ஆசிரியர் தினக்கவிதை



 ஆசான்

மிரளும் கண்களோடும் 

திரளும் கண்ணீரோடும்

பள்ளிக்கு வரமறுக்கும்

இளம் பிஞ்சுகளுக்கு

வசப்படாத வார்த்தைகளை

எண்ணக் கோர்வையாக்கி

அகப்படாத எழுதுகோலை

ஆறாம் விரலாக்கி

நல்லறிவு தந்து

நயம்பட பகுத்தறிவூட்டி

அல்லதை நீக்கி

நல்லதைப் பெருக்கி

நாண்மதியாய் மிளிர்ந்திட

விண்மதியாய் துணைநின்று

அகிலம்போற்ற உயர்த்திடும்

அற்புதம் ஆசிரியர்கள்

உலகை உருவாக்கும்

கல்விச் சாலையிலே

இனியவை தேர்ந்து கனிவுடன் 

வாழ்க்கைக் கட்டிடத்தின்

அஸ்திவார தூண்களாய்

துணை நிற்கும்

அதிசயம் ஆசிரியர்கள்

காட்சி உலகினில்

சஞ்சரிக்கும் மாணவரின்

மனக் கண்ணில் 

முதல்ஆசான் ஆசிரியர்கள்

தண்டித்த காலம்மாறி

கண்டிக்கும் உரிமைகூட

உனக்கில்லை என

கைவிலங்கிட்ட போதும்

கருணை உள்ளத்துடன் 

களங்கரை விளக்கமாயிருந்து

நல் வழிப்படுத்தும் 

சிற்பி ஆசிரியர்கள்

நம்வாழ்க்கை பயணத்தின்

ஆச்சர்யமாய் அதிசயமாய்

தொடக்கப் புள்ளியாய்

தொடரும் ஏணியாய்

தன்னையே உருக்கி

தன்மாணவன் வாழ்வில்

அறிவுச் சுடரேற்றிய

முதல்கடவுளாம் ஆசிரியர்களை

போற்றி வணங்குவோம்

           ரேணுகா ஸ்டாலின்

0/Post a Comment/Comments