#உள்ளுணர்வு {சிறுகதை}
(அன்னையின் அன்பு)
"கடைசியா முகத்த பார்க்கறவங்க பார்த்துக்கலாம் என்ற வெட்டியானின் குரல் நொடிக்கொரு முறையாக திரும்ப திரும்ப ஒலித்து ஓய்ந்தது".
தந்தையை சிறுவயதிலேயே இழந்தும் தந்தை இல்லாத குறையே தெரியாமல் தன்னை வளர்த்த தாயின் இறப்பு சத்யாவின் மனதை ஆறாத ரணமாய் அழுத்திக் கொண்டிருந்தது.
சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து மனம் முழுக்க வலிகளுடன் கண்ணீர் பெருக்கெடுக்க தன் தாயின் சிதைக்கு தீமூட்டி விட்டு மயானக்கரையில் இருந்து உயிரிழந்த உடம்பாக வீடு வந்து சேர்ந்தான் சத்யா.
வீடு முழுவதும் சொந்தபந்தங்கள் ஆங்காங்கே நிறைந்திருக்க சிலரது முகத்தில் மட்டும் சோகரேகை இழையோடிக் கொண்டிருந்தது.
அதை எதையுமே கவனிக்காதவனாய் தன் அறைக்குச் சென்றவன் எதிலும் மனம் செல்லாமல் மனமெங்கும் வெறுமை நிறைந்திருக்க தன் தாயின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
அவன் படுத்திருந்த அறையின் அமைதியை குலைக்கும் விதமாக திடீரென ஓர் சத்தம் கேட்க கண் திறந்த சத்யாவிற்கு தன் அறையிலிருந்த மின்விசிறி தான் அந்த சத்தத்திற்கு காரணம் என புரிந்தது.
சத்யாவின் நினைவுகள் சில நாட்கள் பின்னோக்கிச் சென்றது.
டேய் சத்யா அந்த ஃபேன் ல எப்பபாரு ஒரு சத்தம் வந்துட்டே இருக்கு டா அதக்கொஞ்சம் மாத்தினா என்னடா என்ற தன் தாயிடம்.
எதாவதொரு காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான் சத்யா.
"அன்றிரவு சத்யா பணி முடித்து வீடு திரும்பியதும் அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே மீண்டும் அவனது தாய் டேய் அந்த ஃபேன்ல ஏதாவது நட்டு தான் லூசாகி இருக்கும் அத டைட் பண்ணா போதும் இந்த மாதிரி சத்தம் வராதுனு நம்ம எதிர்த்த வீட்டு சங்கிலி சொன்னான்டா".
"செத்த சிரமம் பார்க்காம அந்த ஃபேன சரிபண்ணிடு ராசா காலம் போன கடைசில எம்மேல விழுந்தா பரவாயில்ல நான் பெத்த மவராசா உம்மேல விழுந்து ஏதாவது ஆகிட்டா என்னயா செய்வேன் என்று கண்ணீர்மல்க கூற".
"சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யா பதறிப்போய் என்னம்மா இப்படியெல்லாம் பேசற அந்த ஃபேன மாத்தணும் அவ்ளோ தான என்றவன்".
தன் ஃபோனை எடுத்து டேய் சரத் நம்ம அண்ணாச்சி கடைல வாங்கி வச்சிருக்க அந்த புது ஃபேன எடுத்துட்டு வா அம்மா ரூம்ல மாட்டிடலாம் என்றான்.
பத்து நாட்களாகியும் இன்று வரை அதை மாட்ட நேரம் அமையாமல் போனதை எண்ணி தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தத் தொடங்கினான் சத்யா.
திடீரென ஓர் குரல் "என்ன ராசா இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு வந்து தண்ணிய குடி" என்று கேட்க,
சட்டென நிஜவுலகிற்கு மீண்டவன் அமைதியாக எழுந்து அடுக்களை நோக்கி தண்ணீர் குடிக்க செல்ல சத்தமிட்டுக் கொண்டிருந்த ஃபேன் தன் சத்தத்தை நிறுத்திக் கொண்டு சத்யா படுத்திருந்த கட்டிலின் மேல் விழுந்து உடைந்தது.
சத்யா உட்பட வெளியில் இருந்த உறவினர்கள் காதிலும் ஃபேன் விழுந்த சத்தம் கேட்க.
ஆங்காங்கே சிறு சலசலப்பு சத்யா மேல சரோஜா உசுறயே வச்சிருந்தாலே புள்ளைக்கு ஏதாவது ஆக விட்ருவாளா.
அதனால தான் படுத்திருந்த புள்ள ஃபேன் விழப்போற நேரத்தில தண்ணி குடிக்க எழுந்திருக்கான், வா ராசா வந்து உட்காரு என சத்யாவின் கைகளைப்பற்றி சொம்பு நிறைய தண்ணீரைக் கொடுத்து அமர வைத்தனர்.
அப்போதும் வெளியில் அதே சத்தம் "என்ன ராசா இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு வந்து தண்ணிய குடி" என்று விரைவாக எழுந்து சன்னல் வழியே எட்டிப் பார்த்தான் சத்யா.
பக்கத்து வீட்டுக்கார பாப்பாத்தியம்மா சாப்பிட அடம்பிடிக்கும் தன் பேரனிடம் என்ன ராசா இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு வந்து தண்ணிய குடி என்று கூறிக் கொண்டிருந்தாள்.
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment