தமிழ் சிறுகதை (tamil sirukadhai)

 


#வாழ்க்கை_வாழ்வதற்கே (சிறுகதை)

என்னைய விடுங்க அத்தை நான் சாகறதுதான் நல்லது, என்னால நம்ம குடும்பத்துக்கே அவமானம் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்த தன் நாத்தனார் மகள் சக்தியை கட்டுப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது சஞ்சனாவிற்கு. 

எப்படியோ சமாதானம் செய்து தூங்க வைத்தாள். அதன்பின் தன் கணவன் சத்யாவிற்கு போஃன் செய்து சக்தியின் நிலை பற்றிக் கூறிவிட்டு அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

சஞ்சனா... சஞ்சனா... இரவுநேரம் என்பதால் சத்யாவின் குரல் அந்த பதற்றத்திலும் கனீரென்று கேட்டது.

அரக்கபறக்க ஓடோடி வந்து கதவைத் திறந்தவளை சற்றும் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று சக்தியின் அருகே அமர்ந்து அம்மு என்றான் மெல்லிய குரலில். 

அருகில் நின்றிருந்த சஞ்சனாவிற்கு அக்குரல் கேட்டிருக்குமா சந்தேகம்தான்.

சக்திக்கு கேட்டு இருக்கிறது பதறிப்போய் எழுந்தவள் மாமா என் வாழ்க்கையே போச்சு மாமா என்று அழத் தொடங்கினாள்.

மெல்ல அவளது தலையை வருடிக் கொண்டே என்ன? ஆச்சு அம்மு மாமா கிட்ட சொல்லு என்றான். 

முதலில் தயங்கியவள் பின்பு நடந்தவற்றை சொல்லத் தொடங்கினாள்.

காலேஜ் டூர் போன இடத்துல என்று ஆரம்பிக்கும் போதே தொண்டை கம்மிக் கொண்டு வந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவள் குளிக்கும் போது யாரோ? புகைப்படம் எடுத்து இணையத்தில் பரவ விட்டதைப் பற்றிக் கூறினாள்.

கேட்டதும் சத்யாவிற்கு கோபம் உச்சத்திற்கு போனது. அதை அடக்கிக் கொண்டு அதுக்காக சாக முடிவு எடுக்கலாமா அம்மு. நாங்கலாம் நீ இல்லாம எப்படி வாழ்வோம்னு யோசிச்சியா என்றான் சிறு அதட்டலோடு.

தேம்பிக் கொண்டே காலேஜ்ல எல்லாரும் எவ்வளவு அசிங்கமா பேசினாங்கனு தெரியுமா? மாமா.  உங்க எல்லாருக்கும் பெரிய அவமானம் நான் செத்து போறேன் மாமா அப்போ தான் உங்க எல்லோருக்கும் நல்லது என்று சொல்லிக் கொண்டே தன்னை பூப்போல தாங்கும் தன் தாய்மாமன் முன்னாலேயே கத்தியை எடுத்து கை நரம்பினை அறுத்துக் கொள்ள முயற்சித்தாள்.

துடிதுடித்துப் போன சத்யா கத்தியை தட்டிவிட்டு சக்தியை ஓங்கி அறைந்தான். நிலை குழைந்து கீழே விழுந்தவள் சற்று நேரத்தில் தூங்கிப் போனாள்.

சில மணித்துளிகள் யோசனையில் ஆழ்ந்த சத்யா, நடு இரவு என்று பாராமல் அலைபேசியை எடுத்து தன் நண்பனான சப்-இன்ஸ்பெக்டர் சரத்திற்கு போஃன் செய்து நடந்தவற்றை கூறினான்.

ஏன்டா மச்சான் இவ்வளவு டென்ஷன் ஆகுற என் கிட்ட சொல்லிட்டேல விடு நான் பார்த்துக்கிறேன். நீ சக்தியை கவனமா பார்த்துக்கோ என்று கூறி தேற்றிவிட்டு அலைபேசியை துண்டித்தான்.

உடனடியாக புலனாய்வைத் தொடங்கி சில மணிநேரங்களில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பரவவிட்ட விசமிகளை கண்டுபிடித்து லாக்அப்பில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டியதோடு, அத்தனை புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கினான்.

உடனடியாக சத்யாவை தொடர்பு கொண்டு  போஃன ஸ்பீக்கர் ல போடுடா மச்சான் என்றான்.

சத்யா ஸ்பீக்கரில் போட்டதும் பேசத் தொடங்கிய சரத், சக்தி மா உன்னோட போட்டோ எல்லாத்தையும் டோட்டலி ரிமூவ் பண்ணியாச்சு. இந்த கேவலமான செயல செஞ்ச அந்த ராஸ்கல்ஸ் இப்போ லாக்அப்ல நீ ரிலாக்சா இருடா. 

உன் மாமா சத்யா உன்மேல் எவ்வளவு அன்பு வச்சு இருக்கறான்னு உனக்கு தெரியாதா!! அவன் முன்னாலேயே சாக முயற்சி பண்ணி இருக்கிறாயே அவன்  எவ்வளவு துடிச்சுப் போனான் தெரியுமா! முதல்ல போய் மாமா கிட்ட சாரி கேளு ஒகேவா செல்லம் என்றான். 

அப்போதுதான் விழித்தெழுந்து இருந்த சக்தி, சரத் சொல்ல சொல்ல கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தாள். 

அதன்பின் அந்த போட்டோஸ் பார்த்ததும் என்னால தாங்கிக்க முடியல மாமா,  எனக்கு என்ன? பண்றதுனே தெரியல அதனால தான் அப்படி நடந்துகிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க மாமா என்றாள்.

உன் நிலைமை புரியுது டா அதுக்காக சாக முயற்சி பண்றது மிகப்பெரிய முட்டாள்தனம். சரி நடந்ததெல்லாம் விடு என்கிட்ட மன்னிப்பு கேட்காதே .

சத்யா எவ்வளவு தைரியமானவன் தெரியுமா? அவனையே கலங்கடிச்சுட்டியே முதல்ல அவன் கிட்ட சாரி கேளு. இனியொரு முறை எதற்காகவும் இப்படி நடந்துக்க கூடாது என்றவன், சத்யா டோன்ட்வொரி டேக் கேர்டா. நான் டியூட்டி முடிச்சுட்டு வரேன் என்று சொல்லி போனை கட் செய்தான். 

மெல்ல சத்யாவின் அருகில் வந்த சக்தி அவன் கைகளை பற்றிக் கொண்டு சாரி மாமா என்றாள்.

அவளை தோளில் சாய்த்துக் கொண்ட சத்யா அம்மு, சாகுறதுக்கு தைரியம் தேவையில்லை டா. இயந்திரமயமான இந்த உலகத்தில் இது மாதிரியான ஓராயிரம் பிரச்சனைகள் வரும். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு சொல்லவா வேணும் அதையெல்லாம் கடந்து வாழுறதுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவே தேவை.

வாழ்க்கை வாழுறதுக்கு தான் தேவையற்ற சிறுசிறு பிரச்சினைகளுக்காக சாகுறதுக்கு இல்லை புரிஞ்சுக்கோ அம்மு.

எதுவாக இருந்தாலும் என் கிட்ட சொல்லு நான் இருக்கேன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி நெற்றியில் முத்தமிட்டான். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சனாவுக்கு பிரச்சினை தீர்ந்த சந்தோசம் ஓர் புறம் இருந்தாலும், இரண்டு நாட்களாக தன் கணவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்கின்ற ஏக்கம் மெல்ல எட்டிப் பார்த்தது.

உடனே அவ்விடம் விட்டு நகர முற்பட்டாள். சட்டென அவளது கைகளைப் பிடித்து நிறுத்தி ஏய் பொண்டாட்டி எங்கடி போற என்ன பொறாமையா என்று கண்களை சிமிட்டி அருகில் அமர்த்திக் கொண்டான். 

அனைவர் மனதிலும் சோகங்கள் மறைந்து மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடியது. 

அன்று முதல் சக்தி தன்னம்பிக்கை, தைரியத்தோடு வாழ்வினை வெற்றி கொண்டு வருகிறாள். 

(பொதுவாகவே பெண்களை வீழ்த்த நினைக்கும் விசமிகள் கையில் எடுக்கும் ஆயுதம் ஏதோ ஓர் வகையில் அவர்களை மானபங்கம் செய்வது அதற்கு இடம் கொடுக்காமல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வீர முழக்கத்துடன் வாழ்வை வென்று காட்டுவோம்)

                           சுபம்

                     ரேணுகா ஸ்டாலின் 

                         பட்டிவீரன்பட்டி

0/Post a Comment/Comments