மீண்டு(ம்) வந்த சொர்க்கம் (சிறுகதை)
"சஞ்சனா அத்த, நீங்க கல்யாண வீட்டுக்கு வரலையா வாங்கத்த போகலாம்".
"இல்லடாம்மா நான் வரல நீ போடாம்மா அம்மா திட்டப் போறாங்க".
" இல்ல அத்த நீங்க வாங்க உங்களுக்கு நான் பூ எடுத்து வச்சிருக்கேன், அத வச்சிக்கிட்டு வேற டிரஸ், வளையல்லாம் போட்டுக்கிட்டு வாங்கத்த போகலாம் ப்ளீஸ்.
"கண்களில் தளும்பிய நீரை வெளிக் காட்டாது, குழந்தையை சமாதானப்படுத்த முயன்ற சஞ்சனாவின் கைகளைப் பற்றி இழுத்து ஒரங்கட்டி விட்டு கத்தத் தொடங்கினாள் சஞ்சனாவின் நாத்தனார் சரோஜா.
"ஏய் சக்தி வந்த மூனு மாசத்துல உன் மாமா சத்யாவ தூக்கி முழுங்கின மூதேவி அவள எங்கடி கூப்பிடற வந்து தொலைடி".
பூ எடுத்து வச்சிருக்கேன் புண்ணாக்கு எடுத்து வச்சிருக்கேன்னு இனிமேல் அவகிட்ட போய் கொஞ்சு உனக்கு இருக்கு போய் கார்ல உட்காருடி வர்றேன் என்றவள்,
"இங்க பாருடி நான் வீட்ல இல்லனு சும்மா உட்கார்ந்து இருக்காம வீட்ட சுத்தம் செஞ்சு துணிகளை எல்லாம் மடிச்சுவைடி புரியுதா" என்றாள்.
"சரிங்க அண்ணி எல்லா வேலைகளையும் முடிச்சு வச்சுடறேன்".
என்ற சஞ்சனாவின் பதிலைக் கேட்டுவிட்டு காருக்குச் சென்றாள்.
அங்கே சரோஜாவின் கணவர் சரத் ஏன்டி அந்தப் பொண்ணு தான் நீ சொல்ற பேச்சை தட்டாம கேட்கறாளே பின்ன ஏன்டி அவள இந்தப்பாடு படுத்தற என்றார்.
தன் கணவனை திரும்பிப் பார்த்து முறைத்த சரோஜா அந்த சஞ்சனாவை எனக்குப் பிடிக்காது, அவ வர்ற வரைக்கும் எங்க குடும்பத்துக்கே ராணி நான் தான், அவ என்னைக்கு வந்தாளோ அன்னைக்கே எல்லாம் மாறிப்போச்சு என்ன டென்சன் பண்ணாம வண்டிய எடுங்க போகலாம் என்றாள்.
அவர்கள் கிளம்பிச் செல்ல
"எம்மா சஞ்சனா இங்க செத்த வா என்ற அவளது மாமியார் சொர்ணம்.
"அந்த வாஷிங் மெசின ரிப்பேர் பண்ண ஆள் வரச் சொல்லி இருந்தேனே சொன்னயா மா வந்தாங்களா" எனக் கேட்க.
"இல்ல அத்த, அண்ணி தான் இப்போதைக்கு அதெல்லாம் பார்க்க முடியாது, அடுத்த மாசம் பார்த்துக்கலாம் நீதான் இருக்கறயே உன்னால துவைக்க முடியாதானு திட்டினாங்க அதனால தான் என இழுத்தாள் அப்பாவியாய்".
அடுத்து நடந்திருப்பவைகளை சஞ்சனா சொல்லாமலே புரிந்து கொண்ட சொர்ணம் சரிம்மா நீ போய் வேலையைப் பாரு என்று கூறிவிட்டு பூஜையறைக்குள் சென்றாள்.
பம்பரமாக சுழன்று அத்தனை வேளைகளையும் முடித்த சஞ்சனா தன் மாமியார் அருகே வந்து அத்தை என்றாள்.
என்னம்மா சஞ்சனா சொல்லு என்றாள் சொர்ணம்.
இல்ல அத்த வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டேன் கொஞ்ச நேரம் உட்கார்ந்து டிவி பார்த்துக்கவா என்றாள்.
"இது என்னம்மா கேள்வி இங்க இருக்கற ஒவ்வொரு பொருளும் உன் புருஷன் சத்யா பார்த்து பார்த்து வாங்கிப் போட்டதும்மா என்ன காலக்கிரகமோ வெடி விபத்துல உசுற விட்டு உன்ன தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டான் ".
"விதி அவன் உடம்ப பார்க்கக் கூட உனக்கு கொடுத்து வைக்காமப் போச்சு ".
அவன் இருந்திருந்தா உன்ன மகாராணியாட்டம் வச்சிருப்பான்.
அவன் இல்லாததால தான்
சின்னப் பொண்ணுனும் பார்க்காம நான் பெத்த ராட்சசி உன்ன இந்தப்பாடுபடுத்தறா இதுக்கெல்லாம் விடிவு காலம் எப்பதான் வருமோ".
"இந்த சின்ன வயசுல பூவயிழந்து, பொட்டயிழந்து இந்த ராட்சசி கிட்ட ஏச்சும், பேச்சும் வாங்கி கஷ்டப்படற".
