அணிந்துரை
சிந்தனைத் தூறல்கள்
எல்லைகளற்ற கவிதையின் பயணத்திசைகள் புதிய புதிய வடிவங்களோடு கிளை விரித்தாலும் ஒரு நூற்றாண்டு கடந்து சிறப்பு அம்சங்களோடு தமிழ் ஹைக்கூ கவிதைகள் தடம் பதித்து வருகின்றன. நூற்றுக்கணக்கான கவிஞர்களின் தமிழ் ஹைக்கூ கவிதைகள் 5/7/5 என்கிற மரபுவழியிலிருந்து மாறுபட்டு தமிழ் மண்ணுக்கேற்ற கலாச்சாரம் மற்றும் வாழ்வியலோடு நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
அமெரிக்கா முத்தமிழ் ஹைக்கூ பேரவை கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை தொகுத்து “ சிறகு முளைத்த வானம் “ எனத் தலைப்பிட்டு அற்புதமாக வெளியிட்டுள்ளது கலை உதயம் பதிப்பகம். இதில் 108 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்டுள்ளன. பல சென்றியூ வகைமை கவிதைகள் இருப்பதும் நூலுக்கு அழகு சேர்க்கிறது.
கவிஞர்களின் அத்துணை கவிதைகளும் ஒவ்வொருவருடைய கவிதைகளையும் இங்கே குறிப்பிட்டு பாராட்ட விரும்புகிறேன். இருப்பினும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இங்கே சில சோற்று பருக்கைகளை மட்டுமே உங்களது ரசனைக்கு அளிக்கிறேன். மற்ற கவிஞர்கள் பொறுத்தருள்க என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேயமுடன் எழுதும்போது அங்கு சமூக அவல நிகழ்வினைக் குறிப்பிடத்தானே வேண்டும்... இந்த நிலையில் ....
அறுவடை வயல்
தண்ணீரில் மூழ்கின
நிவாரண அறிவிப்பு
தாழை இரா.உதயநேசன் அவர்களின் ஹைக்கூ நூற்றுக்கு நூறு பொருத்தமாக உள்ளது.
இயற்கையுடனான இயைந்த வாழ்வுக்கு இதோ அழகியலோடு ஒரு ஹைக்கூ ..... புல்வெளிக்குள்
வெறுங்கால்களால் நடந்தேன்
எத்தனையெத்தனை
பனிமுத்தங்கள்
மு.முருகேஷ்
மூன்று வரிகளை ஹைக்கூ போல் சுமந்து செல்லும் அணில் குறித்தும் இங்கே ஹைக்கூக்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன...
மல்லிகைக் கொடி
மெல்ல மெல்ல கீழிறங்கும்
பழம் பறித்த அணில்
ஜெய வெங்கட்
இலை மறைவில் கனி
தெளிவாகத் தெரிகிறது
கொறிக்கும் அணில்
கோவை சரவணன்
ஏழ்மையில் வளர்ந்தாலும் சூழல் மாணவர்களை நன்கு கல்விபயில வைக்கிறது என்பது நிதர்சனம்...ஆனால் பொருளாதார நெருக்கடி இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுகிறதே...என் செய்வது ? மனதை உலுக்குகிறதே இந்த ஹைக்கூ ....
அடகு கடையில்
கோப்பையோடு நிற்கிறான்
முதல் மாணவன்
எம்.எம்.நிஜாமுதீன்
எனக்கு இந்த நூல் முழுக்க தமிழ் நிலத்தின் வாழ்வியலை படம்பிடித்துக் இப்படியே...எதை எடுத்துக்கொள்வது எனத் திக்கு முக்காடிப் போன காட்டியது.
மேலும் சில ஹைக்கூக்கள் உங்களது ரசனைக்கு...
மாலை நேரத் தென்றல்
மனம் வருடுகிறது
குழந்தையின் பாடல்
க.அய்யம்மாள்
பாழடைந்த சுவர்
அழகாக காட்சியளிக்கும்
யாசகனின் ஓவியம்
க.குணசேகரன்
அமோக விளைச்சல்
வீடு வந்து சேர்ந்தது
கை வளையல்
நாகலட்சுமி இராஜகோபாலன்
பல ஹைக்கூ முன்னோடிகள் முதல் இன்றைய இளைய தலைமுறை கவிஞர்களின் ஹைக்கூக்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. சிந்தனைத் தூறல்களை அள்ளித் தெளிக்கின்ற ஹைக்கூக்கள், சென்றியுக்கள் நிறைந்த இந்த சிறகு முளைத்த வானம்' அனைவரது கரங்களிலும் தவழவேண்டிய ஒன்று என்று சொல்வதோடு இந்நூலை அலங்கரித்துள்ள அனைத்துக் கவிஞர்களையும் பாராட்டி மேலும் ஹைக்கூ உலகில் முத்திரைப் பதிக்க மனதார வாழ்த்துகிறேன்.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்,
சென்னை.
Post a Comment