என்னுரை
வாசிப்பை நேசிப்பவள் நான். ஆம் படிக்கும் காலத்தில் இருந்தே சிறுகதை, குறுநாவல், நாவல் , வரலாற்று புதினங்கள் என தேடித்தேடி புத்தகங்களை வாசிக்கும் குணம் கொண்டவள். அந்த வாசிப்புப் பழக்கமே எழுதுவதற்கான ஆர்வத்தையும், எல்லா முகாந்திரங்களையும் கொடுத்து எழுத வைத்தது என நினைக்கிறேன். நண்பர்கள் சிலரின் தூண்டுகோலால் எழுதுவதின் மீது தீராத மோகத்தோடும் தேடலோடும் பயணிக்கின்றேன்.
எழுதுவது என்பது திட்டமிட்டு வருவதல்ல. எழுத்தார்வத்தின் மீதான தீராக்காதலால் வருவது. முதலில் ஒரு கவிதை புத்தகத்தை தான் எழுதி வெளியிடுவேன் என நினைத்தேன். ஏனென்றால் முகநூலில் கணக்கு தொடங்கி சில கவிக்குழுமத் தளங்களில் கவிதைகளை மட்டுமே எழுதி கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல தமிழின் இனிமையால் ஈர்க்கப்பட்டு புதுக்கவிதை, சிறுகதை, ஹைக்கூ, தன்முனைக்கவிதை என எழுதலானேன்.
எழுத்துத் துறையில் கவிஞர், கதாசிரியர் என பல்வேறு பரிமாணங்களோடு எத்தனை தளங்களில் எழுதி ஏற்றம் பெற்றாலும், இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப வாசிக்கும் வாசகன் நெஞ்சில் நல்மாற்றத்தை விதைத்து விருட்சமாக்கும் வகையில் வரிகளை வார்த்தெடுத்து ஒரு நூலாவது வெளியிட்டு வெற்றி காண வேண்டும் என அனைவருக்குள்ளும் இருக்கும் ஏக்கம் என்னுள்ளும் துளிர்த்தது.
பெரும்பாலும் கதைகள் வாசிப்பில் மனம் கொண்ட ஈடுபாட்டால் சிறுகதைத்தொகுப்பு வெளியிட தீர்மானித்திருப்பேன் என்று எண்ணுகின்றேன்.
எனது ஏக்கத்தின் வெளிப்பாடே இந்நூல் வெளிவர பிள்ளையார் சுழி போட்டது. எனது ஏக்கம் எழுத்து வடிவம் பெற்று புத்தகமாக வெளிவர முழுமுதற் காரணமானவர் சகோதரர் தாழை இரா.உதயநேசன் அவர்கள். புத்தகம் வெளியிட வேண்டும் என்ற எனது ஆசையைக் கூறியவுடனேயே எந்தக் கேள்வியும் இன்றி அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி இப்புத்தகம் வெளிவர ஆணிவேராக இருந்தவர், அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
எனது முதல் வெளியீடான இந்த "புதைந்த பக்கங்கள்" நூலுக்கு குற்றப் புனைவு மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி அசத்தி வருபவர் , 50 ஆண்டுகளுக்கும் மேலாக க்ரைம் கதைகளின் முடிசூடா மன்னனாக வாசக நெஞ்சங்களில் வஞ்சமின்றி தஞ்சம் கொண்ட அற்புத எழுத்தாளர் எனது நேசத்திற்குரிய எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார் அவர்களின் அணிந்துரை மணிமகுடமாக அமைந்துள்ளது.
