ஆழ்மனதின் அழகிய ஸ்வரமே
பண்ணைப்புரத்து ராசனே
பண்ணிசைக்கும் வேந்தனே
விழிமையின் நிறத்தோனே
எளிமையின் நாயகனே/
நின் கைவிரல் எனும்
கருவறையில்
கணந்தோறும் நடக்குது
கானப் பிரசவமே/
கணக்கும் இதயமும்
நின்னிசை கேட்டதும்
காற்றில் பறக்கும்
காகித மாகிடுதே/
சில்லென்று இசைபாடி
செவிப்பறையை சிறைபிடித்து
சிந்தை தனை சீராக்கி
செழிப்பாக்கியவனே/
நந்தவனப் பூக்களெல்லாம்
நற்றவம் செய்திடுதே
நின்னிசை கேட்டு
நர்த்தனம் ஆடிடவே/
ரணப்பட்ட இதயத்திற்கு
ராகத்தால் மருந்திட்டு
புதுரத்தம் பாய்ச்சிடுதே
நின்னிசைப் பாட்டு/
பக்திக்கும் புத்திக்கும்
பாட்டுக் கட்டியவனே
மனசைக் கட்டிப்போட்டு
பூட்டியவனே/
பாதைமாறிப் போனவனும்
உன் இசை போதையால்
நல் பாதையில் வாழத்
துடிப்பானே/
கார்முகில் வானமும்
நின்கான மழையில்
நனைந்திடத் துடித்திடுதே/
மூடாத இமைகளும்
நின் தேவகானம் கேட்டிங்கே
கண்மூடி நல் கனாக்கள்தான்
கண்டிடுதே/
தாலாட்டு கேட்காத
தத்தைகளும் இங்குண்டு
நின்கானம் கேட்காத
தமிழனும் இங்குண்டோ!!
நித்திரை இழந்து வாடி
நீர்க்குமிழிக்குள் அடைபட்ட
நிசப்த பொழுதுகளும்
நின்னிசையால் நிம்மதி
கண்டிடுதே/
முற்றும் துறந்த முனிவனும்
நின்னிசையால் நிற்கிறானே
முதல் காதல் பூத்த நாணத்துடனே/
இன்னுமென் பிறவி கொஞ்சம்
நீளட்டுமே - நின்னிசை கேட்டபடி
நிம்மதி பெருமூச்சிட்டு வாழ்ந்திடவே/
காந்தக் குரலில் கவர்ந்து இழுத்து
துள்ளிசையிலும் மெல்லிசை கலந்து/
தெள்ளு தமிழில் தெம்மாங்கு கொடுத்து
தாலாட்டுப் பாடும் தாயாக வந்து/
உன் இசையால் உயிரில் நுழைந்து
எங்கள் மூச்சுக்காற்றை
மொத்தமாய் குத்தகை எடுத்து
கும்மாளமிடும் ராக"தேவனே
தமிழ்த்தாயின் தன்னிகரில்லா
தவப் புதல்வனே/
தமிழனின் நெஞ்சில்
நிறைந்த இளைய ராஜனே
என்றென்றும் நீ தானய்யா
இசைக்கு ராஜா/
வானெனும் ஏடெடுத்து
கடல்நீல மையெடுத்து
காலமெல்லாம் எழுதினாலும்
தீர்ந்திடாது தொடரும் அய்யா
நின்புகழ்!
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன் இசை 🎵 கேட்கும்
வரம் கேட்டு தவமிருக்கிறோம்
வாரி வழங்கிடுங்கள்
நல்வரத்தை சுவாசிக்க
காத்திருக்கிறோம் உங்கள்
கானத்தை . . !
பிரியமுடன்,
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment