காடுகளின் பயன்கள் கட்டுரை

 


காடுகளின் பயன்கள் கட்டுரை

காடுகளின் பயன்கள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

முன்னுரை

வினாவும் விடையும்

காப்பதின் அவசியம்

காடுகளைக் காத்தல்

காப்பது கடமை

முல்லை நிலத்தின் சிறப்பு

இயற்கை இன்பம்

முடிவுரை

முன்னுரை: 

காடுகள் என்றவுடன் நம் கண் முன் காட்சியளிப்பன யாவை? ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள்; ஓடிக்கொண்டே இருக்கும் சிற்றாறுகள்; பசுமை மிகுந்திருக்கும் புற்கள்; பற்பலவகை மிருகங்கள்; பூத்துக் குலுங்கும் எழில் மலர்கள் ; விந்தை விந்தையான செடி கொடிகள் ; ஆம், இவையெல்லாம் தோன்றுகின்றன. அழகும் அமைதியும் கொலுவீற்றிருக்கும் காட்சிகளைக் காடுகள் தாம் வழங்குகின்றன. அக்காடுகளைப் பற்றி அறிவதும் இன்பம் ! அவற்றின் பயன்களைக் கூறுவதும் இன்பம்!

வினாவும் விடையும்:

காடுகளை ஏன் காக்க வேண் டும்? எங்ஙனம் காக்வேண்டும்? காப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை? காட்டுவளம் பேணாமையால் ஏற்ப டும் கேடுகள் யாவை? என்னும் வினாக்களை எழுப்புக. விடை வரும். மனத்தில் தெளிவுண்டாகும். இயற்கை அழகையும் அறிவையும் பெறலாம்.

காப்பதின் அவசியம்:

காடுகளை காக்க வேண்டியதின் அவசியத்தை அறியவேண்டுமல்லவா? அப்படியாயின், காடுகளுக்குப் போய்ப் பார்க்கவேண்டும். அங்கு வானளாவிய மரங்கள் மேகங்களை வேண்டுவதையும், மேகங்கள் தாய்மை அன்பால் தம்சேய்களாகிய மரங்களுக்கும், செடிகொடிகளுக்கும் அமிழ்தமாகிய மழையைப் பொழிவதையும் கண்குளிரக் காணுகின்றோம். அம்மழை பொழிவதற்குக் காரணம் காடுகளன்றோ! மழையின்றி மானிலத்தார்க்கு வாழ்வும் உண்டோ? மாமழை பெய்ய மரங்களையுடைய காடுகள் மிகவும் இன்றியமையாதனவாகும்.

காடுகளைக் காத்தல்:

மழை பொழிவதற்கு ஆதார மாக விளங்கும் காடுகளை, இயற்கை அழகைப் பேணிக்காக்கும் காடுகளை, மக்கள் தம் அறியாமையாலும் பொருளாசையாலும் அழித்தனர். அங்கு இயல்பாக வாழும் விலங்குகளையும் பிற உயிரினங்களையும் கொன்றனர். அவற்றால் இயற்கை அழகு குறைந்தது மழைவளம் குறைந்தது. மக்களின் வாழ்க்கைவளம் தேய்ந்தது. எனவே, காடுகளைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது. காடுகளைப் பேணத் தனித்துறையை அரசு ஏற்படுத்தியது. அதன்பயனாகக் காடுகள் வளம்பெற்றன.

காப்பது கடமை:

காடுகளால் நாம் அடையும் பயனகள் அளவற்றவை. அடுப்பெரிக்கும் விறகு முதல் அழகூட்டும் மரச்சாமான்கள் வரை வரை அனைத்தும் காட்டிலுள்ள மரங்களினால் அல்லவா கிடைக்கின்றன. நாட்டின் பொருளாதார வாழ்வுக்கு அவசியமான சந்தனம், மூங்கில், தேக்கு போன்ற மரங்களையும், செயற்கைத் துணிகள், தாள்கள் முதலியவை செய்வதற்கு உதவும் மரங்களையும் காடுகளன்றோ தருகின்றன! ஆதலின், காடுகளைக் காப்பது கடமையாகும்.

முல்லை நிலத்தின் சிறப்பு:

பண்டை நாளில் காடுகளை முல்லை நிலம் என்றனர்; அந்நிலத்தினர் திருமாலை வணங்கினர். அவர்களை இடையர்கள் என்றனர்; அவர்கள் ஆடுமாடுகளை மேய்த்தனர்; இல்லறமாம் நல்லறத்தைப்பேணினர்; எழில்மிக்க முல்லை மலரை விரும்பினர்; சூடினர்;  நல்ல மரங்களிலுள்ள கனிகளை உண்டனர். இன்பவாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கினர். அவர்களின் முயற்சியாலும் உழைப்பாலுமே நாடுகளும் நகரங்களும் உண்டாயின. வாழ்வும் வளமும் பெருகின.

இயற்கை இன்பம்:

முல்லை நிலத்திலே மாலை நேரங்களில் நாம் காணுவதென்ன? யானைகள் மலையடிவாரத்தை நோக்கிச் செல்லும் காட்சியிலே தாம் எவ்வளவு அழகு தோன்றுகின்றது! பறவைகள் எல்லாம் பறந்து கூடுகளை நோக்கிச் செல்லும்போது எழுப்பும் ஒலிகளில் தாம் எத்தனை விதங்கள் ! அந்திநேர மலர்களில் தாம் எத்தனை வண்ணங்கள் ! கன்றினை நாடி வரும் கறவைப் பசுக்களின் விரைவிலே தாம் எத்தனை அழகுகள் ! இவ்வந்திக் காட்சியிலேயே மனதைப் பறி கொடுக்காத மாந்தரும் உளரோ?

வீட்டில் உறைகின்ற போது அடைகின்ற அனுபத்தினும், காட்டில் அடைகின்ற அனுபவ இன்பத்தையே பண்டை நாள் முதல் மாந்தர் போற்றினர். இராமபிரான் காட்டில் வாழ்ந்ததை மறப்பவர் யாரே? பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த கதையை இன்னும் பேசுகின்றனரே! காடுகள் அல்லவா இயற்கையின் இன்ப ஏடுகளாக விளங்குகின்றன!

முடிவுரை:

காடுகளை வளப்படுத்த மக்கள் முயலுதல் வேண்டும். அரசினரும் பல்வேறு விதமான மரங்களையும், மருந்துச் செடிகளையும் வளர்க்கத் துணைசெய்ய வேண்டும். கடற்கரை ஓரங்களில் பொருள் வருவாய்க்கு உகந்த தென்னை, பனை போன்ற மரங்களை மிகுதியாக வளர்ப்பது நாட்டின் நலனுக்கு உகந்ததாகும். எனவே, 'காட்டு வளம் பேணுவோம் நாட்டு நலம் நாடுவோம்'' என்பதை மனத்திற் கொண்டு பணிபுரிவோமாக!

0/Post a Comment/Comments