ஹைக்கூ கவிதைகளை கொண்டாடும் ஹைக்கூ காதலி ஜமீலா முஸம்மில் அவர்களின் அற்புதமான பதிவு

ஹைக்கூ கவிதைகளை கொண்டாடும் ஹைக்கூ காதலி ஜமீலா முஸம்மில் அவர்களின் அற்புதமான பதிவு 


இன்று சர்வேதேச ஹைக்கூ கவிதை தினம்

ஏப்ரல் 17ம் நாள்.

கொண்டாடுவோம் கைக்குள் அடங்கும் பிரபஞ்சக்கவிதையாம்

ஹைக்கூவை. 

இன்று உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வரும் கவிதை வடிவமே ஹைக்கூ கவிதை.

ஹைக்கூ கவிதை மிகவும் எளிமையான கவிதை வடிவமாகும்.

சுருங்கச் சொல்லும்

வியக்க வைக்கும்

எழுதுவது இனிய உணர்வு தரும்

சற்று சிரத்தை எடுத்தால் அழகாய் எழுதிவிடலாம்

சிந்தனைத் திறனோடு

சிறப்பான வாழ்வியல் தத்துவம்

சிறுவார்த்தைகள் கொண்டு

செவ்வனே சொல்லல் வேண்டும்.

சிற்றுயிர் நேசமும் சிறப்பாய் வடிக்கலாம்

நெகிழும் நெஞ்சை ஹைக்கூவில் அவிழ்க்கலாம்

ஹைக்கூ எழுதினால் 

சிற்றெறும்பையும் நேசிப்பாய்

சேறு சகதியிலும் கவித்துவத்தை

யாசிப்பாய்

உண்மை மட்டுமே நீ உரைப்பாய்

கவித்துவத்தில் கற்பனை எல்லாம் உரிப்பாய்

வாழ்க ஹைக்கூ

வளர்ப்போம் ஹைக்கூ

ஜப்பானிய கவிதை வடிவம்தான் ஹைக்கூ. 

3 வரிகளில் இருக்கும் கவிதைக்குள்,

இயற்கை, காதல், தத்துவம், நேசம், பரிவு, நையாண்டி, அஃறிணை வாசம் என்று அகிலத்தின் சகலதும் அடங்கி இருக்கும்.

வாழ்வியலின் இழிநிலை கண்டு

மனதில் பிரவாகித்துக் கிளர்ந்து எழும் உணர்ச்சிகள், ஏக்கங்கள் ஹைக்கூவாக வெளிப்பட்டு வழியும் ஒரு ஹைக்கூவாளனுக்கு.

ஹைக்கூ கவிதைகளை சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் மிகவும்  எளிதாகப் புரிந்து கொள்ளலாம். 

இதுதான் ஹைக்கூவின் சிறப்பம்சமாகும்.

 உள்ளக்கிடக்கைகளை

மெல்லக் கடைந்த

வெல்லப் பாகென

தெள்ளத்தெளிவாகக் கொடுக்கும் ஹைக்கூ கவிதைகளை நாமனைவரும் எழுதப் பழக வேண்டும்.

அதனால் வருமின்பத்தை அனுபவித்தல் வேண்டும்.

ரேங்கா என்ற ஜப்பானிய கவிதை வடிவிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் ஹைக்கூ. ரேங்கா என்பது நீண்ட வரிகள் கொண்ட மரபுக் கவிதை வடிவம். அதிலிருந்துதான் ஹைக்கூவை உருவாக்கினார்கள். 

ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்று அழைக்கப்பட்டது. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் படுவதாக அமைகிறது. இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஹைக்கூ கவிதையானது முதன் முதலில் ஜப்பான் நாட்டில் தான் தோன்றியது.

மட்சுவோ பாஷோ (Matsuo Basho) 1644 முதல் 1694 வரையிலான ஆண்டுகளில் ஜப்பானிய எடோ காலப்பகுதியில் வாழ்ந்த மிக பிரபலமான கவிஞர் ஆவார். பின்னர் இவர் மட்சுவோ சுய்மான் முனிபியூசா என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். அவரது வாழ்நாளில் ரெங்கு அல்லது ஐகை நோ ரெங்கா என்ற பிரபலமான கூட்டு முயற்சி வகைப் பாடல்கள் படைத்ததற்காக பாஷோ அங்கீகாரம் பெற்றார். தற்போது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாசோ ஐக்கூ கவிதைகளின் மிகப்பெரிய ஆசான் என அங்கீகரிக்கப்படுகிறார்.

