அன்பு சூழ் உலகில் ஆபத்தில் நம்மை தற்காத்துக் கொள்ள அன்பு மட்டுமே போதுமா


ஆயுதம் தரிப்பதா அன்பை அறிவதா.

அரைநிர்வாணப் பக்கிரியாய்

அன்பின் வழி நின்று

அகிம்சை முறையில் சென்று

ஆனந்தம் பொங்கிட 

அனைவரும் மகிழ்ந்திட

சுதந்திரம் பெற்றுத் தந்த

தேசப்பிதா இன்றிருந்தால் . . .


அன்பை அறிவதாலோ

அகிம்சை வழியில் செல்வதாலோ

பயனேது மில்லை யிங்கு

ஆயுதம் தரிப்பதே 

தேவை என்றி ருப்பார் . . .


நம் தேசத்தைக் காத்திட

கையில் கைத்தடியோடு

ஏராளமாய் ஆயுதங்கள்

ஏந்தி யிருப்பார்

எதிரிகளை தாக்கி

தராளமாய் தக்க பதிலடி

தந்துபின் தடைகளின்றி

நாட்டைக் காத்திருப்பார் . . .


போதி மரத்தடி யிலமர்ந்து

நமக்கு போதனை செய்து

சாதனை நாயகனாய்

நம்முள் உறைந்திருக்கும்

புத்தன் இன்றிருந்தால் . . .


அன்பின் வழியில் சென்றால்

பித்த னாவாய் நீ - சித்தம்

தெளிந்திடு மானிடா

இம்மண்ணில் வாழ்ந்திட

அயுதம் தரிப்பதே

நல் அறனடா என்றி ருப்பார் . . .


பொல்லாங்கு செய்வோரை

பொசுக்கி யழித்திட

போதனைகளை விடுத்து

போர்க் கலைகளை 

பயிற்றுவிக்கும் கூடாரமாக

போதி மரத்தடியை 

மாற்றி யிருப்பார் 

ஆயுதங்களை கையாளும் 

புதுப்புது யுக்திகளை 

அசராது நமக்கு போதித்திருப்பார் . . .

 

சரித்திர அரியணையில் 

நல் சான்றாக வீற்றிருக்கும்

சங்ககால காப்பியமாம்

மணிமேகலையின்

காப்பிய நாயகி இன்றிருந்தால் . . .


அமுதசுரபி தனை யெடுத்து 

அனைவரின் பசிப்பிணி 

போக்கிடும் துறவர 

வாழ்வதனை விடுத்திருப்பார் . . .


பெண்மையை பேணாது

அவள் கற்பினை களவாடி

சிற்றின்ப சீண்டலில்

பேரின்பம் கொண்டதா யெண்ணி

பேடியாய் வாழ்வோரை யழித்திட

ஆயுதம் தரிப்பதே

நான் வேண்டும் ஓர் 

வரம் என்றி ருப்பார் . . .


அவ்வரம் பெற்றிடவே

நீண்ட நாள் தவம் 

மேற் கொண்டிருப்பார் 

அள்ள அள்ளக் குறையா

ஆயுதம் அருளிடும் அற்புத

கலயம் ஒன்றினை 

வேண்டி யிருப்பார்

அதைக் கொண்டே நம்

அகிலத்தை காத்திருப்பார் . . .


"வாடிய பயிரைக் 

கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று 

பாடி பாரினில் உயர்ந்தவர்

சத்திய ஞான சபை நிறுவி

சாதிய பாகுபாடுகளைச் சாடியவர்

திருவருட்பிரகாச வள்ளலார்

இன்றிருந்தால் . . .


சாதிய சாக்கடையில் வீழ்ந்து

சந்ததிகளை அழித்துக்

கொண்டிருப் போரை காத்து

மீளாத் துயரிலிருந்து மீட்டெடுக்க

ஆயுதம் தரித்தலே

அன்பாளன் எந்தன் அறிவுரை

என்றுரைத் திருப்பார் . . .


சாதிகள் அற்ற சமுதாயத்தை

சகத்தினில் சமைத்திடவும்,

சத்தியத்தைக் காத்திடவும்

பதுமைகளாய் வாழாமல்

வாழும் முறைமை யுணரும்படி

புதுமைகளை புகுத்தி யாவர்க்கும்

புரிந்திடும்படி ஆயுதம் தரித்தலே

சிறந்ததென செப்பியிருப்பார் 

நம் சிந்தை தெளிய வைத்திருப்பார்  . . .


அகமெங்கும் அன்பை விதைத்து

முகமெங்கும் புன்னகை நிறைத்து

தடுமாறி டாமலும், தடம் மாறிடாமலும் 

தரணியில் வாழ்ந்து உயர்ந்திட

அநீதிகள் மட்டுமே அரங்கேறி

அசுர வேகத்தில் வளர்ந்துள்ள

அகிலமதை மீட்டு நல்லிசை மீட்டிட 

ஆயுதம் தரித்தலே

நல்லறிவு என்றறிவோம் . . .


அன்றாட வாழ்வை போராடி வென்றிட 

தொடர் அநீதிகளை கொன்று குவித்திட

அமைதி யெங்கும் அகலாது 

நிலை நாட்டிட

அகிலத்தில் என்றும் நின்று நிலைத்திட

அன்பை அறிவதற்கு முன்

ஆயுதம் தரித்தலே

நல்லறிவு என்றறிவோம் . . .


            *ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment