மலைக்கோட்டையில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா..! திண்டுக்கல் போனா இங்க விசிட் அடிக்க மறந்துடாதீங்க..!
Dindigul Hill Fort : திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேலே என்னென்ன கல்வெட்டுகள் உள்ளது என்பது குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
மலைக்கோட்டை என்றாலே ஒரு பிரபலமான சுற்றுலா தளம் என்பது தான் எல்லோருக்கும் நினைவில் வரும். ஆனால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள ஒவ்வொரு இடமும் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை என்னென்ன இருக்கிறது, எதற்காக உருவாக்கப்பட்டது, என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
திண்டுக்கல் மலைக்கோட்டை திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சி அலுவலகம் மெயின்ரோடு, காந்தி காய்கிறி மார்கெட் வழியாக நடந்து சென்றால் பிரமாண்ட மலைக்கோட்டை வரும்.
சுமார் 290 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டை சுமார் 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 372 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்து மலையேறி செல்ல 3 இன்ச்சுகள் உயரம் கொண்ட சிறிய அளவிலான படிக்கட்டுகள் மலை உச்சிவரை இருக்கும். இந்த படிக்கட்டுகள் வழியாக முந்தைய காலத்தில் யானைகள் கோயில் வரை சென்று வரும் என்று கூறுகின்றனர். இந்த படிக்கட்டுகள் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
மலையில் உள்ள 600 படிகளில் ஏறினால் பிரமாண்ட கிழக்கு நோக்கிய நுழைவாயில் வரும். இந்த நுழைவாயிலில் உள்ள பெரிய அளவிலான கதவு ஒன்று இருக்கும். மேலும் இந்த கதவு ஆட்சி காலத்தின் போது அடிக்கடி திறக்கப்பட மாட்டாது.
இந்தக் கதவின் கீழ்புறம் ஜன்னல் போன்ற சிறிய கதவு கொண்டிருக்கும் இந்த வழியாகவே மக்கள் கோட்டைக்கு சென்று வந்தனர். முக்கியமான பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த பெரிய கதவு திறக்கப்படும் என்று கூறுகின்றனர்.
இக்கோட்டையின் மடிப்பு போன்ற பாதுகாப்பு சுவர் செங்கல் மற்றும் கருங்கற்களால் நன்கு கோர்த்து கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைச் சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்பாட்டிற்காக மதில் சுவர் அரண்களில் பல அறைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென்புறம் நோக்கிய இரண்டாவது நுழைவாயிலின் வலது புறத்தில் படை வீரர்கள் தங்கும் அறைகள் இருக்கும். நுழைவாயிலின் கிழக்கு பகுதியில் குதிரை படைகள் மற்றும் வீரர்கள் தங்குவதற்காக 11 கொத்தளங்கள் உள்ளன.
திண்டுக்கல் மலைக்கோட்டை புரட்சி காலகட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து இறுதியாக 1790 ல் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி 1860 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேலே சென்றால் தண்ணீர் தேவைக்காக சேகரிக்கும் குளம் ஒன்று உள்ளது. அதேபோல் குளத்தில் அருகே விநாயகர் சிலை ஒன்று பாறையின் மீது கல்வெட்டுகளாய் செதுக்கப்பட்டு இருக்கும். மேலும் இந்த குளத்தின் அருகே சிறிய குகை போல இருப்பது சமணர் படுகை என்று கூறுகின்றனர்.
இதுபோல மலைக்கோட்டையில் மொத்தம் நான்கு இடங்களில் உள்ளது. இந்த நான்கு இடங்களும் திண்டுக்கல்லில் 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சமண சமையம் செல்வாக்குடன் இருந்ததை திண்டுக்கல் மலைக்கோட்டையில் கி.மு. 3ம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகள் ஓய்வெடுக்கும் அறை என்று கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேலே சென்றார் கோட்டையின் மேல் அமைந்துள்ள சிறைச்சாலை கூடங்கள் மிகவும் அச்சம் தருபவையாக இருக்கிறது. இரும்பு கதவை திறந்து உள்ளே நுழைந்தால் சிறு சிறு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
20 அறைகளைக் கொண்டு சிறை கூடங்களில் எவ்வித வசதி இல்லாமல் பகலில் சூரிய ஒளியும் இரவில் நிலவு ஒளி மட்டுமே இந்த அறைக்கு வெளிச்சம் தரும் வகையில், கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையின் மேற்கூரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய புகைப் போக்கி வழியாகத்தான் காற்று உள்ளேவரும்.
