யாருடைய நினைவாக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?தேசிய மருத்துவர் தின வாழ்த்துக் கவிதையோடு அறிந்து கொள்வோம்

 


யாருடைய நினைவாக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

தேசிய மருத்துவர் தின வாழ்த்துக் கவிதையோடு அறிந்து கொள்வோம்

கரம் கூப்பி வணங்கும் கடவுளரும்

கருவறைக்குள் சிறையிருக்க

மனித குலம் காத்திடும் அவதாரமாய்

அனுதினமும் துடிப்புடனே 

ஊன் உறக்கம் ஏதுமின்றி 

உயிர் காக்கும் உன்னத சேவையை 

உயிர் மூச்சாய் செயல்படுத்த 

உதித்த நவீன பிரம்மாக்கள் 

நம் மருத்துவர்கள் . . !


வந்த நோய் நீக்குவது மட்டுமின்றி 

நோய் வராமல் தடுக்கும் அவர்களின் 

அற்புத கண்டுபிடிப்புகளால்

பாற்கடலில் படர்ந்திருக்கும் 

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 

மறுபிம்பமாய் காட்சியளிப்பவர்கள்

நம் மருத்துவர்கள் . . !


நோய்த் தொற்றின் தாக்கம் அறிந்து 

அந்நோயின் தீவிரம் குறைத்து

அன்றாடம் மருந்து கொடுத்து 

அனுதினமும் பல நோயாளிகளை காத்து 

நோய்க்கிருமியை அழித்து 

ஒழித்திடும் செயலால் கயிலாயம் கட்டியாலும் முக்கண்ணன் அவனின் முழுவுருவமாக நிற்பவர்கள்

நம் மருத்துவர்கள் . . !


படைத்தல் , காத்தல் , அழித்தல் என

முத்தொழிலிலும் முத்திரை பதித்த 

அவர்களின் சேவை இந்நாள் போல் 

எந்நாளும் நமக்குத் தேவை 

அவர்களுடைய நல் ஆரோக்கியமும் 

ஆயுளுமே மனித குலத்தை 

நலமாக்கும் வாழ்க பல்லாண்டு 

மருத்துவர்களே . . !


மருத்துவத்தைத் தொழிலாகப் 

பார்க்காமல் சேவையாக எண்ணி 

தொண்டு செய்யும் அனைத்து 

மருத்துவர்களுக்கும் சமர்ப்பணம் . . !


                        *ரேணுகா ஸ்டாலின்*


தேசிய மருத்துவர் தினம் இன்று.


"பெரியவனானதும் நீ என்னவா ஆகணும்?" என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகள் கூறுவது, "டாக்டர்.." என்ற பதிலைத்தான்..!

ஏனென்று சிந்தித்தால் மருத்துவம் என்பது தொழில் அல்ல, அது ஓர் மகத்துவம்,மனம் மகிழ்ந்து செய்யும் மரியாதை மிக்க சேவை அதனால் தான்.

அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் மிகமிக உன்னதமானதாக கருதப்படுவது மருத்துவ சேவைதான். அதிலும் சமீபத்திய கொரோனா நோய்த் தொற்றின் போது தம் உயிரைப் பணயம்வைத்து மனித குலத்தையே காத்ததும் இந்த மருத்துவ சேவையும், மருத்துவர்களும் தான்.

அத்தகைய மருத்துவத்தை தனது வாழ்வாக ஏற்று, கடினமான தருணங்களில் எல்லாம் நம் கரம் பற்றி பிணிதீர்க்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் நன்நாள் இன்று.

நமக்கு உதவும் மருத்துவர்களுக்குத் தான் கட்டணம் கொடுத்து அவ்வப்போது நன்றியும் சொல்லி விடுகிறோமே பின்பு எதற்காக தனியாக ஜூலை 1 அன்று  தனியாக என்று கேட்கிறீர்களா.? அதற்கு நாம் டாக்டர் பி.சி.ராய் அவர்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..!


