#இன்னும்_எத்தனை_நாட்கள்
இன்னும் எத்தனை நாட்கள்
கனவுகளைத் துறந்து விட்டு
கவலைகளைச் சுமந்து கொண்டு
கண்ணீருடன் வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
குட்டக்குட்ட குனிந்து கொண்டு
ஏமாளியாக கோமாளி வேஷம்
போட்டுக்கொண்டு வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
ஏகாந்தப் பெரு வெளியில்
ஏதேதோ சிந்தனையில் சிறகொடிந்த
கிள்ளை போல வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
சாதிக்கொரு சங்கம் வீதிக்குநூறு
வில்லங்கம் வைத்துக் கொண்டு
வலியோடு வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுத்து
புரிந்தும் புரியாதவர் போல்
முணுமுணுப்போடு வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
உழைப்பின் உன்னதம் உணராமல்
அன்பின் பாதையிலிருந்து அகன்று
அடிமையாக வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
தோல்விகளை மட்டும் சிந்தையிலேற்றி
வெற்றிப் பயணத்தினைத் மறந்து
சிறுபிள்ளையாக வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
விட்டுப் போன வாய்ப்பை எண்ணி
முயற்சியோ பயிற்சியோ ஏதுமின்றி
மூலையில் முடங்கி வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
அறியாமை இருளில் மூழ்கி
நல்லறிவை அடகு வைத்துவிட்டு
குற்றவுணர்வுடன் வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
பண்டைய கலாச்சாரம் மறந்து
தமிழர் பண்பாடுகளைத் துறந்து
பாவிகளாக வாழப் போகிறோம். . .
இன்னும் எத்தனை நாட்கள்
மனிதப் பிறப்பின் மாண்பினை
உணராமல் வெறும் மாக்களாக
புரியாமல் வாழப் போகிறோம். . .
சாதிவெறிக்கு சவுக்கடி கொடுக்காமல்
எவரையும் ஏமாற்றிக் கெடுக்காமல்
துரோகங்களை துண்டாடி வெல்லாமல்
எத்தர்களை கழுமரமேற்றிக் கொல்லாமல்
எந்திரத்தனமாக இப்படியே நம்மை நாமே
சமாதானப்படுத்திக் கொண்டு
எதையும் கண்டுங் காணாமல் வாழ்வது
இன்னும் எத்தனை நாட்கள்...?
தெரிந்தவர் கொஞ்சம் சொல்லுங்களேன்!!
ரேணுகா ஸ்டாலின் ✍️
பட்டிவீரன்பட்டி

Post a Comment