சிறுகதை

 


சிறுகதை

மீனாக்ஷி  வீட்டிற்கு வந்த போது தேஜேஷ் போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

"டீவி போடு  . இன்னிக்கு லைவ்வா பாக்கலாம்."

போட்டான்.

" பகவான் எவ்வளவு அம்சமா இருக்காருல. பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு. ஆயிரம் கண்ணு இருந்தாலும் பத்தாது. தேஜேஷ் இங்க வந்து பாருடா.இதையெல்லாம் பாக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும் . அடுத்த மாசம் லீவ் விட்டா  நேர்ல ஒரு நாள் பாத்துட்டு வரணும்  "

 தேஜேஷ் போனில் மூழ்கி இருந்தான்.

"காலம் பூரா ஸ்கூல் 8th  ஸ்டாண்டர்ட் பசங்களுக்கு  கெமிஸ்ட்ரி சொல்லிக்கொடுத்துட்டே இருக்கணுமா, சீக்கிரம் ப்ரோமோஷன் வர மாதிரி பண்ணு இறைவா "

"நாம தான் அவரை டீவீயில பாக்கிறோம். அவரு நம்மள பாக்கல.நாம பேசறது எப்படி அவருக்கு கேக்கும்  இது  டிவி .வீடியோ கால் இல்ல  "

"அவர் இல்லாத இடம் எதுடா. அவர் எல்லா இடத்துலயும் இருந்து எல்லாத்தையும் பாத்துட்டே இருக்காரு "

 "அம்மா ,உங்க ஸ்கூல் ல பூஜைனு தானே போனீங்க.பிரசாதம் எதுவும் கொடுத்தாங்களா"

"அதை ஏன் கேக்கற. அது பெரிய கதை "

"பரவால ஷார்ட்டா சொல்லுங்க "

"எங்க ப்ரின்சிபலுக்கு அறிவே இல்ல. அப்படி ஒரு காரியம் பண்ணி வச்சிருக்காரு "

"பிரசாதம் கொடுத்தாங்களா இல்லையா? "

" அதை பிரசாதம்னு சொல்ல முடியாது .யாரை விட்டு டிஸ்ட்ரிபியூட் பண்ண வச்சார் தெரியுமா? எங்க ஸ்கூல்ல .   ஆயா வேலை செய்யறவங்க , பெருக்கறவங்க . டாய்லெட் க்ளீன் பண்றவங்க எல்லாரையும் விட்டு சாப்பாடு டிஸ்ட்ரிபியூட் பண்ண வச்சாரு "

"அம்மா , எல்லாரும் வேலை செஞ்சுட்டு அப்படியேவா வந்து சாப்பாடு கொடுத்தாங்க. இன்னிக்கு ஸ்கூல்ல கோவில்ல பூஜை தானே. இன்னிக்கு சுத்தமா தானே வந்திருப்பாங்க. நாம கூட நம்ம வீட்டுல டாய்லெட் க்ளீன் பண்ணறோம் . அதுக்காக நாம வீட்ல சமைச்சு சாப்பிடறது இல்லியா  "

"சில விஷயம் அப்படி தான்.அது எல்லாம் மாறாது. ப்ரின்சிபாலுக்கு விவஸ்தையே இல்லை. அவர் மூஞ்சிக்காக எல்லா டீச்சர்ஸும் அதை வாங்கிட்டாங்க. ஆனா யாரும் சாப்பிடவே இல்லை .வெளிய வந்து குப்பைல போட்டு போட்டாங்க. எனக்கு சாப்பாடு  வீணடிக்க மனசு வரல "

"நீங்க சாப்டீங்களா "

"அதை போயி எப்படிடா சாப்பிடறது. வர வழில ஒரு நாய்க்கு போட்டுட்டேன் "

 "அம்மா எனக்கு இப்போ ஏதாவது சாப்பிடணும். ஏதாவது பண்ணி கொடுங்க"

"இன்னிக்கு அப்பா  சீக்கிரம் வரேன்னு சொல்லி இருக்காருடா. ரெடியா இரு . ஹோட்டல் போறோம்.அங்கே சாப்பாடு அவ்வளவு டேஸ்ட்டா இருக்குமாம்.  எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் ஆஹா ஓஹோ சொல்லிட்டே இருப்பாங்க. அங்க தான் அடிக்கடி சாப்பிடுவாங்கலாம் . உங்க அப்பாகிட்ட ரொம்ப நாள் போகணும்னு சொல்லிட்டே இருந்தேன்"

"எந்த ஹோட்டல்மா "

"அது சர்ப்ரைஸ், தமிழ்நாட்டுலயே ரொம்ப சுவையான சாம்பார் எங்கே கிடைக்கும்னு கூகுள் பண்ணி பாரு. உனக்கே க்ளூ கிடைக்கும் ."

***

அடுத்த நாள் காலை  பள்ளி செல்ல தேஜேஸும் அவன் அப்பாவும் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள் , மீனாக்ஷி சமைத்துக்கொண்டு இருந்தார் . டீவி  ஓடிக்கொண்டு இருந்தது.

தேஜேஷ் ஓடிச்சென்று  " #@# %%& "  என்ற சத்ததுடன் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தான் .

"என்னாச்சுங்க எதுக்கு வாந்தி எடுக்கிறான் "

"டிவில அப்படி ஒரு நியூஸ். அதை பார்த்து தான் வாந்தி எடுக்கறான் "

 "என்னங்க இது . ஏதோ சாக்கடை தண்ணி மாதிரி இருக்கு அதுல போயி சாப்பிடற தட்டு எல்லாம் கழுவிட்டு இருக்காங்க "

 "அடப்பாவிங்களா , யாரையும் நம்பவே முடியலே "

"இந்த மாதிரி ஒன்றை அணா ஹோட்டல் எல்லாம் இப்படி தான். சாப்பிடறதுக்கு எப்பவும் பெரிய ஹோட்டல் போயிடனும் "

"மீனாக்ஷி "

"என்ன ?  சொல்லுங்க "

"நேத்து நாம சாப்பிட்டது இந்த ஹோட்டல்ல தான்  "

இப்போது மீனாக்ஷி   " #@# %%& "  என்ற சத்ததுடன் குளியல் அறைக்கு ஓடினார்.

[முற்றும் ]

 எழுதியவர்: தமிழ்ச்செல்வன்

0/Post a Comment/Comments