சமூகத்தின் முகம்
சமூகத்தின் முகமிங்கே
மெய் மறைத்து முகமூடியுடனே ..!
பொய் கூறும் கண்களினூடே
மெய்தேடி அலைகின்றோம் ..!
பெண்மை போற்றுவோம்
பேணிக் காப்போம் என்போம்
முகமூடியணிந்து ..!
பெண்மை தீட்டு
போகப்பொருள் என்றெண்ணுவதே
மெய் முகமிங்கே ..!
கல்வியே நம்மிரு கண்கள்
கல்வியில் புதுப்புரட்சி காண்போம்
என்போம் முகமூடியணிந்து ..!
ஏழைக்கு கல்வியை என்றும் எட்டாக்கனியாக்கி ..!
காசுக்காய் விலை பேசி
நிற்பதே மெய் முகமிங்கே ..!
விவசாயம் நம் உயிர்நாடி ..!
விளைநிலம் காப்போம் வீறுகொண்டு எழுவோம் என்போம் முகமூடியணிந்து..!
விதைத்தவனை வாட்டி வதைத்து
விளைநிலம் அழித்திடுவதே மெய்
முகமிங்கே ..!
சாதிமத பேதமில்லை ஏற்றத்தாழ்வு
ஏதுமில்லை என்போம்
முகமூடியணிந்து . !
சாதியம் பேசி சண்டைகளிட்டு
சாமானியனின் உயிர் பறிப்பதே
மெய் முகமிங்கே ..!
ஊடகங்கள் உண்மையை
உரக்கச் சொல்லி நீதியை
நிலைநாட்ட என்போம்
முகமூடியணிந்து ..!
அரசியல் வா(வியா)திகளுக்கு
உண்மையாகவும்
கார்ப்பரேட்களுக்காகவும்
உழைப்பதே மெய் முகமிங்கே ..!
அன்பு பாசம் நட்பென்று
வாய்ஜாலம் பேசி தேவைக்கு
குழைந்திடுவோம் முகமூடியணிந்து ..!
தேவைகள் முடிந்ததுமே ஏற்றிவிட்ட
ஏணியையும் எட்டி உதைத்து நன்றி
மறப்பதே மெய் முகமிங்கே ..!
அறுபடை வீடுடைய என்அப்பன்
முருகனுக்கே ஆறுமுகம்தான் ..!
மனிதம் தொலைத்து,
மனம் தொலைத்து,
பணம் மட்டுமே செய்யும்
மனிதனுக்கோ நூறு முகமுண்டு ..!
மெய் எது பொய் எது
என்று தேடித்தேடியே
நித்தமும் கடக்கின்றோம்
முகமூடி முகங்களினூடே
மெய் முகம் தொலைத்தே ..!
*ரேணுகா ஸ்டாலின் *
Post a Comment