சிந்தனையைத் தூண்டும் சிறுகதை

 


சிறுகதை


நான் இந்த பூமியில் பிறந்து இன்றுடன்" X " வருடம் ஆகிறது.எத்தனை வருடம் ஆனால் என்ன? வயது வெறும் எண் தானே . பிப்ரவரி 14 காதலர் தினம் என்று எங்கள் ஊரில் பிரபலம் ஆகும் முன்பே கண்ணம்மாவை இந்த நாளில் தான் சந்தித்தேன்.


கண்ணம்மா நான் அவளுக்கு வைத்த பெயர். மற்றவர்கள் என்ன பெயர் வைத்தால் என்ன? என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்டால் எனக்கு என்ன ?


எனக்கு அவள் எப்போதும் கண்ணம்மா தான் .


சென்னைக் கடற்கரை எதிரில் தான் நான் படித்த அந்தக் கல்லூரி இருந்தது. என் வகுப்பில் ஆண்கள் மட்டும் தான். ஒன்றரை  மைல் தொலைவில் ஒரு பெண்கள் கல்லூரி இருந்தது. அங்கே தான் கண்ணம்மா படித்துக்கொண்டு இருந்தாள் .


கண்டவுடன் காதல் அல்ல . நான் அவளைக்காணும் முன்பே அவள் உள்ளங்கை ஸ்பரிசம் என் தேகத்தில் ஊடுருவி காதல் நெருப்பை பற்ற வைத்து இருக்கிறது.


காதல் என்றால் என்ன ? எங்கள் சிறிது வயதில் அது ஒரு கெட்ட வார்த்தை. வீட்டில் இருக்கும்போது அந்த வார்த்தையை  உச்சரித்த ஞாபகம் இல்லை . என் பள்ளி நண்பன் ராஜுவிடம் ஒரு நாள்  கேட்டேன் .


" காதல் னா  என்ன ?'


" காதல் தெரியாதா ?'


"உனக்கு தெரியுமா ?"


"எனக்கு தெரியும்  " என்றான் ராஜு .


மீண்டும் கேட்டேன் " காதல் னா  என்ன ?"


"ஒரு பெண்ணும் பையனும் சேர்ந்து ஒரு கடற்கரையில் படகு பக்கத்தில் உட்கார்ந்து கடலைப்  பார்த்துக்கொண்டே சுண்டல் வாங்கி சாப்பிடுவது தான் காதல் "


"யார் வேணும்னாலும் அப்படி பண்ணலாமா?" என்றேன் .


" ஸ்கூல் படிக்கும் போது பண்ணக்  கூடாது.  காலேஜ் படிக்கும் போது தான் காதல் பண்ணனும் "


காதலைப் பற்றி என்னிடம் தெளிவாக விளக்கி சொன்னான் ராஜு. அவன் சொன்ன வகைக் காதலை சந்திக்கவில்லை ஆனால் கண்ணம்மாவை கடற்கரையில் தான் சந்தித்தேன் .


என் பிறந்த நாள் பிப்ரவரி 14 அன்று ஒரு புது நீல நிறச்சட்டை  அணிந்து கல்லூரி சென்றேன். வெயில் குறைந்த மாலை நேரத்தில் தனியாக கடல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.


என் முதுகுக்கு பின்னால் ஆண்களும் பெண்களும் நடந்து செல்லும் சத்தங்கள்.என் கண்களுக்கு முன்னே விளையாடும் கடல் அலைகள் . தம்புராவின் ஸ்ருதிகளைப்போல் என் காதுகளில்  ஒலித்துக்கொண்டு இருந்தது.

அதில் ஏதாவது பாடல் ஒளிந்துகொண்டு இருக்கிறதா என்று என் கண்களை மூடி  உற்றுக் கேட்டேன்.


கடல் அலைகளில்  தம்புரா ஸ்ருதியுடன் வீணையின் இசையும் மெலிதாக கேட்டது .


