#நான்_கொஞ்சம்_திமிர்பிடித்தவள்
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
எட்டு மாதத்தில் எட்டு வைக்கும்
குழந்தைகள் - நானோ
எட்டு வயதில் தான் எட்டு வைக்க
தொடங்கினேன் . . .
எத்தனை முறை வீழ்ந்தாலும்
விழுந்த அடுத்த நொடியே எழுந்து
ஏளனம் செய்வோரை எட்டியுதைத்து
வாழ்வில் எட்டா உயரத்தைத் தொட
போராடிக் கொண்டிருப்பதால்,
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள் . . .
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
அதிகார அரிதாரம் பூசிக்கொண்டு
அவ்வப்போது தேவைகளுக்காய்
அன்பைப் பொழிவது போல் ஏமாற்றும்
எவரிடமும் அடிமையாகாமல்
உண்மை அன்பிற்கு அடிபணிந்து
அகிலத்தில் வாழ்வதால்
இல்லையில்லை அகிலத்தை ஆள்வதால்,
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள் . . .
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
ஏற்றங்கள் காண முற்படும்
தருணங்களில் எல்லாம் வந்து
முட்டுக்கட்டை போடும்
முட்டாள்களின் பேச்சைக் கேட்டு
மூலையில் முடங்கிடாமல்
முன்னேறும் முனைப்புடன் செல்வதால்,
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள் . . .
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
புறமுதுகில் குத்தும் குணத்தோடு
தேன்தடவிய சொற்களில்
விஷத்தை விதைக்கும்
வித்தையறிந்த வீணர்களைக்
கண்டும் காணாமல் தடைக்கற்களைத்
தகர்த்தெறிந்து தன்னம்பிக்கை
விதைகளை விதைத்து
வேரூன்றச் செய்வதால்,
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள் . . .
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
எனது குறைகளை நிறைகளாக்கி
பலவீனங்களை பலமாக மாற்றி
வலிகளை வலிமையாக்கி
முயற்சியை பயிற்சியாக்கி
தடுமாற்றம் வரும் போதும்
தடம் மாறிடாமல் சென்று
தன்னம்பிக்கையை தாரக மந்திரமாக்கி
உண்மை அன்பிற்கு அடிமையாகி
உறவுகளின் உன்னதம் உணர்ந்து
வாழ்வியலின் எதார்த்தங்கள் ஏற்று
அல்லனவற்றை நீக்கி
நல்லனவற்றைக் தெளிந்து கற்று
நட்பின் இலக்கணம் புரிந்து
காதலின் மேன்மை அறிந்து
உள்ளொன்றும் புறமொன்றுமாய்
பேசாத பெரும்பேறு பெற்றதால்
நான் கொஞ்சம் திமிர்பிடித்தவள்
#அந்த_திமிருக்கே_பிடித்தவள் . . .
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment