காமராஜர் சிறுவர் பாடல் பாடி மகிழலாம் வாருங்கள்

 


காமராஜர் சிறுவர் பாடல் பாடலாம் வாருங்கள் குழந்தைகளே . . .

காமராஜர் பாடல் 1 :-

அன்பு உள்ளம் கொண்டவர்
அருமை காமராஜராம்
எல்லாரும் படிக்கவே
ஏற்ற வழி செய்தவர்.

பள்ளி செல்லும் பிள்ளைகள்
கால் வலிக்க நடக்காமல்
பக்கத்திலே படித்திட
பள்ளிகளைத் திறந்தவர்.

படிக்கும் நல்ல பிள்ளைக்கு
மதிய உணவு தந்தவர்
ஒரே நிறத்தில் சீருடை
ஒன்றாய் அணியச் சொன்னவர்.

காந்தி வழி நின்றவர்
உத்தமராம் காமராஜர்
நினைவை என்றும் போற்றுவோம்
பிள்ளைகளே வாருங்கள்!

காமராஜர் பாடல் 2 :-

விருதுநகர் தன்னிலே
வீரம் விளைந்த மண்ணிலே
விளைந்த பயிராம் காமராசர்!

இளவயதுக் கல்வியை
இழந்துவிட்ட போதிலும்
மனதின் வலிமை தன்னையே
மறந்து விட்டதில்லையே!

பத்திரிக்கை வாயிலாக
தெரிந்து கொண்டார் உலகினை!
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
முதல் அமைச்சராய் வந்தாரே!

வந்தபின்னர் ஓயவில்லை!
உறங்கவில்லை!
தொண்டு பல செய்தாரே!

தொடர்ந்து பல திட்டங்கள் தீட்டி
தொழில்துறையை வளர்த்தாரே!
ஏழைக்குழந்தையும்
ஏட்டுக் கல்வி பெற்றிட
இலவச உதவிகள் செய்தாரே!

கல்விக் கண்ணை திறந்தாரே
கடமையே கண்ணாக வாழ்ந்தாரே!
கண்டதில்லை இவரைப் போல்
கனிவு மிக்க தலைவரை!

உழைத்து உழைத்து ஓய்ந்ததால்
கடவுள் கொடுத்த ஓய்வினை
விரும்பி ஏற்று பறந்தாரே!
விண்ணுலகம் சென்றாரே!

காமராஜர் பாடல் 3 :-

வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!
வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!

காமராஜர் பாடல் 4 :-

தலைவனாம் தலைவனாம்
தமிழருக்கெல்லாம் தலைவனாம்
தன்னலமில்லாத் தலைவனாம்
தரணிபோற்றும் தலைவனாம்

சொல்லிக் கொடுத்த தலைவனாம்
சோறுபோட்ட தலைவனாம்
தன்னை என்றும் எண்ணாமல்
தளராதுழைத்த தலைவனாம்

நல்லா நாமும் படித்து
நாளும் அவனைப் போற்றுவோம்
கர்மவீரர் அவர் பெயரை
கன்னித்தமிழில் போற்றுவோம்.

காமராஜர் பாடல் 5 :-

கல்விக்குக் காமராசர்
குழந்தைகட்கு உணவ்ளித்தார்!
வெள்ளத்தில் வாடியோரை
விரைந்தோடி வாழ்வளித்தார்!
திறமையென ஏமாற்றல்
பெருமையில்லை உணரவைத்தார்!
அனைவ்ருக்கும் கல்வியுண்டு
அறிவுசால் பதவியுண்டு
திறமைவரும் தன்னாலே!
எல்லோரும் மன்னர்தாம்
மன்னரிவர் தொண்டர் என்றும்!

0/Post a Comment/Comments