புத்திசாலி இளரவரசியும்
முட்டாள் கொடி அரக்கனும்
(சிறுகதை)
"ஜெயாம்மா ஜெயாம்மா நீங்க எங்க இருக்கறீங்க".
"என்ன கண்ணுகளா தூங்காம என்ன பண்றீங்க".
"உங்க கதை கேட்க்காம நாங்க எப்போ தூங்கியிருக்கோம்" என்ற தன் தலச்சன் பேத்தி சபரியை முத்தமிட்டபடி
அட ஆமால "வாங்க வாங்க அப்பத்தா பக்கத்தில உட்காருங்க என்றவர்".
"புத்திசாலி இளவரசியும் முட்டாள் கொடி அரக்கனும்" கதை கேளுங்க.
பசுமையான மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு அந்தக் காட்டின் நடுவினிலே ஒர் அழகிய அரண்மனை. அரண்மனையில் மகாராஜா அர்ஜீன் வர்மாவும், மகாராணி ரோஜவதனாவும் அவர்களின் குட்டி இளவரசி தாராவும் ரொம்ப சந்தோசமா வாழ்ந்து வந்தாங்க.
ஒருநாள் மகாராஜாவும், மகாராணியும் அண்டை தேசத்தில் நடக்கும் காளிபூஜை திருவிழாவுக்கு இளவரசியுடன் செல்வதாக திட்டமிட, இளவரசி தாராவோ எனக்கு வர விருப்பம் இல்லைனு சொல்லிடறாங்க.
இளவரசி தாரா பார்க்க தான் சின்னப்பொண்ணு ஆனா விற்போர், மற்போர், வாள்பயிற்சினு அத்தனை கலைகளையும் சிறப்பாக கற்றுத் தேர்ந்தவர். அதனாலேயே அவரின் பெற்றோர் அவரை தனியே அரண்மனையில் விட்டுவிட்டு காளிபூஜைக்குச் சென்றனர்.
அரண்மனை பூங்காவில் சிறிது நேரம் உலாவிய இளவரசி தனிமையில் என்ன விளையாடலாம்னு யோசிச்சாங்க. அப்போ இளவரசிக்கு ஒன்னு தோணுச்சு அவங்க வளர்க்கற பட்டுங்கற கிளிகிட்ட பேசிட்டு இருக்கலாம்னு.
பட்டுவ கூப்பிட்டுக்கிட்டே கூண்ட திறக்கப் போறாங்க, அப்போ திடீர்னு பலத்த கற்றோடு கதவுகள் படபடக்க அமானுஷ்யமா ஏதேதோ நடக்குது. எதுவும் புரியாத இளவரசி தைரியத்த வரவழச்சுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கறாங்க, அவங்க கண்ணுக்கு எதுவும் தென்படல.
சரினு திரும்பவும் கிளிக்கூண்ட திறக்க தொடராங்க அங்க எதிர் சுவற்றில் கொடி அரக்கன் பெரிய கூரிய நகங்களோடு இளவரசிய நெருங்க நின்னுட்டு இருந்தான்.
அது நிழலாகத் தெரிவதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட இளவரசி அவன் "கண்ணுல மண்ணைத்தூவி" மெல்ல மெல்ல நகர்ந்து அரண்மனையோட ரகசிய அறைக்குப் போயிடறாங்க.
ஆனாலும் விடாம துரத்திட்டு வந்த கொடி அரக்கன் இளவரசி தாரா இருக்கற ரகசிய அறைக்கதவை உடைத்தெறிந்து விட்டு உள்ள வந்து அவங்கள சாகடிக்க முயற்சி பண்றான்.
இளவரசி பல கலைகள் கற்றவர் மட்டுமில்லை சிறந்த புத்திசாலியும் கூட அதனால தன்னைச் சாகடிக்க வந்த கொடி அரக்கன சமாளிச்சு அவங்க இருந்த அறைக்கதவின் சன்னல் வழியா கீழ இறங்கி தைரியமா காட்டுக்குள்ள ஒடினாங்க.
பின்னாடியே கொடி அரக்கனும் துரத்திக்கிட்டே ஓடி வர்றான். இளவரசி ஓட கொடி அரக்கன் துரத்தனு இப்போ நாம பார்க்கற டாம் அன் ஜெர்ரி ஷோ மாதிரி நெடு நேரம் நடக்குது.
ஓடி ஓடி களைத்து காட்டின் கடைசிக்கு போன இளவரசிக்கு ஒரே பதற்றம் ஏன்னா அவங்க பிறந்து இந்த பத்து வருசத்தில காட்டின் உள்ளே இவ்வளவு தூரம் வந்ததேயில்லை.
எப்படி தப்பிக்கப் போறோம்னு ஒரே கவலையோட அவங்க யோசிச்சிட்டு இருக்கும் போதே அங்கே கொடி அரக்கனும் வந்துட்டான்.
சட்டுனு இளவரசிக்கு அவங்க அண்ணன் தருண்வர்மா ஞாபகம் வருது. தருண்வர்மா இளவரசியோட சித்தப்பா பையன் இருந்தாலும் இளவரசி மேல அதிக பாசம் கொண்டவர்.
மந்திர தந்திரங்கள் கத்துக்கறதுல அதிக ஈடுபாடு கொண்ட தருண்வர்மா பல நாடுகளுக்குச் சென்று மந்திர தந்திரங்கள் கற்றுக் கொண்டிருந்தார்.
அவர் இளவரசி தாராவுக்கு ஒரு மந்திரத்த சொல்லிக் கொடுத்து இருந்தார். உனக்கு என்ன தேவைனாலும், ஏதாவது ஆபத்து வந்தாலும் இந்த மந்திரத்த கண்கள மூடிகிட்டு சொல்லி என்ன கூப்பிட்டா நான் எங்க இருந்தாலும் உனக்கு தேவையானதை பண்ணுவேன்னு சொல்லி இருந்தார்.
கொடி அரக்கன் நெருங்க நெருங்க இளவரசி கண்கள மூடி அந்த மந்திரத்த சொல்லி அண்ணன் உதவிய கேட்டாங்க.
இளவரசி முன்னாடி தோன்றின அவங்க அண்ணன் "ஒரு மந்திர கம்பளத்த தந்து இதுல ஏறி உட்காரும்மா உனக்கு சக்தி கிடைக்கும் கொடி அரக்கன நீயே அழிச்சிடலாம்னு சொன்னார்".
இளவரசியும் மந்திர கம்பளத்து மேல ஏறி உட்கார்ந்து கொடி அரக்கனோட சண்டை போட்டாங்க ஆனா கொடி அரக்கன் அந்த மந்திர கம்பளத்த அழிச்சிட்டான்.
அடுத்தடுத்து இளவரசியோட அண்ணன் மந்திரதடி , மந்திர வாள், மந்திர பூ இப்படிஙஒன்னு ஒன்னா தர எல்லாத்தையுமே கொடி அரக்கன் அழிச்சுட்டான்.
என்ன பண்ணலாம்னு தருண்வர்மா யோசிச்சிட்டு இருக்கும் போது இளவரசி, அண்ணா எனக்கு ஒரு நாய உங்க மந்திரத்தால வரவழச்சு தாங்கனு சொல்றாங்க.
எதுவும் புரியாத தருண்வர்மா தன்னோட தங்கை கேட்டதற்காக நாய் ஒன்றை வரவச்சு தந்தார்.
யாராலும் அழிக்க முடியாத என்ன இந்த நாய வச்சு அழிச்சிடுவயா சின்னப் பொண்ணேனு சொல்லிக்கிட்டு ஆக்ரோசமான கொடி அரக்கன் கொலை வெறியோட இளவரசிய தாக்க வர,
ஹா..ஹா...ஹா..னு கைகொட்டி சிரிக்க ஆரம்பிச்சாங்க இளவரசி வெறியோட இருந்த கொடி அரக்கன் பயங்கர கோபமாகி ஏய் நீ ஏன் இப்படி சிரிக்கறனு கத்தினான்.
அதக்கேட்ட இளவரசி இன்னும் சத்தமா கலகலனு சிரிச்சுகிட்டே நீ ஒரு முட்டாள் உனக்கு கோபம் இருக்கற அளவுக்கு புத்தி இல்லனு சொல்றாங்க.
உடனே கொடி அரக்கன் நான் முட்டாளா , என்ன முட்டாள்னு சொன்ன- உன்ன கொல்லாம விடமாட்டேன்னு சொல்லி இளவரசிய நெருங்க முற்பட்டான்.
ஆனாலும் இளவரசி கொஞ்சம் கூட பயமில்லாம என்ன கொன்னாலும் நீ முட்டாள் தான்னு சிரிச்சுக்கிட்டே சொல்றாங்க.
கோபத்தின் உச்சத்துக்கே போன கொடி அரக்கன பார்த்து உன்ன புத்திசாலினு நான் ஒத்துனும்னா நான் சொல்றத நீ பண்ணனும்னு சொல்றாங்க.
என்னது நீ சொல்றத நான் பண்ணனுமானு கோபமானான் கொடி அரக்கன். சில நிமிட சண்டைக்கு அப்புறம் கடைசியா என்ன செய்யனும் சொல்லுனு இளவரசியோட வழிக்கு வந்தான்.
உடனே இளவரசி தன் அருகில் இருந்த மாயநாயைக் காட்டி அதோட வளைஞ்சு இருக்கற வாலை நேராக நிமிர்த்தனும் அப்படி நிமிர்த்திட்டனா உன்ன புத்திசாலினு ஒத்துக்கறேன் அப்படினு சொல்றாங்க.
ச்சே..ச்சே.. இவ்வளவுதானா இப்பவே நாய் வாலை நிமிர்த்தி நான் புத்திசாலினு நிரூபிச்சுட்டு உன்ன அழிக்கிறேன்னு வாலை நிமிர்த்த முயற்சிக்க ஆரம்பிச்ச முட்டாள் கொடி அரக்கன் இப்போ வரை முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கிறான்.
கொடி அரக்கன தன் புத்திசாலித்தனத்தால் வீழ்த்திய தன் தங்கையை அரவணைத்து பாராட்டி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார் தருண்வர்மா.
என்ன பேரப்புள்ளைகளா நீங்களும் இளவரசி தாரா மாதிரியே எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் மனம் கலங்காமல் எதிர்த்துப் போராடி உங்க புத்திசாலித்தனத்தால ஜெயிச்சுக் காட்டணும் சரியா இப்போ போய் தூங்குங்க நாளைக்கு "காட்டுராஜாவின் கற்பனைனு" ஒரு கதை சொல்றேன்.
சரிங்க ஜெயாம்மா ன்னு சொன்ன சபரி, கவிஷா, அபரா, சாச்சு எல்லோரும் கதை கேட்ட சந்தோசத்தில நிம்மதியா தூங்கினாங்க.
*முற்றும்*
7ம் வகுப்பு,
நா.சு.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
பட்டிவீரன்பட்டி.
👌 அருமை
ReplyDeletePost a Comment