#முத்தமிழறிஞர்_கலைஞர்_பிறந்தநாள்
#வாழ்த்துக்கவிதை
முத்துவேலரும் அஞ்சுகமும்
பெற்றெடுத்த பெருஞ்சொத்து
தன்னிகரில்லா தலைமகனை
தமிழ்த்தாய்க்கு தத்துக்கொடுத்து
புன்னகை புன்முறுவலோடு
தண்டவாளத்தில் தலை வைத்து
தமிழ் வளர்த்த மொழிப் பற்றாளர்
தென்னகத்து தாகூராம்
நம் கலைஞரை முத்தமிழறிஞரை
உலகிற்கு அற்பணித்து
உலகத் தமிழர்கள் நெஞ்சில்
நிறைத்து மறைந்த
தங்களுக்கு நன்றிகளோடும் வணக்கங்களோடும்
#முத்தமிழும்_கலைஞரும்
முத்தமிழை உயிராக, நேசித்து
சுவாசித்து வாழ்ந்த பைந்தமிழே!
இயல், இசை, நாடகம் அத்தனையும்
உனக்கு கைவந்த கலையே
சின்னஞ்சிறு வயதிலேயே
போராட்ட களம் பல கண்ட போராளியே! முக்கடலின் எழுச்சி சிலையே!
அரசியலோ ஐந்து முறை சூட்டியது
முதல்வர் மாலையே
உலகோர் போற்ற உயர்ந்த
ஏழைகளின் உதய சூரியச் சோலையே
பெரியாரின் போர்வாளே
அண்ணாவின் பொறிவாளே
என்றென்றும் உன் பெயர் சொன்னால்
எதிரிகள் அச்சத்தில் விழிபிதுங்கி நிற்பாரே
மொழியையும், இனத்தையும், தம் இருகண்களென காத்த காவலரே
பராசக்தி, பூம்புகார், மலைக்கள்ளன்,
மனோகரா வென இன்னும் எத்தனை எத்தனையோ நின் எச்சங்கள்
தொட்டது தமிழின் உச்சங்களே
அனல்தெறிக்கும் வசனத்தில்
எதிரொலித்த கரவொலியில்
கன்னித்தமிழ் வளர்த்தவரே
மென்மையான காதல் கவி வரியில்
மதி மயங்கிய பாமரனையும்
எழுத்தாளனாக எழ வைத்தவரே
நல் சிந்தையே புது விந்தையே
சிலேடை உரையாடலில் தரணி
போற்றும் தமிழ்த் தந்தையே
கொஞ்சுதமிழ்ப் பேசி தமிழ்
நெஞ்சமதை ஈர்த்து
பகுத்தறிவுப் பாதையிலே
பயணித்த செந்தமிழே
பைந்தமிழில் சென்னையென
பெயர் சூட்டிய சூரியச் சுடரே
அய்யன்திரு வள்ளுவர்க்கு
அலைகடலில் சிலை வைத்தவரே
அமிழ்தான நூல்களெழுதி பாமாலை
சூட்டி அன்னைத் தமிழுக்கு
அற்பணித்தவரே
முகவரியில்லா தமிழர்க்கு
முகமான தலைவரே முத்தமிழறிஞரே
நீவீர் இம்மண்ணில் இல்லையென்றாலும்
தமிழும், தமிழனும் உள்ள வரை
நின் பெயர் நிலைத்திருக்குமே
வாழிய நின் புகழ் வாழிய வாழியவே
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment