ராஜாவும், 80s இயக்குனர்களும்
ராஜாவுக்கு ஒரு சிலரிடம் அசைக்கமுடியாத மரியாதை உண்டு.
உதாரணத்துக்கு, வாலிக்கு என்றும் ‘அண்ணா’ விளி தான். அந்த மரியாதை இன்னபிற முத்துலிங்கம் போன்ற கவிஞர்களுக்கு கிடைக்குமா தெரியாது. தன் சீனியர் எமெஸ்வியிடமும் மிகுந்த மரியாதை உண்டு (அவர் இடத்தை காலி செய்தாலும், mutually இருவரும் பரஸ்பர அன்பும் அக்கறையும் கொண்டவர்கள்). தனக்கு முதல் வாய்ப்பு தந்த பஞ்சு அருணாசலத்திடமும் மிகுந்த மரியாதை கொண்டவர்.
இயக்குனர்களில் பாலுமகேந்திரா, மகேந்திரன் எல்லாம் செல்லம். அவர்களும் ராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிவிடுவார்கள். இவரும் லட்டு லட்டாக இசையை தந்துவிடுவார். புதியவர் மணிரத்னம் (அதாவது 80ஸ் ஆரம்பத்தில்) “உங்களுக்கு மார்க்கெட் சம்பளம் தர இயலாது” என தைரியமாய்(!) சொன்னாலும், மணியின் திறமையை சரியாய் கண்டுகொண்டு மதிப்பளித்து குறைந்த சம்பளத்துக்கு இசையமைத்தார். ஸ்ரீதர் போன்ற இண்டஸ்ட்ரி சீனியர்களையும் மிகவும் மதித்தார். மிக தாமதமாக எமெஸ்வி கேம்ப்பிலிருந்து பாலசந்தர் வந்தபிறகு, அவருக்கும் சிந்துபைரவி, புன்னகைமன்னன், மனதில் உறுதி வேண்டும் என சிறந்த பாடல்கள் அந்த துரதிர்ஷ்ட புதுப்புது அர்த்தங்கள் பிஜிஎம் சண்டை வரைக்குமே. பாரதிராஜாவுடன் ஒரு நட்பு சார்ந்த love-hate பிரேமகலகம் எப்போதும். கடலோர கவிதைகள், முதல்மரியாதை என செய்வார். திடீரென முட்டிக்கொண்டு ஹம்சலேகாவிடமோ, தேவேந்திரனிடமோ செல்வார் பாரதிராஜா. பிறகு திரும்ப ராஜாவிடம் என்னுயிர்த்தோழன், புதுநெல்லு புதுநாத்துக்கு வருவார்.
ஆனால், ஏனைய 80ஸ் இயக்குனர்கள் இருக்கிறார்களே? கே.ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா போன்ற இயக்குனர்கள் ‘கெடுத்து’ வைத்திருந்தார்கள். அதாவது ஏகமாய் pamper செய்து பீடத்தில் வைத்து வழிபடுவதல். ஏனெனில் தங்கள் ஸ்க்ரிப்டை விட, அல்லது அந்தளவு ராஜாவின் தேவையும் அவர்கட்கு இருந்தது. ராஜாவின் 6 ட்யூன்களுக்காக உருவான படம் வைதேகி காத்திருந்தாள் என்பதை அறிவீர்கள். மனோபாலா மறைவில் ராஜா மிகவும் விமர்சிக்கப்பட்ட “என்னை பார்க்க கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருப்ப்பார்’ வாஸ்தவமாய் நடந்திருக்கும் தான். இந்த லிஸ்ட்டில் சுயமரியாதைக்காரர் மணிவண்ணனை சேர்க்க முடியுமா தெரியவில்லை. அவர் கலைஞர் வசனத்தையே ஒத்துவராவிட்டால் நைசாக மாற்றி under the radar டீல் செய்வார்.
ராஜாவை சக கொலீகாக, மிகவும் மேலேயும் வைக்காமல், கீழேயும் வைக்காமல் (அஃப்கோர்ஸ் அது முடியவே முடியாது), நீ ஒரு டெக்னீஷியன்னா நானும் ஒரு டெக்னீஷியன் என ஹேண்டில் செய்தது பாக்யராஜ் தான் போல.
ராஜாவுடன் பணிபுரிகையில் தனக்கான உரிமையை பாக்யராஜ் விட்டுத்தந்ததேயில்லை. முந்தானை முடிச்சு படத்தில் ஏவிஎம் சரவணன் “என் பிரதர் தான் ட்யூன் செலக்ட் செய்வார். அதான் எங்க அப்புச்சி காலத்துலருந்தே வழக்கம்” எனச்சொல்ல, பாக்யராஜ் சிம்பிளாய் வழக்கத்தை மாற்றிக்கொள்ள சொல்லிவிட்டார். ராஜாவை தாண்டி அவர் ஸ்டூடியோவில் ஏதோ கலாட்டா செய்து பிஜிஎம்மை சேர்த்து முட்டிக்கொண்ட கதையெல்லாம் உண்டு. பிறகு விலகி சங்கர்கணேஷ் என்றெல்லாம் போய், சொந்த இசையில் சாதித்து, திரும்ப ராஜாவுடன் ராசுக்குட்டி, வீட்டுல விசேஷங்க ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என ராசியானார். ராஜாவின் பெரியமனதையும் Professional ethics-ஐயும் இதில் சொல்லவேண்டும். “ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி” எல்லாம் உண்மையிலேயே 2கே கிட்ஸ் மொழியில் underrated. ”வந்தாள் வந்தாள் ராஜகுமாரி” எல்லாம் அவரின் மிகச்சிறந்த ஆர்கெஸ்ட்ரேஷன் & அரேஞ்ச்மெண்ட்.
இந்த ஒற்றை புகைப்படம் பாக்யராஜுக்கு தன் மேலும், ராஜாவுக்கு முன்னால் கூனிக்குறுகாத அவரின் தன்னம்பிக்கையை பறைசாற்றி விடுகிறது. இப்படியொரு புகைப்படத்தை கே.ரங்கராஜோ, சுந்தர்ராஜனோ எடுத்திருக்கவே முடியாது. ராஜாவும் போலி மரியாதையை விட திறமையையே மதித்தார் எனலாம்.
ஒரு ரசிகராக ராஜாவை எப்படி அணுகவேண்டும் என்கிற நுட்ப செய்தியும் இதில் உள்ளதாக எனக்கு படுகிறது.
Post a Comment