'உடன் கட்டை ஏறிய காதல்..' உள்ளத்தில் மறையாத பாரதிகண்ணம்மா

 


'உடன் கட்டை ஏறிய காதல்..' உள்ளத்தில் மறையாத பாரதிகண்ணம்மா!

பாரதிக்கு பிடித்த கண்ணம்மா நமக்கும் பிடிக்கும் தானே. அப்படி பிடித்துப் போன இயக்குனர் சேரன் அந்த இரண்டு பெயரையும் சேர்த்து தனது முதல் படத்தில் சாதியை முன் நிறுத்தி இயக்கி வெளிவந்த முதல் படம்.

1997 ஜனவரி 15 அன்று பல சர்ச்சைகளோடுதான் படம் வெளியானது. கதையில் பாரதியாக பார்த்திபனும் கண்ணம்மாவாக மீனாவும் ஜமீன் வெள்ளைச்சாமி தேவராக விஜயகுமாரும் பேச்சியாக இந்துவும் நடித்த படத்தில் ரஞ்சித், வடிவேலு, ரத்னகுமார்,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவர் பாளையம் என்ற கிராமத்தில் வாழும் பெரிய அம்பலகாரராக ஊரின் முக்கிய பிரச்சினைகளில் தீர்ப்பு சொல்லும் கிராம தலைவராக வரும் விஜயகுமார் தான் வெள்ளைச்சாமி தேவர். அவர் ரயில் நிலையத்தில் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவருடைய பார்வையில் இருந்து தான் மொத்த கதையும் பிளாஷ்பேக் காட்சிளாக விரிகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் ஆதிக்க சாதிய தலைவர் பிரச்சினை என்று வந்து விட்டால் மூர்க்கத்தனமாக தன் சாதி சார்ந்து நிற்பவர் வெள்ளைச்சாமி. அவரின் மகள்தான் கண்ணம்மாவாக வரும் நடிகை மீனா. அவரின் வீட்டில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பாரதியாக வரும் பார்த்திபன். கண்ணம்மா தனது காதலை பாரதியிடம் தெரிவிக்கும் பல தருணங்களில் அதன் பின் வரும் பிரச்சனை களை அதற்கு முன் நடந்த பல உதாரணங்களை காட்டி எச்சரிக்கை செய்வார். அவருடைய அப்பா ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி சொல்லி மறுப்பார். 

ஆனால் பாரதியின் நிராகரிப்பு , தயக்கம் என எதையும் ஏற்றுக்கொள்ளாத கண்ணம்மா காதலை மேலும் உறுதியாக்குவார். மனதில் பாரதியும் விருப்பத்தை வைத்துக்கொண்டு வெளியே காட்டாமல் கண்ணம்மாவை எச்சரிக்கை செய்யும் காட்சிகளில் பார்த்திபனின் நடிப்பு அத்தனை பிரமாதம். காதலை கண்களால் வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் மீனா நடிப்பில் உச்சம் தொடுவார். 

பாரதி யின் தங்கை பேச்சியாக இந்து உயர் சாதி பையன் ராஜாவுடன் காதலிக்கும் போதும் அதன் பின்னர் நடக்கும் பிரச்சினைகளிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சாதிய பிடியில் உறுதியாக நிற்கும் விஜயகுமார் தான் கதையில் ஹீரோ என்றே சொல்லலாம். பார்த்திபன் வடிவேலு என்ற புதிய காமெடி காம்போவை "குண்டக்க மண்டக்க" பாணியில் ஆரம்பித்து வைத்த முதல் படம் இதுதான். தேவா இசையில் ஏழு பாடல்கள் பக்கபலமாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இது வரை வந்த காதல் படங்களின் வழக்கமான கதைதான் என்று இதை சொல்ல முடியாது. சாதியம் பேசிய இந்த படத்தில் சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து பேசிய அழுத்தமான படம். படத்தில் கார்த்திக் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் பார்த்திபன். சேரனின் முதல் படம் என்பதால் பார்த்திபனும் இயக்குனர் என்பதால் படத்தின் முடிவு காட்சிகளில் தலையிட்டதாக தகவல்கள் உண்டு . இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டு மூத்த இயக்குனர் களிடம் இரண்டு முடிவுகளும் காட்டப்பட்டு சேரனின் கிளைமாக்ஸ் முடிவானது. படைப்பாளியாக அவரது கிளைமாக்ஸ் வைக்கப்பட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கள் பெற்றது.

0/Post a Comment/Comments