான் அழகழகா லைட் இருக்கு, டிவி இருக்கு அந்த பஸ்தான் எனக்கு பிடிச்சிருக்கு அதுலயே போகலாம் என்று சிணுங்கத் தொடங்கினாள்.
பேருந்து வாயிலை மறித்து நின்று கொண்டு நடந்த இவர்களது குடும்ப சச்சரவு மற்ற பயணிகளுக்கு இடையூராக இருப்பதைக் கண்ட நடத்துனர் யாருப்பா அது ஓரமா நின்னு பேசமுடியாதா? மத்தவங்க ஏறுறதா!! இல்லையா!! என்றார் பேருந்தின் உள் இருந்து.
கடுப்பானான் சத்யா. சரி வா அந்த பஸ்லயே போகலாம் என்ற முணுமுணுப்போடு, சக்தியை இழுத்துக் கொண்டு அவளுக்குப் பிடித்த தனியார் பேருந்தில் ஏறினான். சக்தி ஜன்னலோரமாக அமர மூவருமாக ஓர் சீட்டில் அமர்ந்தனர்.
அரசுப் பேருந்து கிளம்பிய அரைமணி நேர இடைவெளியில் தனியார் பேருந்து கிளம்பியது. பேருந்து செல்லச் செல்ல
சக்தியின் மகிழ்விலும், புன்னகையிலும் நெகிழ்ந்த சத்யா அவளோடு விளையாடிக் கொண்டே பயணப்பட்டான்.
அப்பாவும் மகளும் ஒன்னாகிட்டீங்களா!! இருங்க ... வீட்டுக்குப் போனதும் பேசாம படுத்து தூங்குங்க உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்றவள், ஆசைக் கணவனையும், செல்ல மகளையும் உள்ளூர ரசித்தாள்.
சென்று கொண்டிருந்த பேருந்து மெல்ல மெல்ல தன் வேகத்தைக் குறைத்து நின்றது. வெளியில் ஒரே சலசலப்பு சத்தம்.
எட்டிப் பார்த்தனர், ஒரே கூட்டம். சிறிது தூரத்தில் ஒருசில காக்கிச் சட்டைகள் ஒய்யாரமாய் நின்று வாக்கி டாக்கியில் பேசிக் கொண்டிருந்தனர்.
சக்திம்மா நீ இங்கேயே உட்கார்ந்து இரு என்று கூறிவிட்டு இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினர்.
ஐயோ என்னங்க என்ன விட்டுட்டு போய்டாதீங்க, தவமிருந்து பெத்த புள்ள இப்புடி ரத்த வெள்ளத்துல மிதக்குதே நான் என்ன செய்வேன், அம்மா எழுந்திரிம்மா ... ம்ம்ம்மா... ம்ம்ம்மா... என மனதை உலுக்கும்படியான அலரல்களும், அழுகுரல்களும் சத்யா - சஞ்சனாவின் மனதை ஏதேதோ செய்தது.
அதிலும் குடும்ப சகிதமாய் அவர்கள் பயணப்பட இருந்த அதே அரசுப் பேருந்துதான் விபத்துக்குள்ளான அந்த பேருந்து என்பதை அறிந்ததும் தூக்கி வாரிப்போட்டது இருவருக்கும்.
ஆம்புலன்ஸ் வந்தது. அனைவரின் உதவியோடு அடிபட்ட அனைவரையும் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் முதலுதவிக்காக கொண்டு சென்றது.
அவர்களது பேருந்து கிளம்ப தயாராகியது. இருவரும் மௌனமாக பேருந்தில் ஏறினர். சிரித்துக் கொண்டே அப்பா அங்க பாருங்க நிலா... நிலா... என வானத்தைக் காட்டி குதூகலித்தாள். பௌர்ணமி நிலவொளியில் பிரகாசிக்கும் குட்டி தேவதை சக்தி.
தங்கள் செல்வ மகளால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்பதனை உணர்ந்தனர். சக்திகுட்டியைக் கட்டியணைத்து எங்கடா செல்லம் என்று அவளோடு அலவளாவிக் கொண்டே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தனர்.
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று" என்ற பாடல் காற்றோடு கலந்து செவிகளை நிறைத்தது.
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு எண்ணங்களுக்கு சக்தி உண்டு. உணர்வோம் ... உயர்வோம் ...
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment