#வலிமை_தந்தது_2023 #வளம்_சேர்க்கும்_2024
அழகியதோர் ஞாயிறில்
ஆயிரமாயிரம் கனவுகள் தந்து
ஆரவாரத்தோடு உதயமானாய் . . .
தொடக்கம் என்னவோ!!!
தோல்விகளே இல்லை எனும்
எண்ணத்தை விதைத்தபடி
வீரியத்துடன் தான் தொடங்கியது . . .
நாட்கள் நகர நகர நாட்காட்டியில்
தாள்கள் தான் குறைந்ததே தவிர
மக்கள் குறைகள் ஏதும்
குறைந்ததாகத் தெரியவில்லை . . .
முதல் மூன்று மாதங்களில்
அரசியல் ஆர்ப்பாட்டங்கள்
சிறுசிறு மோதலோடும் ,
காதலர்தின கொண்டாட்டம்
பற்பல சேர்தலோடும்,
நிலையின்றி தள்ளாடியபடி
தடுமாற்றத்தோடு கடந்தது . . .
இனிவரும் மாதங்கள்
நிதானத்துடன் நிம்மதியைத்
தந்தபடி நகருமென்ற
காத்திருத்தலுக்கு காலம் தந்த
பதில் அவ்வளவு எளிதில்
மறக்கக்கூடியதாக இல்லை
என்பது வேதனையின் உச்சம் . . .
ஏப்ரல் பிறந்ததில் ஆண்டு
இறுதித் தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு
கொண்டாட்டமாகவும்,
சீனாவை விட இந்தியா
மக்கள் தொகையில்
முன்னேறியதில் பெருந்
திண்டாட்டமாகவும் போனது . . .
மே வந்ததும் கோடை
விடுமுறையில் இருக்கும்
சின்னஞ்சிறு குழந்தைகளின்
குதூகலத்துடன் கடந்தது . . .
அதற்கு திருஷ்டி வைத்தாற்
போல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
கோரவிபத்து ஜூனில் தீ 🔥
ஜுவாலையாய் நெஞ்சத்தை
சுட்டு எரித்து பதைபதைக்க செய்தது . . .
ஜூன் வைத்த தொடக்கப்புள்ளி
தொடர்புள்ளியாக ஜூலை வந்தது
மனம் பதறும் படியான
பாலியல் வன்கொடுமை,
இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு,
இடிபாடுகளுக்குள் சிக்கி
உயிர் போராட்டம் என்று
வலியைத் தந்து சென்றது . . .
இத்தனை இடர்களுக்கிடையே
சிறு இன்பமாய் இணைய
வளர்ச்சியின் உச்சமாய்
இந்தியாவின் நிலவுப்பணி
சந்திராயன் - 3 ஜூலை 14 அன்று
விண்ணில் ஏவப்பட்டது . . .
அம்மகிழ்வின் தொடர்ச்சியாய்
ஆகஸ்ட்டில் ஆனந்தமாய்
நிலவின் தென் துருவத்தில்
லேண்டர் 'மென்மையான
தரையிறக்கத்தை' நிறைவேற்றி
இந்தியாவின் பெரும்புகழைப்
பிரபஞ்சம் எங்கும்
பறைசாற்றிக் கொண்டாட
வைத்து மகிழ்வித்தது . . .
ஜி20 உச்சி மாநாட்டோடு
தொடங்கிய செப்டம்பர்
ரஷ்யா - உக்ரைன் போரால்
செய்வதறியாது திகைத்து நின்றது
பல்லாயிரம் உயிர்களின்
வலிமிகு போராட்டத்தால் . . .
பட்டதெல்லாம் போதாதென
வலிகளின் பட்டியல் நீண்டது
இறுதி மூன்று மாதங்களும்
இம்சிக்கும் படியாகவே அமைந்தது . . .
மிக்ஜாம் புயல் சேதம்,
அதனைத் தொடர்ந்து
தென்மாவட்ட பெருவெள்ளமென
பசி, பட்டினியோடு கொஞ்சமும்
இரக்கமின்றி வாட்டி வதைத்தது,
அத்தனை வலிகளிலும்
ஆசுவாசம் தந்தது
சாதி மத பாகுபாடு இன்றி
மனித மனங்களில் துளிர்த்து
எழுந்து விஸ்வரூபம் எடுத்து
விருட்சமான மனிதநேயம் . . .
சீரற்ற நிலையில் தொடர்ந்தாலும்
பலரது வாழ்வை சீர்படுத்தியது,
இன்பம் - துன்பம் இரண்டையும்
இரண்டறக் கலந்து தந்து இம்சித்தது,
ஏமாற்றங்கள் ஏதுமின்றி
ஏற்ற இறக்கங்களை தந்தது
12 மாதங்களும் பரபரப்போடு
இயங்க வைத்து இன்று -
தான் வந்த பணிமுடித்து . . .
அழகியதோர் ஞாயிறில் பிறந்து
அழகியதோர் ஞாயிறிலே
நிறைவடையும் 2023க்கு
அகம் நிறை நன்றிகளுடன் . . .
பிறக்கவிருக்கும் #2024
எண்ணங்கள் யாவையும்
வண்ணங்களாய் மாற்றிடவும்
இழந்த இன்பங்களை
மீட்டெடுத்துத் தந்து
இன்னிசை மீட்டிடவும் . . .
தோல்விகளால் துவண்டு
மனம் வருந்தி வாழ்ந்திடாமல்
நல்வழி காட்டிடவும்
வலிகளைத் தந்தாலும்
வலிமையோடு எதிர் கொண்டு
வளமை கண்டிடவும் . . .
இன்ப துன்பம் இரண்டையும்
ஒன்றாகப் பாவிக்கும்
மனப்பக்குவம் பகர்ந்திடவும்
தடைக் கற்களைப்
படிக்கற்களாக்கி வென்றிடும்
தன்னம்பிக்கை விதைத்திடவும். . .
புத்தாண்டே வருக
புத்தெழில் தருக என்று
வரவேற்போம் வளம் பல
கண்டு மகிழ்வோம் . . .
அனைவருக்கும் இனிய
#புத்தாண்டு_நல்வாழ்த்துகள் #2024
ரேணுகா ஸ்டாலின் &
ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா
பட்டிவீரன்பட்டி.
Post a Comment