சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு. அந்த வகையில் சனியின் காரகத்துவத்திற்கு ஒரு இயல்பு உண்டு. அந்த காரகத்துவத்தின் அடிப்படையில் தான் சனி பகவான் நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். அதிலிருந்து எப்படி நாம் விடுபடுவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். வாருங்கள் நண்பர்களே,
சனி கிரகத்தின் காரகத்துவமும் அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களும்
சனி ஒளியற்ற இருளை கொண்ட கிரகம்.
வாழ்வில் நடக்கும் மங்களம் இல்லாத விஷயங்களை சுட்டிக்காட்டும் கிரகம்.
சனிபகவானுக்கு முற்றிலும் எதிரான கிரகமாக செயல்படுபவர் சூரிய பகவான். சூரிய பகவான் ஒளியுடைய கிரகம்.
பொதுவாக ஜோதிட ரீதியாக பார்க்கும் போது சனி பகவான் மேஷ ராசியில் நீச்சமடைந்து வலுவிழந்து போகிறார். சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமடைந்து வலுவிழந்து போகிறார்.
சூரியனுடைய நேர்மறை காரகத்துவங்களை உங்களிடத்தில் கொண்டு வாருங்கள் நண்பர்களே எளிதாக இருள் உங்களை விட்டுச் சென்று விடும்.
சனி பகவான் மந்த கிரகம். சனிபகவான் ராசி கட்டத்தில் முழுமையாக வலம் வருவதற்கு சனிக்கு 30 ஆண்டுகள் பிடிக்கும். இதனால்தான் தடை, தாமதம், சோம்பல் போன்றவற்றிற்கு சனி காரகத்துவம் பெறுகிறார். முடிந்த வரையில் உங்களது எல்லா விஷயங்களையும் வேகமாக செய்யுங்கள் நண்பர்களே.
தினமும் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள்.
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பும் சூரியன் அஸ்தமனம் அடைவதற்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்றி வாருங்கள். இதன் மூலம் உங்கள் இல்லத்திலும் வாழ்க்கையிலும் ஒளியை கொண்டு வாருங்கள்.
நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுங்கள். ஒவ்வொரு கணத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லி வாருங்கள் நண்பர்களே.
ஒரு விஷயத்தை மிக மெதுவாக செய்பவர்கள் மற்றும் ஒரு செயலுக்காக நீண்ட நேரம் கால விரயத்தை செய்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களது வேலையை விரைந்து முடிக்க உதவுங்கள்.
சனி தூய்மையின்மை, அழுக்கு போன்றவற்றிற்கு காரக கிரகமாக இருப்பவர். அதனால் உங்கள் வீட்டை எப்போதும் நீங்கள் தூய்மையாக வைத்திருங்கள் நண்பர்களே. உங்களது இல்லம் மட்டுமின்றி உங்களது உள்ளமும் தூய்மையாக இருக்கட்டும்.
சனி மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், யாருமற்ற ஆதரவற்றவர்களை சுட்டிக் காட்டக் கூடிய கிரகம் ஆவார். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாருங்கள் நண்பர்களே.
சனி தடைகளுக்கான கிரகம். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு நீங்கள் எந்த விதத்திலும் தடையாக இருக்காதீர்கள் அது உங்கள் வாழ்வை பெரிதாக பாதித்து விடும். நீங்கள் பயணிக்கும் பாதையில் முள்,கற்கள் போன்ற தடைகள் இருந்தால் கூட அவற்றை தூரம் ஒதுக்கி போட்டு செல்லுங்கள். பின் வருபவர் யாரேனும் செய்யட்டும் என்று கடந்து செல்லாதீர்கள் நண்பர்களே.
தொழிலுக்கு காரகத்துவமாக செயல்படுபவர் சனி. நீங்கள் முதலாளியாக இருக்கக் கூடிய பட்சத்தில் பிறருக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்யாதீர்கள். அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை தக்க தருணத்தில் வழங்கிவிடுங்கள் இல்லையெனில் சனியின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.
சனி நமது பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிக்க விடாமல் தடை செய்யக்கூடிய கிரகம். அதாவது நமது கர்ம பலன்களை நிர்ணயம் செய்பவர் ஆவார்.
நீங்கள் சில நேரங்களில் உணர்ந்து இருப்பீர்கள் ஏன் நமக்கு இந்த பிரச்சனை இந்த நேரத்தில் வருகிறது. நம்மால் ஒரு காரியத்தை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லையே என்று நினைத்து இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களின் தீர்க்கப்படாத பழைய கர்மாவினால்தான் சனி பகவான் உங்களது செயல்களை தடை செய்கிறார்.
