வாழ்த்துரை
புல்மேல் பனித்துளியாய் வெயில் பட்டதும் கரைந்து ஆவியாகும் நீரல்ல ஹைக்கூ. ஆலம் விழுதென கிளை பரப்பி புதுப்பொலிவுடன் புத்துணர்வூட்டும் சக்தியும், யுக்தியும் கொண்டது ஹைக்கூவும் அதன் கிளை வடிவங்களும்.
14ம் நூற்றாண்டில் மலர்ந்து 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டினுள் கால் பதித்து தன் கவிவடிவத்தால் தன்னிகரில்லா வளர்ச்சியடைந்த கற்பக விருட்சம் ஹைக்கூ.
வாசிப்பை நேசிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கி தன்பால் மயக்கும் மாயவிந்தை ஹைக்கூ கவிதைகளுக்கே உண்டு என்பதையறிந்து அதற்கென அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை என தனியாக ஓர் குழுமம் தொடங்கி ஓராண்டிற்குள் 99 போட்டிகளை நடத்தி சிறப்பாக கவி எழுதியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பது என்பது சாதாரண விசயமல்ல.
அப்படியொரு சிறப்பான சாதனையைத்தான் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார் நமது அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை குழுமங்களின் நிறுவனர் சகோதரர் முனைவர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்கள் என்றால் அது மிகையல்ல.
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை தொடங்கி ஓராண்டு நிறைவுறும் அழகிய தருணத்தில் குழுமத்தின் 100வது போட்டியைச் சிறப்பிக்கும் விதமாக 100 கவிஞர்களின் தலா 25 கவிதைகள் தொகுத்து நூலாக வெளியிட பேரவா கொண்டு தொடங்கிய பணி 108 கவிஞர்களின் 2700 ஹைக்கூ கவிதைகள் அடங்கிய பன்னாட்டு கவிஞர்களின் கவிவரிகள் தவழும் சாதனை நூலாக 06/11/22 அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை குழுமங்களின் முதலாம் ஆண்டுவிழாவில் மலரவிருக்கிறது.
இந்நூல் மலர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கரங்களில் தவழ்ந்து மணம் பரப்ப அடிக்கல் நாட்டினார் நமது நிறுவனர் சகோதரர் முனைவர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்கள். ஆணிவேர் நிறுவனர் ஆயினும், அதற்கு உறுதுணையாக இருந்து திறம்பட செயலாற்றி சாதனை தொகுப்பு நூல் நூலாக்கம் பெற பேருதவியாக இருந்த நமது அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவையின் நடுவர்கள் சகோதரர் கவிநிலா மோகன் அவர்கள், சகோதரர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் சகோதரி பாண்டிச்செல்வி கருப்பசாமி அவர்கள் ஆகிய மூவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமகிழ் பாராட்டுக்கள்.
மூவடியில் உலகளந்தான் வாமனன் மூவரியில் உலகாளும் மாயவன் ஹைக்கூ என்ற அற்புத உணர்வோடு மனக்கிடங்கின் எண்ணங்களை மூவரியில் அடக்கி அழகிய காட்சியாக்கி ஹைக்கூ கவிதைகள் படைத்து இந்நூலில் இடம்பெறும் படைப்பாளிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
உலக அளவில் பன்னாட்டு கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கவித்திறனை வெளிக்கொணர்ந்து உயர்வடையச் செய்யும் அற்புதமானதொரு குழுமத்தில் நிர்வாக இயக்குனராக மகுடம் சூட்டி அழகு பார்த்ததோடு முழு சுதந்திரம் அளித்து செயலாற்ற வாய்ப்பளித்த நிறுவனர் அன்புச் சகோதரர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்களுக்கும், என்னோடு பயணிக்கும் நடுவர் பெருமக்களுக்கும், கவியுறவுகளுக்கும் நன்றி & நல்வாழ்த்துகள்.
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பன்னாட்டு கவிஞர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருந்து சீரோடும் சிறப்போடும் செயலாற்றவும், நமது நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர்கள் கொண்டாடும் மாபெரும் விழாவாக அமைந்து அனைவரும் கொண்டாடி மகிழவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.
தமிழை நேசிப்போம்!
தமிழையே சுவாசிப்போம்!
வாழ்த்துக்களுடன்,
ரேணுகா ஸ்டாலின் M.A., B.Ed., PGDCA.,
நிர்வாக இயக்குனர்,
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை,
பட்டிவீரன்பட்டி.

Post a Comment