தனது அழகிய அணிந்துரையால் புதைந்த பக்கங்களை துயிலெழுப்பி உயிரும் உணர்வும் கொடுத்து உற்சாகமாக உலவச் செய்துள்ளார். அவரின் அணிந்துரை எனும் அருளாசி வரம் கிடைத்திட என்ன தவம் செய்தேனோ!!! எண்ணி எண்ணி வியக்கிறேன். அயராத எழுத்துப் பணிக்கிடையிலும் இச்சிறியவளின் வேண்டுகோளை ஏற்று ராஜேஷ்குமார் சார் அருளிய அற்புத அணிந்துரைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
எனது இந்நூலுக்கு உள்ளார்ந்த அன்புடன் தங்களது வாழ்த்துரைகளை வழங்கி மகிழ்வித்த அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனர், சிறந்த எழுத்தாளர்/கவிஞர் சகோதரர் தாழை இரா.உதயநேசன் அவர்களுக்கும்,
மரபு மாமணி, மரபு ஆசான், தசாவதானி சகோதரி சரஸ்வதி பாஸ்கரன் அவர்களுக்கும்,
மனிநேயப் பண்பாளர், எழுத்தாளர்/கவிஞர் என பன்முகத் திறமையாளரான சகோதரர் சிவமணி அவர்களுக்கும்,
முகநூல் குழுமங்களில் என்னை அறிமுகப்படுத்தி புதுமுகமாக அறிமுகமான நாளிலேயே அமிர்தம் & கதம்பம் குழுமத்தில் நிர்வாகியாக அமர வைத்து அழகு பார்த்து எனது எழுத்தாற்றல் வளர மிளிர காரணமான எழுத்தாளர்/கவிஞர் எனது மதிப்பிற்குரிய குருஜி சத்யா ஸ்ரீராம் அவர்களுக்கும்,
பல எழுத்தாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்து சாதனை நாயகனாய் வலம் வரும் தன்னம்பிக்கை நாயகன் எழுத்தாளர்/கவிஞர் தோழர் மணிஎழிலன் அவர்களுக்கும்.
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
முனைவர்.மோ.பாட்டழகன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆராய்ச்சி மைய நிறுவனர், வசந்தா பதிப்பகம், சென்னை - அவர்களுக்கும் எனது அகம்நிறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறப்பான வடிவமைப்புடன் எனது முதல் கதைக்குழந்தையை கைகளில் தந்த அச்சகத்தாருக்கும் மற்றும் அதன் குழுவினருக்கும் எனது மனதினிய நன்றிகள்.
என்னுடைய எழுத்துப் பயணத்தில் உற்ற துணையாய் இருந்ததோடு என்னுள் தைரியம், தன்னம்பிக்கை தனை விதைத்து வளர்த்த எனது தாய்-தந்தைக்கும், அகக்கருவில் எனைச் சுமக்கும் இரண்டாம் அன்னையான எனது கணவருக்கும், எனக்கு சேயாய் வந்து தாயாய் தாலாட்டும் அன்பு மகள் சபரிஸ்ரீக்கும், எனது இரு சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருக்கும், குடும்ப உறவுகளுக்கும், வார்த்தைகளால் மட்டுமின்றி உள்ளார்ந்த அன்புடன் தங்கையாக ஏற்று ஏற்றம் பெறச் செய்த கவியுலகப் பூஞ்சோலையின் நிறுவனர் அன்பு அண்ணன் அமரர்.ஒரத்தநாடு நெப்போலியன் அவர்களுக்கும், என் உடன் பணிபுரியும் ஆசிரிய-அலுவலர்கள், முகநூல் உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் தந்து ஊக்கப்படுத்திய அமிர்தம், தமிழ்ச்சேவை, ஊ.ல.ழ.ள., கதம்பம், கவியுலகப் பூஞ்சோலை, படைப்பு, செந்தமிழ்ச்சாரல், மழலையின் தமிழ், கவிதைச்சாரல் சங்கம், கவிதைப்பெட்டகம் மின்னிதழ் குழுமம், தென்குமரிக் கவிதைக்களம் இன்னும் இருக்கும் அத்தனை குழுமங்களுக்கும் மற்றும் அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை நிர்வாக இயக்குநராக அமர வைத்து கௌரவித்த குழும நிறுவனர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.
என் மீது நம்பிக்கை கொண்டு எனது சிறுகதைகளை தொடர்ச்சியாக பிரசுரித்த மக்கள் தாரகை மாத இதழ் ஆசிரியர் அவர்களுக்கும், பூஞ்சோலை மின்னிதழ் இணை ஆசிரியராக அமர வைத்து ஆற்றலை மேம்படுத்திய ஆசிரியர் அவர்களுக்கும், கவிதைப்பெட்டகம் & யாதுமாகியவள் மின்னிதழ் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த எழுத்து மட்டும் தான் என்னுடையது அதற்கு பின்னால் எனது குடும்பத்தின் உழைப்பு, தியாகம், கண்ணீர், அன்பு என எத்தனையோ இருக்கிறது.
என்னுடைய எழுத்துப் பயணத்தில் உற்ற துணையாய் இருந்ததோடு என்னுள் தைரியம், தன்னம்பிக்கை தனை விதைத்து வளர்த்த எனது தாய்-தந்தைக்கு இந்நூலினை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ரேணுகா ஸ்டாலின்
Post a Comment