மூடிய என் கண்கள் மேலே இரண்டு மெல்லிய கைகள் மூடின.


என் கல்லூரி நண்பன் ரவியின் கைகளோ என்று எண்ணினேன். நான் அந்த கைகளை விலக்கவில்லை. தடவிப் பார்த்தேன் .மோதிரம் , வளையல்கள்  . மலர் இதழ்களை விட மெல்லிய கைகள் .


அவை நிச்சயம் பெண்ணின் கைகள்.  அந்த ஸ்பரிசம் தான்  என்னுள் ஒரு அக்கினியை ஏற்றி வைத்தது .


அந்த அக்கினிக்கு நான் வைத்த பெயர்தான் காதல் .


"யாரது " என்றேன் .


கைகள் விலகியது. நான் கண் திறந்து பார்த்தேன். ஒரு பெண் . அவளுக்கு பேசும் கண்கள்.உதடுகளைக் கடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தொனியில்


"என் தம்பி என்று நினைத்து ..."  அவள் பேசினாள். அவள் குரல் ஒரு புதிய தெய்வீக இசைக்கருவியை போல் ரீங்கரித்துக் கொண்டு இருந்தது .


அந்த அக்கினியை ஏற்றி வைத்தவளுக்கு  நான் வைத்த பெயர்தான் கண்ணம்மா .


 


பட்டு தாவணி அணிந்து இருந்தாள். சில நொடிகள் அவள் கண்களையும் அச்சத்தில் அங்கும் இங்கும் அசைகின்ற கருவிழிகளையும் பார்த்தேன் . "கண்ணம்மா "வைத்தவிர அவளுக்கு வேறு எந்த பெயர் தான் பொருந்திவிடும் ?


அவள் கொலுசுகள் சினுங்க ஓடிச்சென்றாள். நீல சட்டை அணிந்த ஒருவனுக்கு பின் மறைந்து வேகமாக கடந்து சென்றாள் .அவள் சொன்னது போல் அது அவள் தம்பியாக இருக்கக் கூடும் .


இவளைக் காண்பதற்கு தான்

என் கண்கள்

இதுவரைக் காத்திருந்தன


இவள் குரல் கேட்கவே

என் செவிகள்

இதுவரைக் காத்திருந்தன


இவள் விரல் தீண்டவே

என் தேகம்

இதுவரைக் காத்திருந்தன


இந்த நிமிடங்களுக்காகத்தான்

நான் இத்தனை

வருடங்கள் காத்திருந்தேன் .


" மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா, கண்ணம்மா, கண்ணம்மா"

 

அவள் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்து நாணத்தில் தலை குனிந்தாள்.பேருந்தில் ஏறிச்சென்று மறைந்தாள்.


பாரதி எழுதியக் கண்ணம்மா பாடல்களைத் தேடிப் படித்தேன்.


இந்த கண்ணம்மாவைத் தான் அவனும் பார்த்துப் பாடி இருப்பானோ ?


" எந்தன் வாயினிலே அமுதூறுதே

கண்ணம்மா

கண்ணம்மா

கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே


உயிர் தீயினிலே வளர் ஜோதியே

எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே

இந்த காற்று வெளியிடை கண்ணம்மா

நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்"


சில வாரங்களுக்கு பின் மீண்டும் அவளை சந்திக்கும் நாள் வாய்த்ததது. எங்கள் கல்லூரியில் பாட்டுப்  போட்டி.

வேறு சில கல்லூரி மாணவர்களும் வந்து பாடிக்கொண்டு இருந்தார்கள் .


நான் வெளியில் தான் நின்று இருந்தேன். ஒரு பாடல் என் காதில் விழுந்தது.


" நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபலநற் பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்"


இந்த குரல் அவள்தானோ என்று தோன்றியது . அரங்கிற்கு ஓடிச்சென்றேன். மேடையில் கண்ணம்மா பாடிக்கொண்டு இருந்தாள். முதல் வரிசையில் நின்று கேட்டேன்.


"ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்"


இப்போது கண்ணம்மா அவள் கண்களை மூடி பாடலுக்குள்ளும் லயித்து இருந்தாள் .  ஒருவேளை இந்த பாடல் என்னைப் பற்றியது தானோ ? அவள் தானே பின்புறமாக வந்து என் கண்களை மறைத்தாள் .


"நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன் "


எனக்காகவும் அவள் குரலே பாடியது .

 அவள் பாடல் முடித்து கைதட்டல் கேட்டு கண்கள் திறந்தாள் . முதலில் என்னைத்தான் பார்த்தாள் . சில நொடிகள் ஸ்தம்பித்தாள் . பின்பு அதே நாணம் கொண்டு மேடையில் இருந்து இறங்கி ஓடிச்சென்றாள் .


 

 கல்லூரி தேர்வுகள் முடிந்து ஒரு நாள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவளை சந்தித்தேன் .


ரயிலில் ஒரு இடத்தில நான் தனியாக என் பைகளை ஏற்றிக்கொண்டு இருந்த போது அவள் என் அருகில் வந்தாள் .


"கண்ணம்மா "என்றேன்.


புன்னகைத்தாள்.


"என்னை உனக்கு பிடிக்குமா ?" என்றேன்


"எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்கும். அது போல உங்களையும் பிடிக்கும் " என்றாள் .


" எனக்கு கண்ணம்மாவை  மிகவும் பிடிக்கும் அதற்கு அடுத்த படி தான் பாரதி "  என்றேன் .


"எனக்காக காத்திருக்க முடியுமா "  என்றாள் .


" காத்துக்கொண்டே இருப்பேன்  "என்றேன்


"என்னை மறக்காமல்  இருப்பாயா "என்றேன்


"உங்களை நினைத்துக் கொண்டே இருப்பேன் " என்றாள் .


மீண்டும் ஒரு முறை அவளை ஸ்பரிசிக்க என் விரல்கள் கெஞ்சின.


"கண்ணம்மா " என்றேன்


தலை நிமிர்ந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.


என் விரல்கக்கு அவள் கண்ணீர் துளிகளின் ஸ்பரிசம் தான் கிடைத்தது.


 அவள் கண்ணீர் துளிகள் ஒட்டி இருந்த என் விரல்களை  அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.


வாய்ச்சொற்கள் எதுவும் பேசாமல் விலகிச்சென்றாள்.


அவள் மூட்டிச்சென்ற காதல் என்ற அக்கினியின் குளிர்ச்சியாக   அவள் நினைவுகள் என்னை மகிழ்வித்துக்கொண்டு இருந்தது .


அவளைத் தேடினேன். என் வாழ்நாள் முடியும் வரைத் தேடினேன். வாழ்நாள் முடிந்தபின்னும் தேடினேன்.


உனக்காக காத்துக்கொண்டு இருப்பேன் என்று அவளிடம்  சொன்ன வார்த்தையை என் ஆயுள் முடிந்ததற்காக மீறி விட முடியுமா என்ன ?


என் தேகம் மறைந்த பின்னும் கடற்கரையில் காத்திருந்தேன் பாதி ஆன்மாவாக .


பின்புறமாக வந்து என்  மீதி ஆன்மாவாக கண்ணம்மா தழுவிக்கொண்டாள்.


வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம்.


"எனக்காக காத்திருந்தாயா " என்றாள்


"ஆம் " என்றேன் .


"என்னை நினைத்துக்கொண்டு இருந்தாயா " என்றேன்


"ஆம் " என்றாள் .


நான் முழுமை அடைந்தேன். காதல் என்ற அக்கினி எங்களை கரைக்க ,நாங்கள் இயற்கையில் கலந்தோம்.


[முற்றும் ]


எழுதியவர்: தமிழ்செல்வன்

0/Post a Comment/Comments