கோட்டையின் முகப்பில் பீரங்கி மேடைகள் மதில் சுவர்களின் அருகே குறிப்பிட்ட இடைவெளி விட்டு பீரங்கிகள் வைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த பீரங்கி மேடையில் 3 பீரங்கிகள் உள்ளன.
அதில் இரண்டு சுவற்றில் கம்பீரமாக நிற்கிறது. அதில் ஒன்று பீரங்கி வெடி குண்டுடன் எதிரிகளை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக காட்சியளிக்கிறது மற்றொரு பீரங்கி மண்ணில் புதைந்து கிடைக்கிறது.
மலைக்கோட்டையின் உச்சியில் கொடி மரத்துடன் கூடிய சிவன் கோயில்கள் விஜயநகர ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்டது என இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இதில் மையக் கோவில் மிக நுட்பமான செதுக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்புகளை கொண்டும், படைப்பு சிற்பங்களுடனும், விமானம் செங்கற்களால் நுணுக்கமான வேலைப்பாடுடன் இருப்பது இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் திண்டுக்கல்லின் தம்பிரானாருக்கு (சிவன்) நன்கொடை அளித்ததை பற்றிய செய்தி உள்ளது. மேலும் இந்த கோவிலின் அஸ்திவாரத்தில் அமைந்திருக்கும் கட்டிட கற்களில் பழங்கால கல்வெட்டுகள் பதிந்து இருப்பதையும் நாம் காண முடியும்
மேலும் இந்த கோவில் பின்புறம் ஆட்டுக்கல் போல் தோற்றமளிக்கும் ஒரு கல் இருக்கும். இதற்குப் பெயர் மழை மானியாகும் . அந்த காலத்தில் மழை பொழியும் பொழுது வெட்ட வெளியில் இதனை வைத்து எந்த அளவிற்கு மழை பெய்து இருக்கிறது என்பதை கணக்கிடுவதற்கு இதனை பயன்படுத்தி வந்ததாக கூறுகின்றனர்.
மேலும் மலைக்கோட்டையில் முக்கோணம் போன்ற அமைப்புடைய ஒரு பழங்கால கட்டிடம் இருக்கும். இந்தக் கட்டிடம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஆயுதக் கிடங்காக பயன்படுத்தப்பட்டது எனவும் கூறுகின்றனர்.
மலைக்கோட்டையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை எதிரிகள் சுற்றி வளைக்கும் தருணத்தில் இங்கிருந்து தப்பி சென்று திருச்சி மலைக்கோட்டைக்கும் தஞ்சை பெரிய கோலுக்கும், விருப்பாட்சி கோட்டைக்கும், நாமக்கல் கோட்டைக்கும் செல்வதாக பேச்சுக்கள் உள்ளது.
இத்துடன் மலைக்கோட்டையின் ஓரங்களில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பாளர் அறை மணிக்கூண்டு போல் அமைந்திருக்கும். இந்த கண்காணிப்பாளர் அறையில் உள்ளே சென்று பார்த்தல் 3 திசைகளை நோக்கிய துளைகள் இருக்கும். இந்தத் துறைகள் வழியாக கோட்டையின் கீழ் உள்ள அனைத்தையும் கண்காணித்து வருவதே கண்காணிப்பாளரின் வேலை என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க வருபவர்கள் ஒவ்வொரு கட்டிடங்களையும் நன்கு உற்றுக் கவனித்தால் ஏதாவது ஒரு கல்வெட்டுகளும் சிறிய அளவிலான சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து திண்டுக்கல் நகர் முழுவதும் தெரிவது கண்ணுக்கு இனிமையான காட்சியாக அமைந்திருக்கும்.
இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலைக்கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கல்வி சுற்றுலாவிற்காக வரலாற்று மாணவர்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
காலை 9 மணி முதல் 5 மணி வரை அனுமதிக்க படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் 25 கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வார விடுமுறையில் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
Post a Comment