நான் கும்பிடுற கருமாரித்தாயி உனக்கு ஒரு நல்ல வழிய காட்டுவா.
சரிபோய் டிவியப் போடு நானும் வர்றேன் என்றாள்.
இருவரும் சீரியலில் மூழ்கினர்.
வெளியிலிருந்து ஒரு குரல் கேட்க,
சஞ்சனா அறையிலிருந்து வெளிப்பட்டு மெயின் கேட்டை நெருங்க வாசலிலிருந்த நபர் "மேடம் இங்க சஞ்சனாங்கறது,
நான் தான் என்றாள் புன்முறுவலுடன்,
"மேடம் நீங்க கொஞ்சம் எல்.ஜி.என். மருத்துவமனை வரைக்கும் வரணும்" என்றார் வந்திருந்தவர்.
மருத்துவமனைக்கா ஏன்? எதற்கு? என்று ஓராயிரம் கேள்விகளுடன் அவரைப் பார்த்த சஞ்சனா பதற்றத்துடன்,
அத்தை இங்க வாங்களேன் என்று பெருங்குரலெடுத்து அழைத்தாள்.
என்னம்மா சஞ்சனா யார் வந்திருக்காங்க என்றவாறே வந்த சொர்ணத்திடம் விசயத்தைக் கூறினாள்.
அத்த இவர் சொல்றது எதுவுமே புரியலயே யாருக்கு அத்த அடிபட்டிருக்கும் என்று புலம்பலானாள்.
இரும்மா எனக்கும் ஒன்னும் புரியல, சரி ஒரு ஆட்டோ கூப்பிடு ரெண்டு பேரும் போகலாம் என கூற ஆட்டோ வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனை நோக்கி பயணப்பட்டனர்.
மருத்துவமனை வளாகத்தினுள், உடன் வந்தவரைப் பின் தொடர்ந்து இருவரும் செல்லச் செல்ல சஞ்சனாவின் இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத எண்ணம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருவித உணர்வு.
அறை எண் 105ன் அருகே சென்று நின்ற அந்த நபர் இந்த ரூம்ல தான்மா அந்த பையன் இருக்காரு, நீங்க போய் பாருங்க என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
உள்ளே வந்த இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கட்டிலில் சத்யா படுத்திருந்தான்.
சத்யாவைக் கண்ட சஞ்சனாவிற்கு படபடப்பை விட பரவசமே மேலோங்கியிருந்தது. ஓடோடிச் சென்றவள் அவன் கால்களைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள்".
சஞ்சனாவின் கண்ணீர்த் துளிகள் சத்யாவின் கால்களை நனைக்க மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்த சத்யா சஞ்சனா என மெல்லிய குரலில் அழைத்தான்.
அவனருகில் அமர்ந்த சஞ்சனா, என்னங்க என்ன விட்டு பிரியவே மாட்டேன்னு சொல்லிட்டு, என்ன விட்டுட்டு செத்துப் போய்ட்டீங்களே என் வாழ்க்கையே சூன்யமாகிடுச்சு தெரியுமா என்று கதறினாள்.
"மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்திய சத்யா நடந்தவைகளைக் கூறினான்.
அப்போது அங்கு வந்த டாக்டர் சஞ்சய்,
சத்யா இப்போ முழுசா உனக்கு நினைவு திரும்பிடுச்சு நீ தாராளமா வீட்டுக்குப் போகலாம் என்றார்.
சஞ்சனா கவலைப்படாதம்மா உன் சத்யா க்கு நூறு ஆயுசு, அதான் மீண்டு(ம்) வந்துட்டானே இனி எப்போதுமே உங்க வாழ்க்கைல பிரிவு என்ற வார்த்தைக்குக் கூட இடமிருக்காது என்றவன்.
தூரமாக கண்கள் குளமாக நின்ற அம்மாவை அழைத்து வந்து சத்யாவின் அருகில் அமர்.த்தி அம்மா நீங்களும் சஞ்சனாவும் என்ன மன்னிச்சுடுங்கம்மா நான் வேலை பார்த்த ஹாஸ்பிட்டல்ல தான் வெடி விபத்தில அடிபட்ட சத்யாவ பலத்த காயத்தோட கொண்டு வந்து சேர்த்தாங்க. அவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சப்போ என்னயே அடையாளம் தெரியாம நினைவிழந்து இருந்தான்.
அனாதையான என்ன டாக்டராக்கி அழகு பார்த்த உங்களுக்கு உங்க செல்லப் பையன முழுசா குணமாக்கி உங்க கிட்ட ஒப்படைக்கணும்னு தான் எதுவுமே சொல்லாம மறச்சிட்டேன் என்றான்.
அவனைக் கட்டித் தழுவிய சொர்ணம் சஞ்சய் நீ மவராசனா இருப்படா என கண்கலங்கினாள்.
"ஆறுமாத காலமாக கணவனை இழந்த இளம் விதவையாக தான்பட்ட வேதனையும், வலியும் உலகில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாதென நினைத்தவளாய் சத்யாவின் கரம் பற்றி முத்மிட்டு மகிழ்ந்தாள் சஞ்சனா".
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment