இளமை காலங்கள்! மியூசிக்கல் ஹிட்டான கதை - மணிவண்ணன் இயக்கத்தில் முழு நீள காதல் படம்
பேமிலி செண்டிமென்ட் படங்களை கொடுத்து வந்த மணிவண்ணன் முழு நீள காதல் கதையாக இயக்கிய படமாக இளமை காலங்கள அமைந்திருந்தது. அத்துடன் படம் வெளியான 1983ஆம் ஆண்டில் இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஹாட்ரிக் ஹிட்டும் கொடுத்தார்.
மணிவண்ணன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக வெளியாகி வெற்றியான படம் இளமை காலங்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்ப் கல்லூரி காதல், மோதல், பிரிவு, சுபம் என்ற பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்த படமாக இது உள்ளது.
1980களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த மோகன் இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக தோன்றியிருப்பார். மோகனை ரொமாண்டிக் ஹீரோ என்று சொல்வதற்கு முக்கிய பங்கு வகித்ததில் இந்த படமும் ஒன்று என்றே சொல்லலாம். இந்த படத்துக்கு பின்னர் மோகனுக்கு பெண் ரசிகைகளை கவரும் நடிகராக மாறினார்.
படத்தில் நாயகியாக, மோகனின் கல்லூரி கால காதலியாக சசிகலாவும், முறைப்பெண்ணாக ரோஹிணி என இரண்டு ஹீரோயின்கள். இளமை காலங்கள் சசிகலா, ரோஹிணி என இரண்டு ஹீரோயின்களின் அறிமுக படம். ஜனகராஜ் படம் முழுவதும் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி, இறுதியில் திருப்புமுனை தரும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தை மதர்லாண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்திருந்தார்.
கல்லூரி காலத்தில் மோகன் - சசிகலா இடையே மலரும் காதல், பின்னர் எதிர்பாராத சம்பவத்தால் சசிகலா தந்தை இறக்க அதற்கு மோகன் தான் காரணம் என அவரை பிரிகிறார். இறுதியில் தந்தை இறப்பின் பின்னணியும், மோகனின் உண்மை காதல் தெரிய வர அவருடன் சசிகலா சேருவது தான் படத்தின் ஒன்லைன்.
பாரதிராஜா உதிவியாளரான மணிவண்ணன், இளைஞர்களை கவரும் விதமான காதல் காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையில் இளமை காலங்கள் படத்தை உருவாக்கியிருப்பார். இந்த படத்துக்கு முன்னர் பேமி டிராமா பாணியிலான படங்களை இயக்கியிருந்த மணிவண்ணனில் முழு நீள காதல் மற்றும் எமோஷன் கலந்த படமாக இது அமைந்ததுடன், படமும் சூப்பர் ஹிட்டானது.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடவந்ததோர் கானம், வைரமுத்து எழுதிய ஈரமான ரோஜாவே பாடல்கள், இளையராஜா இசையில் எவரக்ரீன் மெலடி பாடல்களாக இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்து. இந்த படம் வெற்றியடையை படத்தில் இடம்பிடித்த பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் முக்கிய காரணமாக அமைந்தது.
காதல் படமாக இருந்தாலும் த்ரில்லர் அம்சங்களும், செண்மென்ட் காட்சிகளும் நிறைந்திருக்கும் இந்த படத்தில் தனது பின்னணி இசையிலும் ராஜாங்கம் செய்திருப்பார் இளையராஜா.
1983ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் ஹிட்டை இந்தப் படம் கொடுத்தது. அதேபோல் இந்த படம் 200 நாள்களை கடந்து வெள்ளி விழா கொண்டாடியது.
Post a Comment