பழைய குளம்

தவளை குதித்தது

தண்ணீரில் பிளக்

பாஷோவின் இந்த கவிதை உடனடியாக உலகப் புகழ்பெற்றதாக வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். ஏப்ரல் மாதத்தில், எடோவின் கவிஞர்கள் பாஷோவின் குடிசையில் திரண்டு வந்து தவளையை மையமாகக் கொண்ட ஐகை நோ ரெங்கா கவிதைப் போட்டியை நடத்தினர். பாசோவின் தவளைக் கவிதையை உச்சியில் முதல் கவிதையாக வைத்து அத்தொகுப்பைத் தொகுத்தனர் என்று வரலாறு கூறுகிறது.

பின்னர் ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கிலும் ஹைக்கூ கவிதைகள் ஆனது பிரபலமாக ஆரம்பித்தது. தற்போது இந்த ஹைக்கூ கவிதையானது கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது. குறைவான வார்த்தையை பயன்படுத்தி சமூகத்தில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதே ஹைக்கூ கவிஞர்களின் திறமையாகும். 

1916 ம் ஆண்டு

வங்கக் கவிஞர்

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்

ஜப்பான் சென்றாராம்.திரும்பி வந்ததும் ஹைக்கூக்கவிதையில் மயங்கி அதைப்பற்றி ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுதினாராம்.அதைப் படித்த நமது மகாகவி பாரதியார்

மனதைப் பறிகொடுத்து அதைப் பற்றியே ஆர்வமாய் அதே ஆண்டு அக்டோபர் மாதம்

16ம் தேதி சுதேசமித்திரன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை

எழுதினாராம்.இதுவே தமிழுக்கு ஹைக்கூ கவிதைகள்

வந்த முதல் அறிமுகமாக அறியப்படுகிறது.

எனவே ஹைக்கூவைப் பற்றி தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியாராகும். சுதேசமித்திரன் இதழில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் 16-10-1916 அன்று எழுதிய ஹைக்கூ குறித்த கட்டுரையில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்திருந்தார். இதுவே தமிழுக்கு ஹைக்கூ குறித்தான முதல் அறிமுகத்தைத் தந்தது.

பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே

- பூஸோன் யோ ஸாஹோ

தீப்பட்டெரிந்தது 

வீழுமலரின் 

அமைதி என்னே

- ஹோ கூஷி

மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து என சீர்களைக் கொண்டு 17 சீர்களில் எழுதப்படும். ஹைக்கூவில் பின்பற்ற வேண்டிய மரபுகளாக அவர் முன்வைப்பவை இவை—

ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும். ஹைக்கூவின் மொழி ஊளைச் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும் என்று ஹைக்கூவிற்கு விளக்கம் தந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்

என் வீடு எரிந்து போனதால்

நன்றாகப் பார்க்க முடிகிறது

உதிக்கும் நிலாவை.

என்று மசாஹிடே-யின் கவிதையையும்,

இந்த அழகிய கிண்ணத்தில்

பூக்களை அடுக்கி வைப்போம்

அரிசிதான் இல்லையே

என்று பாஷோ-வின் வரிகளையும் தமிழில் தந்த அப்துல் ரகுமான் பின்னர் 1974இல் பால்வீதி என்ற நூலில் ஹைக்கூ கவிதைகளை எழுதினார். தமிழில் முதல் முதலாக ஹைக்கூ கவிதைகளைப் படைத்தவர் அப்துல் ரகுமான்.

இரவெல்லாம்

உன் நினைவுகள்

கொசுக்கள்

தமிழில் ஹைக்கூ எழுதுகிறபோது, ஜப்பானிய ஹைக்கூவின் மரபுகளை கறாராகப் பின்பற்றத் தேவையில்லை என்பது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கருத்து. 

“ஒரு மொழியின் கவிதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வியப்பல்ல. ஆனால் ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகின் பல மொழிகளிலும் புகழ் பெறுவதென்பது வியப்பானது” என்று ஹைக்கூ குறித்து கூறுகிறார் அப்துல் ரகுமான்.

இதேபோல, லிமரிக் என்ற கவிதை வகையின் தமிழ் வடிவமாக வந்தது குறும்பா. இதில் ஐந்து வரிகள் இருக்க வேண்டும். முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய மூன்று வரிகளில் ஒத்த ஓசையுடன் இயைபுத்தொடை இருக்க வேண்டும். அதேபோல மூன்றாவது, நான்காவது வரிகளும் இயைபுடன் முடிய வேண்டும். இயைபுத் தொடை என்றால் வேறொன்றுமில்லை, அடுத்தடுத்து வரும் வரிகளின் கடைசிச் சொற்கள் இயைந்து வருவது. உதாரணமாக,

வள்ளுவரும் மாணவராய் ஆனார்.

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு...

அந்தோ ஃபெயிலாச்சு…

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்

கவிக்கோ அப்துல் ரகுமான்

இது ஒரு காலத்தில் மிகப் பிரபலமான குறும்பா.

தற்காலக் கல்வி முறையின் என்னும் மிக ஆழமான பிரச்சினையை மிக எளிமையான வரிகளில் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.லிமரிக் வடிவத்தை தமிழில் பிரபலப்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டும்.

ஹைக்கூ வடிவக் கவிதையை நகைச்சுவையாக, கேலியாக எழுதினால் அது சென்ரியூ என்னும் கவிதை வகையாகும். தமிழில் ஹைக்கூ, சென்ரியூ வடிவங்களைப் பரவலாக்கியதில் ஈரோடு தமிழன்பன் ஐயாவுக்கு பெரும்பங்கு உண்டு. 

மீ. ராசேந்திரன் என்னும் கவிஞர் மீராவும் லிமரிக் எழுதி புகழ் பெற்றவர்.

யார் சொல்லிக் கொடுத்தவன்

அடி பிள்ளைக்கு

வலி வாத்தியாருக்கு

ஈரோடு தமிழன்பன் அவர்களின் சென்ரியு கவிதை இது.

மகாகவி பாரதியார்

தமிழுக்குக் கொண்டு வந்த ஹைக்கூ ஒரு

நூற்றாண்டு காலத்தைக் கடந்து

இன்றைய கவிஞர்களால் தொடர்ந்தும் எழுதப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும்.

இதில் சென்ரியு,  குக்கூ,

பழமொன்றியு, மோனைக்கூ, எதுகைக்கூ,லிமரைக்கூ விடுகவிக்கூ,மணிக்கூ,

ஹைபுன் என்று பல

வகைகள் காணப்படுகின்றன.

மூன்றே வரிகள் தான்...

சொல்லும் வாழ்க்கையின் தத்துவம் மிகப்பெரியது.

அப்படிப்பட்ட தாக்கத்தை எல்லோர் மனதிலும்

ஏற்படுத்திய சில ஹைக்கூ கவிதைகள் பின்வருமாறு:


வணக்கத்துக்கு உரியது

பறவையின் எச்சம்

வளர்கிறது வனம்

அமுதபாரதி


புகை பிடித்தால் இறப்பாய்

மது குடித்தால் இறப்பாய்

இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய் !

ஈரோடு தமிழன்பன்


சிலைக்கு வெளியே போய்வந்த

கடவுள் நிலையாய் நின்றார்

சிலையைக் காணோம்

ஈரோடு தமிழன்பன்


குடியிருப்புகள் இடித்து

எழும்‌ வணிக வளாகங்கள்

உணவுக்கு என்செயும் காகங்கள்

அமுதபாரதி


குழந்தைகளின் கூச்சல்

குடித்துவிட்டு வீடுவந்த அப்பா திண்ணையில் மௌனமாய்


மு.முருகேஷ்


துருப்பிடித்த ஆணி 

காற்றிலாடும் அம்மாவின் படம்

மிச்சமிருக்கும் ஊதுபத்தி மணம்


மு.முருகேஷ்


ஆளுக்கொரு மிட்டாய்

சண்டையில் பகிரப்படுகிறது

அம்மாவின் பங்கு


ஷர்ஜிலா பர்வின்


தீப்பெட்டி

திறந்தால்

பிஞ்சு விரல்கள்


– ஸ்ரீரசா


கடலில் வலைவீசும் மீனவன்

கரையில் மீன்கொத்தி

முதலாளி


– அவைநாயகன்


மூடிய ஆலைக்குள்

சத்தம் கேட்டது

தொழிலாளர்களின் குமுறல்


– ஜி.மாஜினி


வீசாத வலைக்குள்

சிக்குண்டுத் தவிக்கிறது …

மீனவனின் பசி


– கா.ந.கல்யாணசுந்தரம்


அரிதாரம் கலைத்ததும்

அழத் தொடங்கினான்

நகைச்சுவைக் கலைஞன்


– வதிலைப் பிரபா


பூதங்கள் ஐந்து

வேதங்கள் நான்கு

பேதங்கள் எண்ணிலடங்கா


– வலசை வீரபாண்டியன்


செடி வளர்த்தோம்

கொடி வளர்த்தோம்

மனிதநேயம் ?


– இரா.இரவி


 மிகவும் பெரியதாக, 

கனமான வார்த்தைகள் கொண்டதாக 

சாமானிய மக்கள் புரிந்து கொள்வதற்கு கடினமான விதமாக இல்லாமலிருக்கும்

மிகவும் எளிமையாக எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக

எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளை விரும்பாதவர்கள் இப்போது யாரும்

இல்லை.


ஹைக்கூ என்பது முற்றிய கரும்பு...

அதை விரும்பிச் சுவைப்போம்.

எழுதிப் பரிமாறுவோம்...


நன்றி


Dr ஜலீலா முஸம்மில் 

ஏறாவூர்

இலங்கை

0/Post a Comment/Comments