அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்

 அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி  இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன்  மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். 


இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில்  தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள்  அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு  அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.


அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல்  திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு  கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.


ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்.. இத்தனை சிறப்புகளா? ஆண்டாள் போட்ட உத்தரவு தெரியுமா?

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும். ஆண்டாள் அவதார தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த தேரினை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.

மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மகாவிஷ்ணுவின் 99வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாளின் அவதாரத் தலமான இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

முன்பொரு காலத்தில் இப்பகுதி வராக ஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டில் வில்லி, கண்டன் ஆகிய குறவர்கள் வசித்து வந்தனர். ஒருநாள் இருவரும் வேட்டைக்குச் செல்லும்போது, புலியால் கண்டன் உயிரிழக்கிறான். இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைந்து, ஒரு மரத்தடியில் கண்ணயர்கிறான். அவன் கனவில் தோன்றிய பெருமாள், கண்டன் உயிரிழந்த தகவலைத் தெரிவிக்கிறார். மேலும், காலநேமி என்ற அசுரனை வதம் செய்ய இப்பகுதியில் எழுந்தருளியுள்ளதாகவும், ஆலமரத்தடியில் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கப் போவதாகவும் தெரிவித்தார். காட்டுப் பகுதியை அழித்து நகரமாக மாற்றி, அதில் தனக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்யும்படி பெருமாள் கூறியதையடுத்து, இந்த ஊருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. மூலவர் ரங்கமன்னார் சுவாமியின் வலது கையில் தற்காப்பு கோல் இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் காலணி அணிந்து ராஜகோலத்தில் காட்சி அளிக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழா 9 நாட்கள் நடைபெறும். ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்றதோ, அதே அளவிற்கு இங்குள்ள தேருக்கும் சிறப்புகள் பல உண்டு. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாக பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்.

ஆண்டாள் அவதார தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த தேரினை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.
கோவில்களில் பொதுவாக சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இந்த கோவிலில் ஒரே தேரில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந் தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு ஆகும்.

ஆண்டாள் கோவில் தேர், தமிழகத்தின் 2வது பெரிய தேர் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று உள்ளது. பழங்காலத்தில் இருந்த தேர் சிதிலமடைந்த காரணத்தால், தற்போதுள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாராயணனார் என்ற ஜீயர் இருந்தார். அவருடைய கனவில் ஆண்டாள் தோன்றி, தனக்கு தேர் செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜீயர், "நானே தினமும் மண் பாத்திரத்தில் சாப்பாடு வாங்கி உணவு அருந்தி வருகிறேன். என்னால் எப்படி தேர் செய்ய முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பொருட்செல்வம் இல்லை" என்றார். அதற்கு ஆண்டாள், "உனக்கு வேண்டிய அத்தனையும் நான் தருகிறேன்" என கூறி விட்டு மறைந்தார்.

மறுநாள் காலையில் ஸ்ரீரங்கம் ஜீயருக்கு, பல்லக்கில் ஒரு ஓலை வருகிறது. அந்த ஓலையில் 'வானமாமலையில் பட்டம் ஏற்றுக்கொள்ள வரவும்' என கூறப்பட்டு இருந்தது. உடனே அந்த ஜீயர் ஸ்ரீரங்க பெருமாளிடம் போய் "நான் பட்டம் ஏற்றுக்கொள்ளலாமா?" என உத்தரவு கேட்கிறார். பெருமாளும் அதற்கு இசைவு தெரிவித்ததால், ஜீயர் அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் வானமாமலையில் ஜீயராக பட்டம் ஏற்க பல்லக்கில் செல்கிறார். அங்கு மொத்தம் 30 பட்டங்கள் உண்டு. ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். அதன்படி இவர் பட்டம் ஏற்ற பிறகு 'பட்டார்பிரான் ஜீயர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பட்டார்பிரான் என்பது பெரியாழ்வாரின் நாமம் ஆகும். அவர் பட்டம் ஏற்ற மறுநாள் பெரிய சூறாவளி காற்றடித்து, தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் தேக்கு மரங்கள் சாய்ந்தன. புதிய ஜீயர் பட்டம் ஏற்ற பிறகு இவ்வாறு அசம்பாவிதமாக மரங்கள் சாய்ந்து விழுகிறதே என ஊர்மக்கள் வருந்தினர். ஜீயரும் மனம் வருந்தியபடி பெருமாளிடம் சென்று இதுகுறித்து சொல்லி வழிபட்டார். அன்றைய தினம் இரவு ஆண்டாள் கனவில் தோன்றி, சாய்ந்த தேக்கு மரங்களை எல்லாம் சேர்த்து எனக்கு தேர் செய்ய வேண்டும்' எனவும், 'அதற்காகத்தான் நான் உனக்கு பட்டம் கொடுத்து உள்ளேன்' எனவும் கூறினார்.

ஆண்டாளின் உத்தரவுப்படி அந்த தேக்கு மரங்கள் அனைத்தும் யானைகள் மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு இந்த தேர் வடிவமைக்கப்பட்டது. 9 சக்கரங்களுடன் ஜீயர் தேரை வடிவமைத்தார். பின்னர் நாளடைவில் சக்கரம் முறிய ஆரம்பித்தது. ஆதலால் தேர் நிலைக்கு வர 6 மாதம் முதல் 8 மாதம் வரை ஆனது. 1970-1980ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு முறை ஆடி மாதம் தேரோட்டம் தொடங்கி ஐப்பசி மாதம் நிறைவடைந்துள்ளது. சுமாா் 4 மாதங்கள் கழித்து தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த 4 மாத காலமும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் இருந்ததாம்.

பின்னர் 1986ஆம் ஆண்டு இந்த தேருக்கு 4 பக்கமும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு சக்கரமும் 400 டன் எடை கொண்டது. இந்த சக்கரம் பொருத்திய பிறகு ஒரு வாரத்திற்குள் தேர் நிலைக்கு வந்தது. பின்னர் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி, புல்டோசர் எந்திரம் மூலம் தள்ளப்பட்டு, தற்போது தேர் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகிறது. இக்கோயில் தேரில் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்தத் தேரில் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டாளே உத்தரவிட்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்ட திருத்தேரோட்டம் ஆடிப்பூரம் நாளான்று கோலாகலமாக நடைபெற உள்ளது. தேரோட்டத்தைக் காண ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.

0/Post a Comment/Comments