short stories for kids tamil

 

           


                                                        

Short stories for kids 

1. தன்னம்பிக்கை கதை

2.   அரண்மனை எலி

3.   மன்னிப்போம். மறப்போம்

4.   நிதானம் அவசியம்

5.   வீண் பழி போடாதே!

6.   வேண்டாம் கோபம்

7.   கைவிடாத நம்பிக்கை

8.   நல்லதையே செய்வோம்

9.   அலட்சியம் வேண்டாம்

தன்னம்பிக்கை கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.கோட்டைக் கதவுகளைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கைகள் வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். 'போட்டியில்  தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும், உயிரில்லையே' என்று கூறி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத்  திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டை கதவுகளில் தாழ்பாள் போடப்படவில்லை. திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள். அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

அரண்மனை எலி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான்.அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? சஎன்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டள. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் எதுக்கு இவ்வளவு சிரமம் படனும் மகாராஜா .

எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான்.மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார். உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான்.அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு.ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான். உடனே இளவரசுருக்கு ஈரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

மன்னிப்போம். மறப்போம்

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி  எறியுங்கள் என்று கட்டளையிட்டார். வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள்! ராஜா ஒப்புக்கொண்டார்.

அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார். அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான். அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான். பத்து நாட்கள் முடிந்தது. வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார். அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின. இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்! இதைப் பார்த்து திகைத்த அரசன், "என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான். வேலைக்காரன் பதிலளித்தான்,

"நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை. நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!" அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார். நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம். ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை. தவறு செய்வது மனித சுபாவம். இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம். மன்னிப்போம். மறப்போம்

நிதானம் அவசியம்

ஒரு பைத்தியக்காரன் மீது கருணை கொண்ட சீடன், அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான். குரு சொன்னார்.. "அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவை, நீரை அருகில் வையுங்கள் ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம். பசித்தால் வாரிய எடுத்து சாப்பிடுவார். அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம், நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்" என்றார். அவர் கத்துவார், கற்களை வீசுவார் ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர். அந்த பைத்தியக்காரனுக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது. நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியக்காரன், "எனக்கும் தியானம் கற்று தருவீர்களா?" என்று கேட்டான். இது இன்றும் திபெத்திய புத்தமடாலயங்களில் நாடாகும் சிகிச்சை முறை. "எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்" என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள். "மற்றவர் பார்க்கவில்லை என்றல் பைத்தியக்காரத்தனங்கள் வளர்ந்துகொண்டே போகாது"!!! தர்க்கம் பண்ணாதீர்கள்..... நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி.... நம் அமைதியே அதற்கு பட்டினி....!! அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகும் ஒரு வேலை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை...!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள்....!! நிதானம் நீளமானது.....!!

வீண் பழி போடாதே!

ஒரு அரசன் ஒரு புலவருக்கு விருந்தளித்து கொண்டிருந்தான். அப்பொழுது வானில் கழுகு ஒன்று பாம்பைத் தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அதையறியாமல் அரசன் அந்த உணவை அந்த புலவருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் துடித்துப் போனான்! புலவரின் மரணம் அவனை வேதனையில் ஆழ்த்தியது. கர்மாக்களுக்கான வினைபயன்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தருக்கு, இக் கர்மவினைப் பயனை யாருக்குக் கொடுப்பது? என்று குழப்பமாகிவிட்டது. கழுகிற்கா? பாம்பிற்கா?அல்லது அரசனுக்கா?

கழுகு, பாம்பைத் தூக்கிக் கொண்டு சென்றது அதன் தவறில்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றமும் இல்லை. அரசனுக்கோ, உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனறியாமல் நடந்தச் செயல். எனவே யாருக்கு இந்தப் பாபம் போய் சேரும்! என்று சித்ரகுப்தருக்கே முடிவெடுக்க முடியவில்லை. இதைப்பற்றி யமதர்மரிடமே கேட்போம் என்ற தன் குழப்பத்தைக் கூறினார்! சித்ரகுப்தர். சித்திரகுப்தர் கூறியதைக் கேட்ட யமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும்! அதுவரை பொறுமையாக இரு! என்றார்.

ஒரு சில நாட்கள் கழித்து, மற்றொரு புலவர் அரசனின் உதவியை நாடி வந்தார். அவர் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் வழி கேட்டார். அப்பெண்மணியும் அவருக்கு சரியான பாதையை கூறிவிட்டு, இந்த அரசன், இரக்கமற்ற கொடியவன்! புலவர்களை கொல்பவன்! அவனிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்! என்றாள். இவ்வாறு அவள் கூறி முடித்ததும், அடுத்த நொடி சித்திரகுப்தருக்கு தெளிவு பிறந்து விட்டது. புலவரை கொன்ற கர்மாவின் வினை பயன் முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று முடிவெடுத்தார். எவ்வாறு......?

மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்தும் பொழுது அந்தப் பாபம் முழுவதும், பழி சுமத்துபவருக்கே வந்து சேரும். "உண்மையை அறியாமல் அபாண்டமாகப் பிறர் மீது பழி சுமத்துவோரும், தெரிந்தே வீண் பழியைப் பிறர் மீது சுமத்துவோரும் அந்தந்த கர்மவினைகளின் பயன் முழுவதும் வந்து சேரும்! அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்". எந்தவொரு விஷயத்தையும் திரித்து, பொய் சொல்லி, மற்றவர்கள் மீது பழி சுமத்தும் ஒவ்வொருவரும், அதற்கான வினைபயனை அனுபவித்தே தீர வேண்டும்! என்பது நியதி.

எனவே, உண்மைகளை மட்டுமே சொல்லுவோம்! நன்மைகளை மட்டுமே பெறுவோம்! பிறரது சாபத்தையும், பழியையும் வீணே நாம் பெற்றுவிடக் கூடாது. எனவே பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதைத் தவிர்ப்போம். எனவே தேவையற்று பிறரது பாபங்களை நாம் சுமக்காதிருப்போம். அனைத்தும் இறை மயம். எல்லாம் இறைவனின் செயல்.

வேண்டாம் கோபம்

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது . ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறையஆணிகளையும் கொடுத்தார். இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்.

முதல் நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன், இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டுவிட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து  காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய் ,சுவற்றில்  உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இதுபோல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா ? அந்த இளைஞன் வெட்கித் தலை  குனிந்தான்.

கைவிடாத நம்பிக்கை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன...... மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது......!! காற்றைக் கண்டதும் ........ 'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது , நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

'அன்பு' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை 'எதிர்க்க முடியாது ' என்று அணைந்துவிட்டது. 'அறிவு ' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது. நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். 'அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்து கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது 'கவலைப்படாதே நான் இருக்கின்றேன் ...... என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள்' என்றது. சிறுவன் உடனே....... நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து "உன் பெயர் என்ன ?" என்று கேட்டான்..... 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.

நாம் எப்போதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது.........!!

நல்லதையே செய்வோம்

தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்து கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புது துணியை எடுத்தார் ....... அதை அழகிய பளபளக்கும் புதிய கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே போட்டுவிட்டு துணியைத்  தைக்கலானார். துணியை  தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் "அப்பா! கத்தரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. " அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது..... மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.... அது ஏன்..?" என்று கேட்டான். அதற்கு அவர் "நீ சொல்வது உண்மை தான்..... கத்தரிக்கோல் அழகாகவும்..... மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.... அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறியதாகவும்  மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவருடைய உருவத்தை வைத்தோ, பணத்தை வைத்தோ அல்ல". நல்லதையே செய்வோம்......! நல்லவர்களாக வாழ்வோம்......!!

அலட்சியம் வேண்டாம்

ஒரு கிராமத்தில் இரண்டு பேர் புதிதாக முட்டை கடை திருக விரும்பினர். இருவரும் தங்களுக்கு தேவையான முட்டைகளை பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்க மாட்டு வண்டியில் கிளம்பி சென்றனர். முதலில் முட்டை வாங்கி வைக்க இருவரும் பெட்டிகளை வாங்கினர். முதலாமவன் 10 ரூபாய்க்கு பெட்டி வாங்கினான். இரண்டாமவன் 10 ரூபாய்க்கு பெட்டியும் 2 ரூபாய்க்கு பூட்டும் வாங்கினான். இதை பார்த்த முதலாமவன், இவன் எதற்கு தேவையில்லாமல் 2 ரூபாயை வீணாக்கி பூட்டு வாங்குகிறான் என்று நினைத்துக் கொண்டான்.

இருவரும் தங்களுக்கு தேவையான முட்டைகளை வாங்கிவிட்டு மாட்டு வண்டியில் கிராமத்திற்கு கிளம்பினர். வெயில் கடுமையாக இருந்ததால் போகும் வழியில், மரத்தடியில் மாட்டுவண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் பக்கத்திலிருந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்றனர். தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வரும் போது, குரங்குகள் பூட்டு போடாத பெட்டியை திறந்து முட்டைகளை எடுத்து வீசி நாசமாக்கி கொண்டிருந்தன. இருவரும் குரங்குகளை விரட்டி அடித்து விட்டு வண்டியை பார்த்த போது, பூட்டு போட்ட பெட்டியிலுள்ள முட்டைகள் பத்திரமாக இருந்தன.

பூட்டு போடாத பெட்டியில் இருந்த பாதி முட்டைகள் உடைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த முதலாமவன், 'ஒரு சிறிய பூட்டு போட்டிருந்தால் நமது முட்டைகளும் பத்திரமாக இருந்திருக்குமே' என்று வருத்தப்பட்டான்.

சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.

 

0/Post a Comment/Comments