#சிறுகதை (எழுத்தாளர் : தமிழ்ச்செல்வன்)
ஒரு இரவு நேரம் என் இருசக்கர வாகனத்தில் தனியான சாலையில் சென்று கொண்டு இருந்தேன்.
அப்போது சிவப்பு சேலை
அணிந்த ஒரு இளம்பெண் நிறுத்தச் சொல்லி சைகை செய்தாள்.
நிறுத்தினேன்.
" மருந்து கடைக்கு போகனும். இங்கே பக்கத்துல எல்லா கடையும் பூட்டிட்டாங்க.நீங்க போற வழில கடை இருந்தா இறங்கிக்கட்டுமா" என்றாள்.
அவள் முகத்தில் களைப்பு தெரிந்தது.
அதிகப்படியான ஒப்பனை. சேலை விலகி மார்பின் நடுப்பகுதி தெரியும்படி அலட்சியமாக நின்று கொண்டு இருந்தாள். ஆபத்தான பெண்ணாக இருப்பாளோ என்று எனக்கு அவள் மேல் சந்தேகம் வந்தது.
"மருந்து சீட்டு வச்சு இருக்கீங்களா?"என்று கேட்டேன்.
சீட்டை தன் இடுப்பு புடவைக்குள் இருந்த பர்சிற்குள் இருந்து எடுத்துக் காட்டினாள்.
மருந்து சீட்டை பார்த்தேன்.நேற்றைய தேதியில் இருந்தது.
"நான் வாங்கிக் கொடுக்கறேன். ஏறிக்கோங்க" என்றேன்.
ஏறி அமர்ந்து என் தோளில் கை வைத்துப் பிடித்துக் கொண்டாள்.
சிறிது தூரம் சென்றதும் என் முதுகில் அவள் மார்பகங்கள் அழுந்தும் படி சாய்ந்தாள்.
"சரியா உக்காருங்க.நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்லை."அவளிடம் கொஞ்சம் கோபமாக சொன்னேன்.
" மன்னிச்சுடுங்க. களைப்பா இருந்ததால் அப்படி சாஞ்சிட்டென். மூணு நாளாக தூக்கம் இல்லை. என்னோட தம்பி உடம்பு சரியில்லாம இருக்கான். டாக்டர் அவசரமாக ஒரு மருந்து வாங்கிக்கொடுக்க சொன்னாங்க.
எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. வேலையும் கிடைக்கல.இருந்த கொஞ்சம் காசும் தீந்து போச்சு. பிச்சை கூட எடுத்து பாத்துட்டேன். பணம் சேரல.
வேற வழி இல்லாம ஒருதப்பான ஆள் என்னை ஒரு கும்பல் கிட்ட கூட்டிட்டு போனான். என்னை எல்லாரும் சேர்ந்து
நாசம் பண்ணிட்டாங்க. தாங்க முடியாத வலி.தம்பிக்கு மருந்து வாங்க வேற வழி இல்லாம பொறுத்துக்கிட்டென்"
அவள் சொல்லி முடிப்பதற்குள் கடை வந்து விட்டது.
" பூட்டி இருக்கே " என்றாள்.
" என்னோட கடை தான் " என்று சொல்லி கடையைத் திறந்தேன்.
" நேத்து இந்த கடைக்கும் வந்து கேட்டேன். " என்றாள்.
எனக்கு நினைவுக்கு வந்தது. இதே பெண் நேற்று வந்து இந்த மருந்தைக் கேட்டாள். அதன் விலை இரண்டாயிரத்துக்கும் அதிகம்.கடனாகக் கொடுக்க முடியுமா என்று கேட்டாள். மறுத்து விட்டேன்.
நான் உதவி செய்து இருந்தால் இவள் இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாகி இருக்கமாட்டாள்.
நான் குற்றஉணர்ச்சியால் துடித்தேன்.
மருந்தை அவளிடம் கொடுத்தேன்.
அவள் பணத்தை கொடுத்தாள்
"அவங்க கொடுத்த பணமா?"
"ஆமாம்"
அந்த பணத்தை பார்க்க அருவருப்பாக இருந்தது. நான் தொடவில்லை. என் கல்லாப்பெட்டியில் இருந்த எல்லாப் பணமும் இப்போது அருவருப்பாக இருந்தது. ஒவ்வொரு காசும் எத்தனை பாவங்களை சுமக்கிறதோ?
" எனக்கு பணம் வேண்டாம். அந்த மருந்து எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சும் உங்களுக்கு நேத்து உதவாம விட்டது என்னோட தப்பு தான். மன்னிச்சுடுங்க. பக்கத்துல துணிக்கடைல வேலைக்கு ஆள் தேவைனு சொல்லிட்டு இருந்தார்.காலைல வந்து பாருங்க . நான் சிபாரிசு பண்றேன்" என்றேன்.
" இந்த பணம் வேண்டாங்க. இதை இப்போ என்னால தொடமுடியாது. நான் வேற வேலைக்கு போயி உங்க பணத்தை திருப்பிக் கொடுத்துடறேன்"
அவள் நன்றி சொல்லிவிட்டு பணத்தை என் மேஜையில் வைத்து விட்டு
மருந்தை எடுத்துச் சென்றாள்.
நானும் அதை தொடப்போவது இல்லை. நன்கொடை கேட்டு வருபவரை எடுத்துப் போக சொல்லவேண்டும்.
இனி யாராவது கடனாக மருந்து கேட்டால் மறுக்காமல் கொடுத்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன்.
[முற்றும்]
Post a Comment