காமராஜர் கட்டுரை

         



விருது நகரில் பிறந்த விசித்திர மனிதர் காமராஜர்

     இருண்டு கிடந்த இந்திய தேசத்தில் கருப்பு காந்தியாக வந்து பிறந்தவர் காமராஜர். அவரது நிறம்தான் கருமை. உள்ளமெல்லாம் கள்ளம் கபடமில்லாத வெள்ளை மலர்த்தோட்டம். அந்த வெள்ளை மலர் தோட்டம் தான் சிகப்பு ரோஜாவை சூடியிருந்த நேரு பெருமகனாரை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தது. காமராஜர் கோட்டையிலே அமர்ந்திருந்தாலும் அவரது எண்ணமெல்லாம் குடிசையிலேயே குடியிருந்தது. ஏழைகளை நேசித்த ஏழைப்பங்காளன் அவர். தேசத்தின் மானத்தை காப்பதற்காக தேகத்தின் மானத்தை காக்கும் ஜவுளி கடை வேலையை வெறுத்தவர்.

      அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறியதால் சித்தார்த்தன் புத்தன் ஆனார். பதவி சுகபோகங்களை உதறித் தள்ளியதால் காமராஜர் கர்மயோகி ஆனார். காமராஜர் 1903 ம் ஆண்டு ஜூலை திங்கள் 15ம் நாள் குமாரசாமிக்கும் - சிவகாமி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார். வாழ்க்கையில் சிலபேர் போராடுவார்கள். சில நேரங்களில் போராடுவார்கள் , ஆனால் காமராஜரோ போராட்டமே வாழ்க்கையாக வைத்துக் கொண்டவர். அந்தப் போராட்டம் கூட தனக்காக அல்ல! தேசத்தின் நலனுக்காகவே.

        அவரது நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மூவாயிரம் நாட்களை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் இரும்பு கம்பிகளுக்குள் சிறை (சு)வாசம்  செய்தவர். இரும்பு கம்பிகளுக்குப்பின் இருந்தாலும் துருபிடிக்காத இதயம், காமராஜரின் கனத்த இதயம், விசித்திர இதயம். ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பதை நாடிபிடித்து பார்ப்பது போல அவர் சோதித்துப் பார்க்கும் முறையே வியப்பானது.

      கிங்மேக்கரான அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டுத் திரும்புவார். அவரைப் பார்க்க உயர் அதிகாரிகள் பலரும் காத்திருப்பார்கள். அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவிலே போகின்ற மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளை அழைத்துவரச் செய்வார். அந்த அதிகாரிகளின் முன்னிலையிலேயே அவர்களின் நலன்களை விசாரிப்பார். உங்களுக்கு எல்லாம் அரிசி, பருப்பு ஒழுங்கா கிடைக்கிறதா!  விலைவாசி எல்லாம் எப்படி இருக்குது என்றெல்லாம் அடிப்படையான பிரச்சனைகளைப் பற்றி உன்னிப்பாக கேட்பார். மக்களாட்சியின் தத்துவத்தை மிகச் சரியான அர்த்தத்தில் புரந்து கொண்டு ஆட்சி செய்தவர்.

குஜராத்தில் நடந்த விசித்திரம்

     குஜராஜ் மாநிலத்தில் ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேருவும், காமராஜரும் கலந்து கொண்டார்கள். அதில் காமராஜர் பேச வேண்டும் என்பது நேருவின் விருப்பம்.


      செயல் வீரரான காமராஜர் பேசுவதை அதிகம் விரும்பாதவர் ஆயிற்றே. அந்த நேரத்திலும் மறுத்து விட்டார். அதற்கான காரணத்தையும் சொன்னார். இங்கு இந்தி பேசுபவர்கள் கூடியிருக்கிறார்கள். நான் தமிழில் பேசி அவர்களுக்கு புரியப் போவதில்லை என்றார்.


      ஆனாலும் நேரு தொடர்ந்து வற்புறுத்தினார். இறுதியில் பேச வேண்டிய கட்டாயம். பெருந்திரளான கூட்டத்தைப் பார்க்கிறார் பெருந்தலைவர் காமராஜர். சிறிது நேரம் பேசிவிட்டு அமர்கிறார். பெருத்த கரவொலிகளுடன் கைத்தட்டல். அப்பொழுது அங்கிருந்த தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்திக்காரர்களிடம், ஏன்? காமராஜர் பேசியபோது கைதட்டினீர்கள். அவரது தமிழ் பேச்சு உங்களுக்கு பிடித்திருந்ததா!! என்று கேட்கிறார்.


        அப்போது அவர் சொன்ன பதில் அவரது விழிகளையும் வியக்க வைத்தன. ஒரு நல்ல மனிதர் பேசுகிறார் என்றால், நல்லதை தானே பேசுவார். அதற்கு எதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த உத்தமர் பேசி மொழி புரியாவிட்டால் என்ன? அவரின் நல்ல எண்ணம் எங்களுக்கு தெரியுமள என்றார். பத்திரிக்கையாளரின் விழிகள் வியப்பில் விரிந்தன்.  இப்படி இன, மொழி , எல்லைகளைக் கடந்து எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்த விசித்திரங்களின் விசித்திரம் அவர். ஆயிரமாயிரம் அணைகள் கட்டியவர். எட்டாக்கனியான கல்வியை ஏழைகளுக்கு கிட்டும்படி செய்தவர்.  படிக்காத மேதையாக தான் இருந்தாலும் பற்பல பட்டதாரிகளை உருவாக்கி பண்பாளர். 


       இப்படி அரும்பெரும் செயற்கரிய செயல்களை செய்து பலரது விழிகளை வியக்க வைத்த அவரின் விழிகள் மூடி விட்டன . 


      அவரது கடைசி நாட்களை கவியரசர் கண்ணதாசன்,

    "தங்கமே, தென்பொதிகைச் சாரலே

     சிங்கமே என்றழைத்து சீராட்டும்

     தாய் தவிர சொந்தமென்று

     ஏதுமில்லை

     துணையிருக்க மங்கையில்லை

     தூயமணி மண்டபங்கள் 

     தோட்டங்கள் ஏதுமில்லை

     ஆண்டி கையில் ஓடிருக்கும்,

     அதுவும் உனக்கில்லையே"

என்று கவிதைகளால் கண் கலங்கினார். இன்றைய சில அரசியல்வாதிகளை நினைக்கையில் மனம் கணத்து கசக்கிறது. தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்கள் இருக்கும் வரைக்கும் காமராஜர் புகழ் நிலைத்திருக்கும்.

வாழ்க காமராஜர் புகழ் என்று துதிபாடி கடந்து விடாமல் ஒரு துளியேனும் அவரது பாதையில் பயணிக்க முயற்சிப்போம்.

            *ரேணுகா ஸ்டாலின்*

     


        

1/Post a Comment/Comments

  1. அழகிய நடையில் கர்மவீரரின் பேருண்மைகள்-சிறப்பு அம்மா

    ReplyDelete

Post a Comment