தலையில் பல்லி விழுந்தால் கலகமா? கவலை வேண்டாம். பரிகாரம் இருக்குது.
பல்லி நம்முடைய வீட்டில் வசிக்கும் ஒரு உயிரினம். அந்த பல்லி சில நேரங்களில் நம்மீது விழுந்து விழும்.
சுப காரியங்களுக்கு போகும் போது பல்லி ஒசை எழுப்பும். சில நேரங்களில் பல்லி ஒலி எழுப்புவது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா? பல்லி தலையில் விழுந்தால் கலகம் வருமா? என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.
வீட்டிற்குள் பல்லி இருப்பதை கண்டாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதை அடித்து வீட்டை விட்டு துரத்தினால் மட்டுமே பலரது மனம் நிம்மதியாகும். ஆனால், ஜோதிட ரீதியாக வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துரத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு.
நம்முடைய வீட்டிற்குள் விஷ பூச்சிகள், வண்டுகள், கொசு போன்றவை நுழையும் போது அவற்றை சாப்பிட்டு நம்மை காப்பாற்றுகிறது பல்லி. எனவே பல்லிகள் நம்முடைய வீட்டில் இருப்பது நன்மைதான். பல்லிகளால் பாதிப்பு எதுவும் இல்லை நன்மைதான் அதிகம். நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள்
பண்டைய காலங்களில் பல்லியைப் பற்றி கௌளி சாஸ்திரம் என்று படித்திருக்கிறார்கள்.மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் பல்லிகள் மூலம் உணர்த்துவதற்கு கடவுள் அனுப்பிய ஒரு உயிரினம்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்குள் பல்லியை பார்த்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை அதிகம் உண்டு. இன்றைக்கும் அட்சய திருதியை நாட்களில் பல்லியை பார்த்தால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம்முடைய தலையில் விழுந்தால் கலகம் நடக்கும் என்று சொல்வார்கள். தலையில் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நடக்கும். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம். மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும். காதின் இடது பக்கம் பல்லி விழுவது லாபம். வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.
மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் அது சுகம். வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் லாபம். கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை. தோளின் இடது, வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி தேடி வரும். வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம். முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் வரும் எனவும் முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் நோய் பாதிப்பு ஏற்படும். கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு வரும். தொடையில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பிருஷ்டத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம். வலது பிருஷ்டத்தில் பல்லி விழுந்தால் சுகம் வரும். பல்லி நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் விழுந்து விட்டால் உடனே பயப்பட வேண்டாம். தலையில் பசும்பால் ஊற்றி தேய்த்து குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வணங்கலாம். கோவிலுக்கு போக முடியாவிட்டால் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வணங்கலாம் தோஷங்கள் நீங்கும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள தங்க பல்லியை தரிசனம் செய்தால் பல்லியால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
Post a Comment