ஹைக்கூ - Hykoo

 


#ஹைக்கூ_சிதறல்கள்


1. மழையே வராதே

தீவிர வேண்டுதல்களுடன்

அறுவடை நேரத்தில் விவசாயி


2.. ஓயாத அலைகள் 

ஒன்றோடொன்று உரசிக் கொள்கின்றன

கரை சேர்ந்த கிளிஞ்சல்கள்


3. அந்தத் தார்ச்சாலையை 

ஓட்டமும் நடையுமாக கடந்து செல்கிறார்

வெறுங்காலுடன் செருப்பு தைப்பவர்


4. கடும் சூறாவளிப் புயல்

சிறிதும் பாதிப்பின்றி

அலையாத்திக் காடுகள்


5. பசியோடு வந்திருக்கும் அப்பா

திட்டிக்கொண்டே சமைக்கிறாள்

நெடுந்தொடரில் மூழ்கிய அம்மா


6. விளைந்த நெற்கதிர்கள்

வெட்டி எறியப்பட்டன

வேலியோர களைகள்


7. பத்திரிக்கை செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்தும்

அரசியல் பின்னணி


8. கிராமப் பஞ்சாயத்து

மிக நேர்த்தியாக நடக்கிறது

பெண் பஞ்சாயத்து தலைவரின் 

கணவர் ஆணைப்படி 


9. கணிதப் பாடம்

ஆர்வமுடன் கற்கிறான்

கைப்பேசியில் ஆடுபுலியாட்டம்


10. தேடலின் முடிவில் 

மீண்டும் தொடங்கியது

மற்றுமோர் தேடல்


11. உயர்ந்த மரம்

வளைந்து உள்ளது

மரம் வெட்டுபவன் முதுகு


12. அமைச்சர் வாகனம்

ஆர்ப்பாட்டம் இன்றி கடந்து செல்லும்

நினைவஞ்சலி ஊர்வலம்


13. போன்சாய் மரத்தடியில்

புதிதாய் முளைத்துள்ளது

 புத்தர் சிலை


15.. காணாமல் போன சிறுமி

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்

கிடைத்தது சிறு தடயம்


15 அழகிய மணற் சிற்பம்

கலைந்த பின்பும் நிலைத்திருக்கும் 

சிற்பியின் கலைத்திறன்


16. மழைப்பொழிவு குறைவுதான் 

ஆயினும் செழிப்பாகவே 

மா விளைச்சல் 


17.கோடை மழை

கூடிக் குறைந்தபடியே

தாக்கும் வெப்பம் 


18. குறட்டைச் சத்தம்

அதிகாலையில் கேட்கும்

கோயில் மணியோசை


19. மாணவிகள் தற்கொலை

தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்

பாலியல் வன்கொடுமைகள்


20. அடுக்குமாடிக் குடியிருப்புகள் 

விலை பேசப்படுகின்றன

விளை நிலங்கள்


21. கருவறைச் சிற்பம்

கைக்கூப்பி வணங்கச் செய்யும்

சிற்பியின் கைவண்ணம்


22. பலத்த காற்று

திசை தெரியாமல் செல்லும்

நூலறந்த பட்டம்


23. ஊர்த்திருவிழா

மனதிற்கு நிறைவைத் தருகிறது

நிறைவேறிய வேண்டுதல்


24. ஏந்திய கைகளில்

ஏகத்துக்கும் நிறைந்துள்ளன

வறுமையின் ரேகைகள்


25. சிக்கிய மீன்கள்

காய்ந்து கொண்டு இருக்கின்றன

கரையோரத்தில் வலைகள்


            *ரேணுகா ஸ்டாலின்*


0/Post a Comment/Comments