பிறருக்கு உதவும் பண்பு

பீகார் மாநிலம், பாட்னா அருகிலுள்ள பாங்கிபூர் கிராமத்தில், 1882 -ம்ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிரகாஷ் சந்திரராய் - அகோர்காமினி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் தான் பி.சி.ராய் எனும் பிதான் சந்திரராய். பிறந்தது என்னவோ அரச வம்சம்தான் என்றாலும் பிறக்கும் போது குடும்பம் வறுமையில் தான் இருந்தது.

செல்வம் இல்லாவிட்டாலும் அவரது தந்தை தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது குழந்தைகளுக்கும், சுற்றியிருந்த குழந்தைகள் பலருக்கும் கல்வியை அளித்தார்.

அப்படி சிறுவயதிலேயே கல்வியின் முக்கியத்துவத்தையும் பிறருக்கு உதவும் பண்பையும் தந்தையிடமிருந்து பெற்ற பிதான் சந்திர ராய், நன்றாகக் கற்றுத்தேர்ந்து இளநிலைப் பட்டம் பெற்ற பின்பு மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அவரை இயக்கிய வாசகமாக அவர் கூறிய வாசகம்

மருத்துவத்தில் நுழைவது சுலபமில்லாத அந்தக் காலத்தில், கடினமான நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ந்தபிறகு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.

கல்லூரியில் நுழையும் போதெல்லாம் கல்லூரி வாயிலில் எழுதப்பட்டிருந்த "மருத்துவம் என்பது கைகளால் மட்டும் செய்யக் கூடியதல்ல. அதைச் செய்வதற்கு கைகளோடு சேர்ந்த வலிமை மிகுந்த மனதும் தேவை.!” என்ற வாசகம் தான் வாழ்க்கை முழுவதும் பயணித்து தன்னை இயங்கச் செய்தது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் மிக உயரிய MRCP மற்றும் FRCS ஆகிய இரண்டு பட்டங்களையும் குறுகிய காலத்தில் ஒரே சமயத்தில் படித்துப் பெற்றார். நாடு திரும்பியதும் தாம் பயின்ற கொல்கத்தா கல்லூரியிலேயே பணிக்குச் சேர்ந்து மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிற்றுவித்ததுடன், மக்கள் சேவைக்கென தனது முழு நேரத்தையும் ஒதுக்கினார்.

அத்துடன் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) உருவாகவும், வங்காளத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் காசநோய், தொழுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனைகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.

காந்தியின் உற்ற நண்பராகவும், அவரது உடல்நிலை பாதித்தபோது உற்ற மருத்துவராகவும் துணை நின்ற டாக்டர் ராய், தாய்நாடு அடிமைத்தனத்தில் இருக்கும் போது, மக்கள் ஆரோக்கியத்துடன் நாடும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எண்ணி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

என்னதான் கவர்னராக, முதல்வராக, பணிபுரிந்து பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கினாலும், ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதை தனது வாடிக்கையாகவே வைத்திருந்தார்.

1962, ஜூலை 1-ம் தேதி தன் பணிகளை முடித்து பின் கடவுளை வணங்கியபடியே தான் பிறந்த அதே தினத்தில் தனது 80-வது வயதில் இயற்கை எய்தினார்.

தனது சொத்துகள் முழுவதையும் அறக்கட்டளைக்குத் தந்ததோடு, தனது இல்லத்தையும் மக்களுக்கு பரிசாகக் கொடுத்தார். அந்த இல்லம் தான் பின்னாளில் அவரது தாயாரின் பேரில் அகோர்காமினி மருத்துவமனையாக இன்றுவரை மக்களுக்காக இயங்கி வருகிறது.

டாக்டர் பி.சி. ராய் அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினமான இந்த ஜூலை1-ம் தேதியைத் தான் தேசிய மருத்துவர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். பி.சி.ராயின் நினைவாக இந்திய மருத்துவக் கவுன்சில், 1962-ம்ஆண்டிலிருந்து சிறந்த மருத்துவசேவை புரிந்து வரும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தும் வருகிறது.


0/Post a Comment/Comments