முடிந்த வரையில் நிகழ்கால வாழ்க்கையில் உங்களது புண்ணிய செயல்களை அதிகப்படுத்துங்கள் நண்பர்களே,
காஞ்சி மகா பெரியவர் அவர்கள் கூறுவது என்னவென்றால் “ஒரு பாவச் செயலை தெரிந்தே செய்ய நேர்ந்தால் அதற்கு ஈடாக நான்கு புண்ணிய செயல்களை செய்து விட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
புண்ணியம் என்பது என்ன? மனிதர்களுக்கு செய்வது மட்டும்தான் புண்ணியமா? அப்படி இல்லை
அஃறிணை உயிரினங்களுக்கு உணவளிப்பது கூட புண்ணியம்தான் மறந்து விடாதீர்கள். அஃறிணை என்பது மரம்,செடிகள்,கொடிகள், விலங்குகள்.
மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு காரகமாக செயல்படுபவர் சனி பகவான் ஆவார். அதாவது குழம்பி விடுவது, குழப்பத்தை ஏற்படுத்துவது இந்த மாதிரி… உங்கள் மனதை சமநிலையுடன் வைத்துக் கொள்வது முக்கியம். அப்போதுதான் அதிலிருந்து விடுபட முடியும். உங்களைச் சுற்றி மனம் மற்றும் உடல் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சனி சந்தேக புத்தி, நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை,எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கான காரகத்துவமாக செயல்படுபவர். உறவுகளை சந்தேகப்படாதீர்கள். உங்களை யாரிடமும் ஒப்பீடு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் நண்பர்களே.
நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள் நண்பர்களே.
வாழ்க்கையின் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். வெற்றி உங்களுக்கே.
உங்களது இஷ்ட தெய்வத்தை முழுமையாக நம்புங்கள் வழிபாடு செய்யுங்கள்.
தீபம் ஏற்றுவதை பற்றிய விளக்கம்
நீங்க நிறைய சொன்னீங்க ஆனா அதுல ஒன்னு புரியவே இல்லையே? ஏன் தீபம் ஏத்த சொன்னீங்க? நம்மில் பலர் இப்படி கேட்பார்கள் அல்லவா அவர்களுக்கான ஒரு ஜோதிட ரீதியான விளக்கம் இதோ,
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையிலும் இருக்கும் ஒரு இறை வழிபாடு தீபம் ஏற்றும் முறையாகும். மகான் வள்ளலார் கூட “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று கூறுகிறார். அந்த அளவிற்கு தீபத்திற்கு சக்தி உண்டு.
இறைவனை வழிபட காணிக்கை, நேர்த்திக்கடன் என்று நீங்கள் அள்ளி வழங்கத் தேவையில்லை.
ஒரு காரியம் நிறைவேற, துன்பங்கள் விலக, பல சங்கடங்கள் இருந்தாலும் அவை வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டில் பூஜை அறையிலோ கோவிலிலோ இறைவன் சன்னதி முன்பாகவோ அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வழிபட்டால் போதும் இதில் 9 நவகிரகங்களும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது நண்பர்களே.
அகல் விளக்கு ➨ சூரியன்
நெய் அல்லது எண்ணெய் ➨ சந்திரன்
திரி ➨ புதன்
விளக்கில் எரியும் சுடர் ➨ செவ்வாய்
சுடரில் உள்ள மஞ்சள் நிறம் ➨ குரு
சுடரின் கீழே விழும் நிழல் ➨ ராகு
தீபத்தால் பரவும் வெளிச்சம் ➨ கேது (ஞானம்)
எரிய எரிய திரி குறைவது ➨ சுக்கிரன் (ஆசை)
சுடர் அணைந்தாலும் இருக்கும் கருமை ➨ சனி
குறிப்பு:
அகல் விளக்கு ஏற்றுவதின் தத்துவம் நாம் நமது ஆசையை குறைத்துக் கொண்டால் வாழ்வில் இன்பம் என்னும் வெளிச்சம் பரவும்.
மேற்குறிப்பிட்ட வாழ்வியல் பரிகாரங்களை நீங்கள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் சனியின் பிடியிலிருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு கோச்சார ரீதியாக வரும் சனிப்பெயர்ச்சி மற்றும் உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்துள்ள நிலை இதன் மூலம் வரும் பாதிப்புகள் குறையும்.
Post a Comment