#புரியாத_புதிர்
இத்தனை சாவிகள் இருந்தும்
இறுக்கிப் பூட்டிய உன் மனக்கதவை
திறக்க வழியின்றி தவிக்கிறேன் . . .
வகைவகையாய் சாவிகளை
மாட்டியவள் வாகாகத் திறக்கும்
சூட்சுமத்தையும் சொல்லியிருந்தால்
சற்று ஆசுவாசப் பட்டிருப்பேனே . . .
இப்போது பார் 👁️
சாவிகளின் கோளாறா!!! இல்லை
உன்மேல் நான் வைத்த
அன்பின் கோளாறா!!!
ஏதேதோ எண்ணி யெண்ணித்
துடித்துக் கொண்டிருக்கிறேன் . . .
ஏகாந்தப் பெருவெளியில் என்னைத்
துடிதுடிக்க விட்டு விட்டு நீ
எங்கோ சென்று விட்டாய் நானோ !!!
பிதற்றிக் கொண்டிருக்கிறேன் . . .
ஆமாம் சற்று நில்லடி சகியே
ஒன்று மட்டும் புரியவேயில்லை
சாவிகளை மரத்தில் மாட்டிய போதே
மனமும் மரமரத்துப் போகும்படி
செய்து கொண்டாயோ!!!
விந்தையான நின் செயல் கண்டு
சிந்தையில் துளிர்த்த மௌனங்களால்
கண்கள் நிலைத்து நிற்கின்றன
சாவிகளின் மீதே . . .
ஆயினும் நித்திரையிலும் நீங்கா
நின்மீதான அன்பின் பிணைப்பில்
மனம் லயித்து மௌனம் கலைத்து
எழத் துணிந்து விட்டேன் . . .
துருப்பிடித்த சாவிகளை எல்லாம்
தூக்கி எறிந்து விட்டு -
அன்பெனும் ஆயுதத்தால்
அத்தனை தடைகளையும்
தகர்த்தெறிந்து
தடம் பதித்திடலாம் மென்று . . .
ரேணுகா ஸ்டாலின்
Post a Comment